புலிகள் பணம்?-கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்களுக்கு விடுதலைப் புலிகள் பணம் கொடுத்ததாக இலங்கை அமைச்சர் கூறுவது சுத்த அபத்தமானது. அப்படிப்பட்ட நிலையில் ரஜினிகாந்த்தும் இல்லை, தமிழ் சினிமாவும் இல்லை என்று தமிழ்த் திரையுலக முக்கியஸ்தர்கள் ஒரே குரலில் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் இயற்கைப் பேரிடர் துறை அமைச்சர் அப்துல் ரிஷாத் பதியுதீன் அளித்த ஒரு பேட்டியில், ரஜினிகாந்த் நடித்த படங்களுக்கு லண்டனைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் மூலம் புலிகள் நிதியுதவி செய்தனர். அந்த லண்டன் தமிழர் தமிழ் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவர் புலிகள் கொடுக்கும் பணத்தை வைத்துத்தான் படத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார் என்று கூறியிருந்தார்.
ஆனால் இதை திரையுலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பதியுதீனின் பேச்சை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரஜினி படத்தை தயாரிக்க விடுதலைப் புலிகள் பணத்தைப் பெற வேண்டிய அவசியம் இங்கு யாருக்கும் இல்லை. இப்படிப்பட்ட வழியில் படத்தில் நடித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் ரஜினியும் இல்லை.
அவரை வைத்துப் படம் எடுக்க எத்தனையோ தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ரஜினி விடுதலைப் புலிகளின் பணத்தைப் பெற்றார் என்று கூறுவது அபத்தமானது, மலிவான விளம்பரமே தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார்.
இயக்குநர் அமீர் கூறுகையில், விடுதலைப் புலிகளின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தி்ல இவ்வாறு பேசியுள்ளார் இலங்கை அமைச்சர். எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசியுள்ளார். விடுதலைப் புலிகளை மோசமான முறையில் சித்தரிக்கும் செயல் இது.
முன்பு பங்குச் சந்தை மோசடிப் பேர்வழியான ஹர்ஷத் மேத்தா, முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு லஞ்சம் கொடுத்தேன என்று கூறியதைப் போல உள்ளது இலங்கை அமைச்சரின் பேச்சு. இப்படிக் கூறுவதன் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்றார்.
கருத்து தெரிவிக்க ரஜினி மறுப்பு...
இதற்கிடையே, இலங்கை அமைச்சரின் பேச்சுக்கு பதிலோ, விளக்கமோ அளிப்பதில்லை என்று ரஜினிகாந்த் முடிவெடுத்துள்ளார். இதை அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment