சுயபால் உறவுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ள இந்திய நீதிமன்றம்
இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல, குட்டி உலகமும் கூட என்பார்கள். இது எத்தனையோ கலாசாரங்கள், மதங்கள், மொழிகள், நம்பிக்கைகள் கொண்ட மக்கள் வாழும் ஒரு பெரும் நிலப்பரப்பு. ஒரு மாநிலத்தை விட்டு இன்னொரு மாநிலத்துக்குச் சென்றால் புதிய நாட்டுக்குச் சொன்ற மாதிரி உணர்வீர்கள். எல்லாம் தலைகீழாக மாறிவிடும். இந்தியாவின் கருத்துச் சுதந்திரம், ஊடாகச் சுதந்திரம், எதிரும் புதிருமான கொள்கைகள்- இவை சில சமயம் மலைப்பை ஏற்படுத்தி விடுவதுண்டு. கதம்பம் போன்ற ஒரு நாட்டை எப்படி கட்டிக் காத்து ஆள்கிறார்கள்? என்ற வியப்பும் ஏற்படும். இப்படி ஒரு சுதந்திரத்தை சீனாவுக்குக் கொடுத்தால் அது துண்டு துண்டாக சிதறிவிடும் என்பதால் அந்நாட்டு ஆட்சியாளர்கள் அது பற்றி நினைக்கவே பயப்படுகின்றார்கள். ஆனால் இந்தியாவோ பிரச்சினை, பயம் இல்லாமல் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு வெற்றிகரமான புதிர்தான்!
கடந்த இரண்டாம் திகதி வியாழக்கிழமை டெல்லி மேல் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பைக் கேட்ட போது தான் இந்த நாட்டில் காணப்படும் சுதந்திரம், நீதித்துறை சுதந்திரம் எவ்வாறானது என்பதை மட்டுமன்றி, ஒரு வித்தியாசமான நாடுதான் என்பதை அது மற்றுமொரு தடவையும் நிரூபித்திருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
சுயபால் சேர்க்கையாளர்கள் அவ்வாறு இணைவது தண்டனைக்குரிய குற்றம் என்று இந்தியாவின் குற்றவியல் சட்டக் கோவையில் 377ம் பிரிவு குறிப்பிடுகிறது. பிடிபட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம் செலுத்துவது முதல் பத்து வருட கால சிறைத் தண்டனை வரை தண்டனை வழங்கப்பட முடியும். அதாவது சுயபால் சேர்க்கை என்பது இந்தியாவில் தடைசெய்யப்பட்ட ஒன்று. இது ஆங்கிலேயர் காலம் முதல் நடைமுறையில் உள்ள சட்டம்.
சுயபால் உறவு தண்டனைக்குரிய குற்றம் என்று விதிக்கப்பட்டிருப்பது மனித உரிமை மீறல் என்றும் எனவே இந்தப் பிரிவு செல்லும்படியற்றதாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் நாஸ் பவுண்டேஷன்’ என்ற அரச சார்பற்ற ஒரு அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லி மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத அமைப்புகள் மனுவை எதிர்த்து வாதாடின.
ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் பாலியல் உறவு கொள்வதும் தம்பதிகளைப் போல வாழ்வதும் இயற்கைக்கு மாறானது என்றும் மதங்களினால் தடை செய்யப்பட்டுள்ள விஷயம் என்றும் பிரதிவாதித் தரப்பு சுட்டிக்காட்டியதோடு இச்சட்டப் பிரிவு நீக்கப்படுமானால் அது ஒழுக்கக்கேடு அதிகரிக்கவும் எச்.ஐ.வி. தொற்று மென்மேலும் பெருகிப் பரவவுமே வலிகோலும் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இது ஒரு சீரழிவு, இது ஒரு நோய். நோய் குணப்படுத்தப்பட வேண்டுமே தவிர அதற்கு அங்கீகாரம் அளிக்கப்படக்கூடாது என்றும் பிரதிவாதி தரப்பு கேட்டுக் கொண்டது.
இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிமன்றம், கடந்த விழானன்று அளித்தத் தீர்ப்பில், சுயபால் உறவில் ஈடுபடுபவர்களை தண்டனைக்குரியவர்களாகக் கருதுவது அடிப்படை மனித உரிமை மீறல் என்பதை ஒப்புக் கொண்டதோடு இதைத் தண்டனைக்குரியதாக்கும் அந்த 377வது சட்டப் பிரிவை நீக்கிவிட வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு இந்திய கலாசார கட்டமைப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
‘அடப்பாவி! ரொம்ப அசிங்கமான தீர்ப்பாக இருக்குதே! காலங்காலமாக ஒழுக்கத்தை காப்பாத்தி வந்த ஒரு சட்டத்தை நீக்கி எப்படி வேண்டுமானாலும் ஆடுங்க என்று சொல்லிடறதா?’ என்ற ஒரு கேள்வி பரவலாக இந்தியாவில் சாதாரண மக்கள் மத்தியிலும், பாரம்பரிய நம்பிக்கைகளின் மீது கேள்வி எழுப்பக்கூடாது என்று நம்புகிறவர்களிடையேயும் எழுந்திருக்கிறது.
இதேசமயம் படித்தவர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், சீர்த்திருத்தம் தேவை எனக் கருதுபவர்கள், மாற்று சிந்தனையாளர்கள் மற்றும் தலித் அமைப்பினர் இது வரவேற்கத்தக் கதும் காலத்தின் தேவை என்றும் கருதுகிறார்கள்.
சுயபால் உறவு என்பது ஒரு விபத்து, ஒரு பிறள்வு; ஒரு நோய் என்றே எதிர்ப்பாளர்கள் கருதுகிறார்கள். ஆணும் பெண்ணும் உறவு கொள்வதுதான் இயற்கை. அதன் மூலமே இனப்பெருக்கம் நடைபெற முடியும். இந்த இனப்பெருக்கம் இயல்பாகவும் அமைதியாகவும் நடைபெற்றுச் செல்ல வேண்டும் என்பதனால் தான் பெண் மென்மையும், கவர்ச்சியும், குடும்பத்தை நடத்திச் செல்வதில் ஈடுபாடும் கொண்டவளாகவும் ஆண் முரட்டு சுபாவமும் தலைமை தாங்கும், காவலிருக்கும் பண்புகளைக் கொண்டவனாகவும் விளங்குகிறார்கள். இக்கட்டமைப்பை மீறி ஆண் ஆண் மீதும் பெண் பெண்மீதும் காமுறுவதும், இயற்கைக்கு மாறான பாலுறவில் ஈடுபடுவதும் சமூக வளர்ச்சிக்கு உதவும் செயலாக இருக்க முடியாது. இதன் வளர்ச்சி சமூக சிரழிவுக்கே வழிவகுக்கும். ஒரு சீரழிவை இயல்பு என்றும் விருத்தியைத் தரக்கூடியது என்றும் கருதுவது தவறானது என்பது இவர்கள் வாதம்.
இந்தியாவை பழமைவாதப் பண்புகளைப் பேணும் நாடு என்பார்கள். இவ்வாறான ஒரு நாட்டிலேயே சுயபால் உறவுக்கு சட்ட அனுமதியா? என்ற வியப்பு தெரிவிக்கப்படுவதில் ஆச்சரியம் இருக்க முடியாது தான். ஆனால் இந்தியா வேகமாக மாறி வருகிறது. திறந்த பொருளாதார யுகம் அவர்களின் சிந்தனை சுதந்திரத்துக்கும் தாராள இடம் அளித்துவருகிறது. இப்படியே தான் இருக்க வேண்டுமா? ஏன், இப்படி இருந்தால் என்ன? என்று பலரும் அங்கே சிந்திக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.
சுயபால் உறவு வைத்துக் கொள்வது குற்றம் அல்ல. அடிப்படை உரிமை என்ற அளவில் ஒருவர் சுயபால் உறவு வைத்துக் கொள்வது தனி மனித சுதந்திரத்துக்கு உட்பட்டதே. இருவரும் விருப்பத்தின் பேரில் உறவு வைத்துக் கொண்டால் அதில் தவறு இல்லை என்ற விளக்கத்தை இந்நீதிமன்றத் தீர்ப்பு தந்திருப்பதால் இந்தியாவெங்கும் உள்ள பல இலட்சக் கணக்கான சுயபால் உறவில் ஈடுபடுவோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
இவ்வளவு காலமாக சட்டம் இவர்களுக்கு எதிராக இருந்த போதிலும் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டார்கள் என்பது கேள்விக்குறிதான். ஆனால் இந்திய பொலிஸார் இச்சட்டத்தைப் பயன்படுத்தி அல்லது துஷ்பிரயோகம் செய்து சுயபால் உறவுக்காரர்களை மிரட்டியும் தமக்கு சாதகமாகவும் பயன்படுத்தியும் வந்தார்களாம். இனி பொலிஸ் தொல்லை தீர்ந்தது என இவர்கள் சந்தோஷப்பட்டாலும், இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப் போவதாக மத அமைப்புகள் தெரிவித்துள்ளன. பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷி, இத்தீர்ப்பை எதிர்த்துள்ளதோடு இது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் என்று கூறி இருக்கிறார். இந்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, தனது அமைச்சரவை சகாக்களுடன் மற்றும் சட்ட அமைச்சு அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவர் இத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வாரா என்று தெரியவில்லை. அமைச்சரவையில் கூட இத்தீர்ப்புக்கு ஆதரவான கருத்துக்களைக் கொண்டவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அனேகமாக அரசாங்கமே முன்வந்து எதிர்ப்பு காட்டாமல் ஒதுங்கி நிற்கும் என்றும் அதேசமயம் மேன்முறையீடுகளை விசாரித்த பின்னர் வரக் கூடிய தீர்ப்புக்கு இணங்கிச் செல்லும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
பிரிட்டன் உட்பட சில ஐரோப்பிய நாடுகள் ஒரு பால் உறவை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளன என்பதோடு இவர்களின் திருமணமும் சட்ட அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
ஆனால் இந்தியாவில் நிகழ்ந்திருப்பது எல்லாம், நிதிமன்றத்தின் தண்டனைக்குரிய குற்றம் அல்ல என்ற வியாக்கியானம் மட்டுமே. இந்தத் தீர்ப்பு உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட வேண்டும். பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்தின் பின்னர் குறிப்பிட்ட சட்டப் பிரிவு நீக்கப்பட வேண்டும். அப்படியே நீக்கப்பட்டாலும் இந்திய மக்கள் தமது பழைமையான, பாரம் பரிய நம்பிக்கைகளை சட்டென போக்கிக் கொண்டு சுயபால் உறவை அங்கீகரிப்பார்கள் என்று சொல்ல முடியாது.
எத்தனையோ ஆண்டு போராட்டங்களின் பின்னரும் சாதிபாகுபாடு அந்நாட்டில் இருக்கத்தான் செய்கிறது. விபசாரிகளை எள்ளி நகையாடுவதும் கேவலமாகக் கருதுவதும் தொடரத்தான் செய்கிறது. அரவாணிகளை கேலி செய்து சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதும் நடக்கத்தான் செய்கிறது.
எனவே அந்த வரிசையில் சுயபால் உறவுக்காரர்கள் மீதான பார்வையும், சமூக மரியாதையும் இத்தீர்ப்பின் பின்னரும் தொடரத்தான் செய்யும். இந்திய சமூகத்தின் பார்வையில் உண்மையான மாற்றம் வருவதற்கு இன்னும் பல காலம் பிடிக்கலாம்.
சுயபால் உறவுக்காரர்கள் இது எமது உரிமை மட்டுமல்ல, இது நோயும் அல்ல என்கிறார்கள். இது பிறப்பு, பிறப்பிலேயே, இயல்பாகவே நாம் எதிர்பால் மீது ஈர்ப்புக் கொள்வதில்லை. சாதாரண ஒரு ஆண் மற்றொரு ஆணுடன் எப்படி இயல்பாகப் பழகுகின்றானோ அப்படியே சுயபால் விருப்பு கொண்ட ஒரு ஆண் எதிர்ப்பால் பெண்ணுடன் இனக்கவர்ச்சி உணர்வின்றியே பழகுகிறாள். எனினும் ஒரு ஆணை அவள் இனக் கவர்ச்சியுடனேயே எதிர்கொள்கிறாள். காமுறுகின்றான். பல பெற்றோர் இத்தன்மை திருமணத்திற்கு பின்னர் மாறிவிடும் என்று கருதுகிறார்கள். ஆனால் அது அப்படி மாறுவதில்லை. ஏனெனில் இக் கவர்ச்சி இயல்பானது. வேண்டுமென்றே செய்யப்படுவதல்ல. எனவே சுயபால் உறவில் மட்டும் நாட்டம் கொண்டவர்களுக்கு பலாத்காரமாக திருமணம் செய்து வைப்பதும், குடும்பத்தில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் ஒதுக்கி வைப்பதும், மின் அதிர்ச்சி வைத்தியத்துக்கு உள்ளாக்குவதும், பைத்தியமாகக் கருதி எள்ளி நகையாடுவதும் எப்படி மனித உரிமை மீறல் இல்லை என்று சொல்ல முடியும்? என்று கேட்கிறார்கள் சுயபால் உறவில் நாட்டம் கொண்டவர்கள்.
இந்திய காலசாரமும் இந்து சமயமும் அரவாணிகளை அங்கீகரித்திருந்தாலும் சுயபால் விருப்பம் கொண்டவர்களை அங்கீகரிக்கவில்லை. அதேசமயம் இவர்கள் மீது பெருமளவில் விசனம் தெரிவிக்கவும் இல்லை. இந்திய கலாசாரத்தின் மெளன அங்கீகாரம் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். எனினும் கிறிஸ்தவமும் இஸ்லாமும் சுயபால் உறவை பெருங்குரலெத்துக் கண்டிக்கின்றன.
பைபிளின் பழைய ஏற்பாட்டில் சொடோம் மற்றும் கோமோரா என இரண்டு நகரங்களில் சுயபால் உறவுக்காரர்கள் வாழ்ந்ததாகவும் இவ்வழக்கத்தைக் கைவிட்டுவிடுமாறு கடவுள் அவர்களை எச்சரித்தும் கேட்காததால் இந்நகரங்கள் மீது இறைவன் நெருப்பு மழை பெய்வித்து அழித்து விடுவதாகவும் ஒரு குறிப்பு வருகிறது. இஸ்ரேலில் இந்த நகரம் உள்ளது. ஆசனவாய் உறவைக் குறிக்கும் ஷிoனீaசீyஎன்ற ஆங்கிலப் பதத்தின் வேர்ச்சொல்ஷிoனீaசீy என்ற இந்த நகரத்தில் இருந்தே ஒருவாக்கியுள்ளது. மிகப் பண்டைய காலத்தில் இருந்தே மனிதனுக்கு சுயபால் உறவில் நாட்டம் இருந்து வந்திருக்கிறது.
பண்டைய கிரேக்கத்தில் இது சர்வசாதாரணமாக வழக்கில் இருந்திருக்கிறது. ஆசான்கள் தமது சிஷ்யர்களை தெரிவு செய்து அவர்களை அங்கீகரிப்பது சுயபால் உறவின் வழியாகத்தான்.
இந்த இந்தியத் தீர்ப்பு இலங்கை வாழ் சுயபால் உறவுக்காரர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 355 ஏ பிரிவில் இது தண்டனைக்குரிய குற்றம். நாமும் ஏன் இலங்கை உயர் நீதிமன்றத்தில் இச்சட்டப் பிரிவை நீக்கும்படி கோரி வழக்குத் தாக்கல் செய்யக்கூடாது என்ற எண்ணம் இலங்கை சுயபால் உறவுக்காரர் அமைப்பினர் மத்தியில் நீண்டகாலமாக இருந்து வந்திருக்கின்ற போதிலும் அப்படிச் செய்யத் துணியவில்லை. இனிமேல் துணியலாம் அப்படிச் செய்தால் நீதிமன்றமும் இவர்களுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கவும் முடியும். எனினும் பிரச்சினை நீதிமன்றத்துக்கு வெளியே தான் கம்புதடிகளுடன் நின்று கொண்டிருக்கிறது. ஏனெனில் இலங்கையில் யதார்த்தமும் களநிலையும் முற்றிலும் வேறு!
-அருள் சத்தியநாதன்
0 விமர்சனங்கள்:
Post a Comment