தேர்தலில் போட்டியிடுவது ஏன்? புளொட் தலைவர்!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) த்தின் தலைவரும் முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தினக்குரலுக்கு வழங்கிய விசேட பேட்டி
தமிழர்களின் தனித்துவமான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதே எமது பிரதான அரசியல் இலக்காகும். எனினும் வேண்டத்தகாத, விரும்பத்தகாத சக்திகளின் கைகளில் வவுனியா நகரசபையின் அதிகாரம் பறிபோய்விடக்கூடாது என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) த்தின் தலைவரும் முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்கள் தொடர்பாக அவர் ஞாயிறு தினக்குரலுக்கு வழங் கிய விசேட பேட்டியில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது;
பெருந்துயரங்களுக்கும் அவலங்களுக்கும் மத்தியில் வன்னிமக்கள் தமது வாழ்விடங்களை, சொத்துகளை முழுமையாக இழந்து இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் யாழ்.மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபை என்பவற்றுக்கான தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. இது அவசியமானதொன்றெனக் கருதுகின்றீர்களா?
வடக்கு, கிழக்கு பிரதேசமெங்கும் ஜனநாய கம், பன்முகத்தன்மை என்பன பேணப்பட வேண்டும். இது அவசியமானதொன்றாகும். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களில் பெரும்பாலானவர்களின் உறவினர்கள், சொந்தங்கள் மிகப்பெருமளவிலானோர் வவுனியாவில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
வவுனியா நகரசபைக்குள் வாழும் மக்களில் பெருமளவிலானோரின் வாழ்க்கை இன்று தினமும் இடம்பெயர்ந்த முகாம்களில் வசிக்கும் தமது உறவுகளை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதிலுமே கழிந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வேண்டத்தகாத, விரும்பத் தகாத சக்திகளின் கைகளில் வவுனியா நகர சபையின் அதிகாரம் அபகரிக்கப்பட்டு போய் விடக்கூடாது என்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றோம். கடந்தகாலத்தில் வவுனியா நகரசபை எமது கட்டுப்பாட்டில் இருந்த வேளையில் நாம் முன்னெடுத்த வேலைத் திட்டங்கள் அரசியல் சுயலாபங்களுக்கு அப்பால் மக்கள் நலன்கருதிய செயற்பாடுகளை எவரும் மறந்துவிடமுடியாது. இதனை வவுனியா மக்கள் என்றும் மறந்துவிடப் போவதுமில்லையென்பதே எமது உறுதியான நம்பிக்கையாகும்.
தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதிகளால் கூட இன்றைய சூழ்நிலையில் எமது மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் யாழ்.மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபையூடாக எதனை சாதிக்க முடியுமென்று கருதுகின்றீர்கள்?
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 22 தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பாக வடக்கின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்வோர் புலிகளின் கைப்பொம்மைகளாக மாத்திரமே செயற்பட்டார்கள்.
தமது கட்சி உறுப்பினர்களின் எதிர்கால நலன்களைக்கூட மறந்து தமிழ் மக்களின் ஒரேயொரு ஏகப் பிரதிநிதிகள் புலிகளே என்ற கோஷத்தை உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் முன்னெடுத்தார்கள்.
பாராளுமன்றத்தின் ஊடாக வழங்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியினைக் கொண்டு வடக்கு, கிழக்கு தமிழ்மக்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் அவர்கள் எப்போதும் அக்கறை செலுத்தியதில்லை. புலிகளின் கொள்கைகளை முன்னெடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாக செயற்பட்டார்கள். ஏகப்பிரதிநிதித்துவம் என்ற கொள்கையை முன்னெடுப்பதிலேயே அவதானமாக இருந்தார்கள். இந்நிலையில் மக்கள் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அவர்களால் எவ்வாறு சிந்திக்க முடியும்.
ஆனால், 1994ஆம் ஆண்டு வன்னியில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் நகரசபைத் தலைவரையும் கொண்டிருந்த நாம் பாராளுமன்றத்தில் எதிரணியில் இருந்தாலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தோம்.
முன்னாள் வவுனியா நகரசபைத் தலைவர் தான் அன்று தொடர்ந்த அதே பணிகளை மீண்டும் முன்னெடுத்துச் செல்வார் என்பது எமது மக்களுக்கு நன்கு தெரியும். அந்த அடிப்படையில் புளொட் அமைப்பையும் அதன் நங்கூரம் சின்னத்தையும் அவர்கள் நிச்சயம் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
வவுனியா நகரசபை இதற்கு முந்திய காலத்தில் உங்கள் (புளொட்) கட்டுப்பாட்டிலிருந்த போது பல் வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன் னெடுத்துள்ளதாக கூறினீர்கள். அதில் உண்மையும் இருக்கிறது. எதிர்வரும் தேர்தலில் வவுனியா நகரசபையைக் கைப்பற்றினால் எவ்வாறான செயற்பாடு களை முன்னெடுப்பீர்கள்?
வவுனியா நகரசபைத் தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிடுவதன் பிரதான நோக்கம் தமிழர்களின் தனித்துவ மான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப் பதற்காகவேயாகும். இதன் மூலம் இரண்டு செதிகளை நாம் சர்வதேசத்திற்கும் உள் நாட்டிற்கும் வெளிப்படுத்துவோம்.
