சுவர்ணம் பேஸ் முகாமிலிருந்து விமான அழிப்புக்குண்டுகள் மீட்பு
கிழக்கில் யுத்தம் முடிந்து நீண்ட காலமாகிவிட்டபோதிலும் கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் புலிகள் இயக்கத்தினரால் புதைத்தும், பதுக்கியும் வைக்கப்பட்டிருக்கும் யுத்த ஆயுதங்கள் கருவிகளைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகளில் கிழக்கு மாகாணப் பொலிஸ் பிரிவினருடன் இணைந்து கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அடங்கிய குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. இந்த வகையில் கிழக்கு மாகாணத்திலிருந்த புலிகள் இயக்கத்தின் முகாம்களிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் பெருமளவில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததை மேற்படி விசேட பொலிஸ் குழுவினர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கண்டுபிடித்துள்ளனர். இதன் அடிப்படையில் குறிப்பாக புலிகள் இயக்கத்தினரின் பிரதான முகாம்கள் மற்றும் இரகசிய நிலையங்களை அண்டிய பகுதிகளிலேயே விசேட தேடுதல் குழுவினர் தொடர்ந்தும் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகக் கடந்த 4 ஆம் திகதி மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் புலிகளால் நிலத்துக்கடியில் மிகப் பாதுகாப்பான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 1870 விமான அழிப்புக் குண்டுகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் விசேட பொலிஸ் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். புலிகள் இயக்கத்தின் பிரதான கிழக்குப் பிரதேச முகாம்களில் ஒன்றாகிய “சுவர்ணம் பேஸ்’ முகாம் பகுதியிலேயே மேற்படி விமான அழிப்புக் குண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இவற்றுடன் ஆர்.பி.ஜி. துப்பாக்கிகளும் துப்பாக்கிக் குண்டுகள், கைக்குண்டுகளும், மேற்படி இரகசிய புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டதாக மேலும் பொலிஸ் புலனாய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி விமான அழிப்புக்கான ஏவுகணைக் குண்டுகளும் மூன்று பிளாஸ்டிக் பரல்களில் இடப்பட்டு மிகவும் பாதுகாப்பாகக் குறித்த நிலக்குழியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் எவ்வாறாயினும் அவை புதைத்து வைக்கப்பட்டிருப்பதற்கான அடையாளங்கள் நிலத்துக்கு மேற்பகுதியில் தென்பட்டதைத் தொடர்ந்தே புதைகுழி தோண்டப்பட்டு மேற்படி பெருந்தொகையான விமான அழிப்பு ஏவுகணைக் குண்டுகளைக் கண்டுபிடிக்க முடிந்ததாகவும் விசேட பொலிஸ் குழுவின் சார்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கத்தின் பிரதான கேந்திர நிலையமாகிய வாகரைப் பிரதேசத்தில் அமைந்திருந்த மேற்படி “சுவர்ணம் பேஸ்’ பல முகாம்கள் தொடர்ச்சியாக அமைந்திருந்த பகுதியாகும். ஆயுதப்பயிற்சி, யுத்த திட்டமிடல், ஆயுதக் களஞ்சியங்கள், தலைவர்கள் தங்கும் நிலையம் எனப்படும் அனைத்து வகையிலும் கிழக்கில் ஒரு முக்கிய முகாமாக “சுவர்ணம் பேஸ்’ இருந்தது.
புலிகள் இயக்கத் தலைவர்கள் அங்கிருந்து தப்பியோடிய வேளையில் அவசர அவசரமாக மேற்படி விமானக்குண்டுகள் அடங்கிய பரல்களைப் புதைத்து வைத்திருக்கக்கூடும் எனவும் எனவேதான் மழை, காற்று காரணமாக அவை நிலத்துக்கு மேல் மேடாகத் தெரியும்படி அடையாளங் காணப்பட்டதாகவும் மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய யுத்த ஆயுதங்களாகக் கருதப்படும் இந்த விமான அழிப்புக் குண்டுகளைக் கண்டு பிடிப்பதற்குக் காரணமான விசேட தேடுதல் நடவடிக்கை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர்களாகிய பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்தனவின் அறிவுறுத்தலின்படி மேற்கொள்ளப்பட்டது. உபபொலிஸ் அதிகாரி நிசாந்த ஹெட்டியாராச்சி பீ.ஏ.எஸ்.ஐ. எதிரிசூரிய மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த விசேட தேடுதல் குழுவில் அடங்குவர். இதுபற்றிய மேலதிக விசாரணைகளும் தேடுதல் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்படி பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment