நாம் இன்னும் ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருப்போமாக இருந்தால், அழிவதும், அவலத்திற்குள்ளாவதும் நாமே..!!
இங்கு நான் எழுத வந்திருப்பது வெற்றிக் கொண்டாட்டத்திற்காகவோ, வெறும் கொந்தளிப்பிற்காகவோ அல்ல. மாறாக இன்றைய இலங்கைத் தமிழர்களின் நிலையைச் சற்று தெரிவிப்பதற்காகவே… அதை நீங்கள் புரிந்து செல்வதற்காகவே.. பல்வேறு இனக்குழுக்களைக் கொண்டிருக்கும் அழகிய எங்கள் இலங்கை நாடு இத்தனை நாட்களும் பாரிய அழிவுகளை எதிர்கொண்டிருந்தது. ஆனால் தற்போது அந்த அழிவுகளுக்கு ஒரு முடிவு ஏற்பட்ட யுத்தம் முடிவுற்றிருக்கின்றது. அந்த ஆயுதப் போராட்டம் தொடர்ந்து இன்றும் நிலை கொண்டிருக்குமாக இருந்தால், அது இன்னுமின்னும் எமது தமிழ் மக்களையே பெரிதும் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆதலால் நடந்து முடிந்த அழிவு யுத்தத்திற்கு முற்றுப்புள்ளியாகவும், இனி நடக்கவிருக்கின்ற ஆரோக்கியமான சிந்தனைகளுக்கு ஆரம்பமாகவுமே நான் இங்கு மனம் திறந்து எழுத விரும்புகின்றேன்..
இன்று எமது பெரும்பாலான இலங்கைத் தமிழர்களின் முகங்களில் மகிழ்ச்சிக் கீற்றுக்கள் பளிச்சிடுவதாக தெரிய வருகின்றது. அவர்களது மனங்களில் நிம்மதி நிலை உணரப்படுவதாகவும் அறியக் கிடைக்கிறது. இவற்றால் நாளைய பொழுதுகள் நல்லதாகவே விடியும் என்ற நம்பிக்கைகள் அவர்களுக்கு உண்டாகியிருக்கின்றது. அதுதான் அவர்களது எதிர்பார்ப்பு… அதுதான் அவர்களது விருப்பம்… ஆயினும் தடுப்புமுகாமில் உள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றுவதன் மூலமே இது நிரந்தரமாகும்!
ஒரு காலம் இருந்தது. தமிழர்களுக்கான ஆயுதப்போராட்டம் என்பது நீதியின் பக்கமாக நின்று வழிநடத்திச் செல்லப்பட வேண்டும் என்ற வரலாற்று நிர்ப்பந்தம் இருந்தது. அப்போது நாமும் நீதியின் பக்கம் நின்று ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வழிநடத்திச் சென்றோம். ஆனாலும், அந்த ஆயுதப் போராட்டம் திசைமாறிச் செல்வதை உணர்ந்தோம். ஆயுதப் போராட்டம் என்பது செல்ல வேண்டிய பாதையை விட்டு தடம்புரண்டு தவறான பாதையை நோக்கிச் சென்றது.
எந்த மக்களுக்காக போராடுவதற்காக புலித் தலைமைகள் கூறினார்களோ, அதே சொந்த மக்களையும், அவர்களுக்காகவே போராடப் புறப்பட்ட ஏனைய போராளிகளையும் கொன்று குவிக்கின்ற கோடரிக்காம்புகளாக புலிகளின் தலைமை செயற்படத் துவங்கியது. தங்கள் இனத்தினரை தாங்களே கொல்லுகின்ற செயலை புலித்தலைமை செய்து இன்பம் கண்டது. புலித்தலைமையின் ஏவலால் இலங்கை நாட்டில் எல்லா இன மக்கள் மீதும் படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது. அப்பாவி மக்களையெல்லாம் தெருவெங்கும் கொன்று போட்டனர் புலிகள். இதனால் விடுதலைப் போராட்டமாக இருந்த தமிழர் போராட்டம், பயங்கரவாதப் போராட்டமாக விஸ்வரூபம் எடுத்தது.
விடுதலைப் போராட்டங்கள் ஒரு இலக்கைக் கொண்டிருக்க வேண்டும். அந்த இலக்கை பெற்றுக் கொள்வதற்காகவோ, அல்லது வேறு ஏதாவது பயன்களைப் பெற்றுக் கொள்வதற்காகவோ நடக்கின்ற எந்தப் போராட்டத்தையும் யாரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அதற்காக சொந்த இனத்தின் குருதியை குடிக்கவும், காலகாலமாக ஒன்றாக வாழ்ந்த மக்களைச் சிதைக்கவும், அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கவுமே இவ்வாயுதப் போராட்டம் புலித்தலைமையினால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதனால் தமிழர்களையே சர்வதேச சமூகம் பயங்கரவாதிகளாகப் பார்க்கின்ற பயங்கர நிலைமையை புலிகள் தமிழர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இழப்புகள் இல்லாமல் போராட்டம் இருக்க முடியாது என்று கூறிவந்த புலித்தலைமை இதுவரைகால இழப்புகளில் இருந்து எந்த முன்னேற்றத்தை பெற்றார்கள், தமிழர்களுக்கு என்ன முன்னேற்றத்தைத் தான் பெற்றுக் கொடுத்தார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் விடை பூச்சியமாகத் தான் இருக்கின்றது.
ஆயுதப் போராட்ட காலங்களின் இடையிலே தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நல்ல பல வாய்ப்புகளை புலிகள் புறக்கணித்தனர். பாரிய அழிவுகளிலிருந்து எம்மக்களையும், மண்ணையும் மீட்டெடுத்து அமைதிப் பூங்காவில் உரிமை பெற்ற சுதந்திரப் பிரஜைகளாக தமிழர்கள் வாழ்வதற்குரிய எத்தனையோ சந்தர்ப்பங்கள் கைகூடியிருந்தன. ஆனால், அவைகளைக் கூட புலித்தலைமை தட்டிக்கழித்தது. இழப்புகள் இல்லாமல் போராட்டமில்லை.. இழப்புகள் இல்லாமல் போராட்டமில்லை என்று கூறிக்கூறியே தமிழர்களை இன்றைய அவல நிலைமைகளுக்குள் கொண்டு வந்து தள்ளிவிட்ட பெருமை புலிகளையும், புலித்தலைமையையும் தான் சாரும்.
ஆதலினால் தான், இந்த பாரிய யுத்தத்தின் முடிவை நாங்கள் வரவேற்க வேண்டியதாயிற்று. கடைசித் தருணங்களில் அரசியல் ரீதியாகத் தீர்வுகாண்போம், பேச்சுவார்த்தை ரீதியாகத் தீர்வுகாண்போம் என்று புலிகள் கூறியதைத்தான் நாங்கள் எப்போதிருந்தோ கூறிக் கொண்டிருக்கிறோம். ஆயுதப் போராட்டம் தமிழர்களுக்கு செய்யாத எத்தனையோ நல்ல விடயங்கள் அரசியல் போராட்டத்தினால் செய்யப்பட்டன.
ஆக, உலகமே அரசியலையும், ஜனநாயகத்தையும் வரவேற்று பயங்கரவாதத்தை வேரறுக்கத் துடித்துக் கொண்டிருக்கும் இந்நாட்களில், நாம் இன்னும் ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருப்போமாக இருந்தால், அழிவதும், அவலத்திற்குள்ளாவதும் நாமும், எம் சந்ததிகளுமாகத்தான் இருக்கும். ஆதலால், இந்த யுத்த முடிவு வரவேற்கத்தக்கதே.
இனிமேல் எஞ்சியிருப்பது தமிழ் அரசியல் தலைமைகளின் ஒற்றுமையும், தமிழ் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்பும் தான். அவை நன்றாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அறிகின்றோம். தமிழர்களின் எதிர்காலம் இனி நல்ல அரசியலின் கையிலே தவழ்ந்து கிடப்பதால், நாம் ஆயுதப் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசியல் ரீதியான வெற்றிக்கு விதை போடுவமாக, அதற்கு விதைகளாகவும் ஆகுவோமாக..
உமாதாசன் -சுவிஸ்






0 விமர்சனங்கள்:
Post a Comment