கே.பி” புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மாயையை உருவாக்க முயற்சிக்கிறார் -நிழல் அரசை உருவாக்க முடியாது
அகதிகளை வைத்துக்கொண்டு எதிர்கட்சிகளை சேர்ந்த சிங்களவரும் தமிழரும் அரசியல் செய்யப்பார்ப்பதாக குற்றம் சாட்டிய அமைச்சர் முரளீதரன்(கருணா) அவசரகாலச்சட்டம் தமிழ் மக்களுக்கு மட்டும் உரியதல்ல. அது முழுநாட்டுக்குமுரியது என்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்குத் தேவையான சகல வசதிகளும் செய்யப்படவிருக்கின்றன. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை முதலில் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகளில் வெளிவரும் தவறான தகவல்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளிலுள்ள சிங்களவர்களும் தமிழர்களும் அரசியல் செய்யப்பார்க்கின்றனர். கண்ணிவெடி, மிதிவெடிகளை அகற்றாமல் மக்களை மீளக்குடியேற்ற முடியாது. கம்போடியாவில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டு மிதிவெடி, கண்ணிவெடிகளை அகற்றாமல் மக்கள் மீளக் குடியேற அனுமதித்ததால் 6 ஆயிரம் பேர் கால்களை இழக்க வேண்டியேற்பட்டது. இந்த நிலை இங்கு ஏற்பட இடமளிக்க முடியாது.
இன்று அமைச்சர்கள் எங்கள் ஊர் வீதிகளில் சுதந்திரமாக நடமாடித்திரிகின்றனர். இதனால் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெறுகின்றன. கிழக்கிற்கு வந்த சுகாதார அமைச்சர் வரலாற்று சாதனையாக புற்றுநோய் வைத்தியசாலைக்கான அடிக்கல்லை நாட்டினார். அமைச்சர் பௌசி, அமைச்சர் திஸ்ஸ கரலியத்த உட்பட பல அமைச்சர்கள் வந்தனர். இன்னும் வரவுள்ளனர்.
வெல்லப்பட முடியாத இலக்குகளைப் பற்றியோ, இனவாதத்தைப் பற்றயோ இனிமேல் பேசிப்பயனில்லை. இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. அண்மையில் ஜனாதிபதியை சந்திக்க அவர்கள் வந்ததை நான் வரவேற்கிறேன்.
பிரபாகரன் கொல்லப்பட்ட மகிழ்ச்சியை அவர்களின் முகத்தில் காண முடிந்தது. சில தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்னிடம் வந்து பிரபாகரன் இறந்தது உண்மைதானா எனக் கேட்டனர். ஏனெனில் அவர்களுக்கு அவர் கொல்லப்பட்டிருக்காவிட்டால் பின்னடிக்கு பிரச்சினையாகிவிடுமென்ற உயிர் அச்சம் இருக்கின்றது.
அவசரகாலச் சட்டம் என்பது தமிழ் மக்களுக்கு மட்டும் உரியதல்ல. அது முழு நாட்டுக்கும் உரியது. அவசரகாலச் சட்டத்தின் கீழ்தான் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் அரசு பாதுகாப்பை வழங்குகின்றது.
கே.பி.என்பவர் வெளிநாடுகளிலுள்ள தமிழர்களிடம் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தப்பார்க்கின்றார்.
புலிகளால் நிழல் அரசாங்கமொன்றை அமைக்க முடியாது. ஏனெனில் அது அமைப்பதானால் புலிகளை ஒரு நாடு அங்கீகரிக்க வேண்டும். அதற்கு எந்த நாடும் தயாராகயில்லை.இவ்வாறான நிலையில் எப்படி நிழல் அரசு அமைக்க முடியும்?
தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட்டால் மட்டுமே எமக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ள முடியும். 15 க்கு மேற்பட்ட தமிழ்க் கட்சிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கொள்கைகளை வைத்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தமிழ் மக்கள் மத்தியில் நாம் வளர்க்க வேண்டும். அதனால்தான் நாம் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.
0 விமர்சனங்கள்:
Post a Comment