வன்னியிலிருந்து மிகப்பெரும் அவலங் களுக்குள் அகப்பட்டு பெரும் துயரங்களை அனுபவித்து வந்துள்ள மக்களின் மீள்குடியேற் றம், மதவாச்சி சோதனைச்சாவடி அகற்றப்பட வேண்டும், எமது வெற்றியின் மூலம் இவை வெளிப்படுத்தப்படும்.
தொடர்ந்தும் அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் கோஷங்களை முன்னெடுப்பவர்களை புறந்தள்ளி என்றும் இந்த மக்களின் நலனில் அக்கறையுள்ள எம்மை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
வவுனியா நகரசபையை மீண்டும் கைப் பற்றுவதன் மூலம் மக்களின் நம்பிக்கைக்கு விசுவாசமாக செயற்படுவோம். அதற் கான அங்கீகாரத்தை வழங்குவதற்கான நம்பிக்கையை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ்.பத்மநாபா ஆகிய மூன்று தமிழ்க் கட்சிகளும் இணைந்து ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி என்ற பெயரில் பொது இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை வென்றெடுத்தது. ஆனால், இன்று பல்வேறுபட்ட முரண்பாடுகள் தோன்றியுள்ளமைக்குக் காரணமென்ன?
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் தற்போது சில சலசலப்புகள் ஏற்பட்டாலும் கூட எதிர்காலத்தில் எமது அரசியல் வேலைத் திட்டங்களை எமது மக்களின் நலன்கருதி பொறுப்புடன் விட்டுக் கொடுப்புடன் முன்னெடுத்துச் செல்வோம். இப்போதும் கூட யாழ்.மாநகர சபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலும் வவுனியா நகரசபைத் தேர்தலில் நங்கூரம் சின்னத்திலும் பொது இணக்கப்பாட்டுடனேயே போட்டியிடுகின்றோம்.
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட் டணி தொடர்ந்தும் பொது இணக்கப் பாட்டுடனேயே செயற்படுவதாக கூறு கின்றீர்கள்? ஆனால், உங்களுடன் இணை ந்து செயற்படும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இரகசியமாக சென்று வவுனியா நகரசபை தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய முற்பட்டதன் உள் நோக்கமென்ன?
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வவுனியா கிளையில் அண்மைய காலங்களில் இணைந்துகொண்ட குறுகிய, சுயநலமிக்க அரசியல் போக்குடைய ஒருசிலரின் நிர்ப்பந்தங்களினாலேயே இந்த நிலைமையேற்பட்டது. எனினும், வேட்புமனு இறுதியில் நிராகரிக்கப்பட்டது தெரிந்த விடயமாகும்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் நீண்ட காலக் கொள்கையை ஏற்றுக்கொண்ட ஆரம்பகால உறுப்பினர்கள் எவரும் இதில் சம்பந்தப்பட்டதாக எம்மால் அறிய முடியவில்லை. மக்கள் நலன்களுக்கு அப்பால் வெறுமனே “வர்த்தக அரசியல்’ கொண்டவர்களே இதில் முன்னின்றுள்ளனர். இதைப்பற்றி நாம் அலட்டிக் கொள்ளவில்லை.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் நலன்கருதி ஏன் ஏனைய அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்படத் தயங்குவதேன்?
உங்களுடைய கேள்வி மூலம் புலிகள் தான் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைக்கு தடையாகவிருந்தவர்கள் என்று அர்த்தப்படுகின்றது. ஆனால், 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு விட்டார்கள் என்று கூறப்பட்டது. 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செ ய்யப்பட்டார்கள். அதேநேரம், புலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்ற பிரசாரம் அவர்களால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அதனை சர்வதேசமும் இலங்கை அரசும் ஏற்று புலிகளுடன் பல தடவைகள் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டது.
அன்றைய அந்தக் காலகட்டத்தில் அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் சீர்குலைவதற்கு ஒருபோதும் எமது கட்சி காரணியாக அமையவில்லை. மிகவும் அவதானமாகவே செயற்பட்டோம்.
2004இல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்கள் சமாதானம் வரப்போகின்றது என்ற நம்பிக்கையிலேயே வாக்களித்தார்கள்.
ஆனால், இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப் பினர் நிலைமை முற்றாக மாறிவிட்டது. புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து ஒரு கிழமைக்குள்ளேயே கூட்டமைப்பினர் நிலை தடுமாறிப் போயுள்ளனர்.
ஏக பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ளவில்லை யென்று கூறுபவர்கள் ஒருபுறமும் மறுபுறம் அரசுக்கு தாவும் நிலையிலுள்ளோருமே இன்று கூட்டமைப்பில் காணப்படுகின்றனர். இந்தச் சந்தர்ப்பவாத, அரசியல்வாத நிலைப்பாடுகள் முடிவுக்கு வந்த பின்னர் மக்களின் நலனில் அக்கறை கொண்ட, அதற்கான அர்ப்பணிப்பு சிந்தனை கொண்ட தலைவர்கள் மத்தியில் இணக்கப்பாடு வந்தால் அதுவே எமது மக்களின் எதிர்காலத்திற்கு பயன்தரக்கூடியதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.
0 விமர்சனங்கள்:
Post a Comment