மட்டக்களப்பில் புலி உறுப்பினர்கள் கைது!
மட்டக்களப்பு மாமங்கம் மற்றும் கொக்குவில் பிரதேசங்களில் வைத்து புலிகளின் புலனாய்வு மற்றும் கடற்புலி உறுப்பினர் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 10 கிலோ எடையுடைய பாரிய அமுக்க வெடி மற்றும் ஹையேஸ் ரக வான் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பொறுப்பதிகாரி ராசா உதயங்க தெரிவித்தார்.
புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த தங்கராசா தனபாலன் (தனபால்) கடற்புலி உறுப்பினர் முத்துகுமார் அழகேஸ்வர ராஜா (ஈஸ்வரன்) ஆகியோரே கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் சார்ஜன் எஸ். றம்ஸான் தெரிவித்தார்.
மாமங்கத்தில் தனபாலன் மறைத்து வைத்திருந்த 10 கிலோ பாரிய அமுக்க வெடியை பொலிஸார் மீட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கண்டியிலுள்ள ஒருவருக்கு விற்பனை செய்திருந்த ஹையேஸ் வானும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.
கிழக்குப் பிராந்திய பிரதி பொலிஸ் அதிபர் எடிச குணதிலக்கவின் பணிப்புரையின் பேரில் தலைமை பொலிஸ் பரிசோதகர் எஸ். கிரியல்ல தலைமையிலான உயர்மட்ட பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்
0 விமர்சனங்கள்:
Post a Comment