தமிழன் இல்லா ஊருமில்லை.. அவன் தமிழீழம் அமைக்காத நாடுமில்லை.. ஈழத்தில் மட்டும் தமிழீழம் இல்லை..!!
தமிழன் இல்லாத நாடில்லை தமிழனுக்கொன்றோர் நாடில்லையா?
வெகுண்டெழுந்தார் எம் தலைவர்.
இதோ வருது “தமிழீழம்” இந்த பொங்கலுக்கு
இல்லையென்றால் அடுத்த புதுவருடத்திற்க்கு
பூரித்து போன புலம் பெயர்ந்ததுகள்
புத்தாடை உடுத்து காத்திருக்க …
பாதியில சொல்லாமலேயே தலைவரும் பரலோகம் போய்விட
இன்று அந்த பாரிய பொறுப்பு புலம் பெயர்ந்த தமிழர்கள் வசம்
யுத்தம் செய்து ரத்தம் சிந்தி ஒரு தமிழீழம்
இனி ஈழத்தில் சரிவராது
ஆதனால் நாடு கடந்த தமிழீழமே நமக்குள்ள ஒரே வழி
அதுவும் யுத்தமின்றி ரத்தமின்றி கிடைக்கபோகும் தமிழீழம் என்பதால்
ஒன்றுக்கு பத்தாய் எடுத்து விட்டால் என்ன
பிறந்தது பார் தரணியெங்கும் தமிழீழங்கள்
தலைவனுக்கு எங்கள் சமர்ப்பணங்கள்.
“கனடா தமிழீழம்” “பிரான்ஸ் தமிழீழம்”
“பிரித்தானியா தமிழீழம்” “யேர்மன் தமிழீழம்” இப்படி பல தமிழீழங்கள்
நாட்டுக்கொன்றாய் அமைக்க…
இனி தமிழன் இல்லா ஊருமில்லை
அவன் தமிழீழம் அமைக்காத நாடுமில்லை.
ஈழத்தில் மட்டும் தமிழீழம் இல்லை
ஏனென்றால் அங்கே தமிழனே இல்லை.
பூநகரி பாதைக்காகவும் ஏ9 வீதிக்காகவும்
ஆமிக்கு அரோகரா போட்ட வடக்கு துரோகிகளுக்கும்
தலைவனை நட்டாற்றில் விட்டுவிட்டு
தலைதெறிக்க ஓடிவந்த வன்னி துரோகிகளுக்கும்
கடைந்தெடுத்த புறம்போக்கு பிள்ளையானுக்கு
ஓட்டு போட்டு ஒட்டி வாழும் கிழக்கு துரோகிகளுக்கும்
ஆண்டாண்டு காலம் சிங்களவனை சுரண்டியும் கால்பிடித்தும்
வாழ்க்கையை ஓட்டி பிழைக்கும் கொழும்பு துரோகிகளுக்கும்
ஈழத்தில் மட்டும் “துரோகஈழம்” சமைக்கட்டும்
இனி புலம் பெயர்ந்து புலன்பெயர்ந்தவர்கள் தான் தமிழர்கள்
அவர்களுக்கு மட்டுமே தமிழீழத்தில் சகல உரிமையையும்
நாடு கடந்த தமிழீழம் நலமுடன் வாழ
நற்கொடைகளை அள்ளித்தரும் அந்த புண்ணிய பொறுப்பு
புலன் பெயர்ந்த தமிழர்களுக்கே கிடைத்த பாக்கியம்
வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை
புலன் பெய்ர்ந்த தமிழர்களின் வர்த்தக நிலையங்களுக்கு
மட்டுமே உரித்தான உரிமை.
ஜி.எஸ்.ரி பி.எஸ்.ரியுடன் ரி.எஸ்.ரி(தமிழீழம் விற்பனை வரி)
செலுத்தும் நற்காரியமும் இவர்களுக்கே.
இனி கோஸ்டி சண்டைகளில் உயிர் விடுபவர்கள்
மாவீரர்கள் ஆவார்கள்
மற்றவர்களின் மரணங்களை பொறுத்து
நாட்டுப்பற்றாளர் ஊர்பற்றாளர் வீட்டுப்பற்றாளர்
போன்ற பட்டங்கள் வழங்கபடும்.
புலம் பெயர்ந்து புலன் பெயர்ந்த
உலகெங்கும் வாழும் தமிழீழமக்களே
நீங்கள் மட்டும்தான்
உலகளாவிய ரீதியில் அமையும்
அனைத்து தமிழீழங்களின் அசல் வித்துக்கள்
என்ன சந்தோசம் தானே?
இன்னும் என்ன தாமதம் புறப்படுங்கள்
உங்கள் ஒருவேலை வீட்டிற்க்கு
உங்கள மறுவேலை நாடுகடந்த தமிழீழ மண்ணிற்க்கு
சும்மா சொல்லக்கூடாது
நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்
பங்களிப்பில்
களிப்படைய பழகிக்கொள்ளுங்கள்
–பாலமோகன்
0 விமர்சனங்கள்:
Post a Comment