இன்னும் சில வருடங்களின் பின்னரே வன்னியில் மீள்முடியமர்வு சாத்தியம்இந்திய இராணுவ நிபுணர்கள் கருத்து
இலங்கையில் இறுதியாக போர் நடைபெற்ற வன்னிப் பிரதேசம் உட்பட வடக்கு கிழக்குப் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு இன்னும் ஓரிரு வருடங் களாவது செல்லும் என்று, கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடுவதற்காக இங்கு வந்துள்ள இந்திய இராணுவ நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறு கண்ணிவெடி அகற்றப்பட்டு ஒரு வருடத்தின் பின்னரே அந்தப் பகுதிகளில் மீள்குடி யேற்றம் சாத்தியப்படும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, இங்குள்ள கள நிலை வரத்தின்படி, கண்ணிவெடிகள் அகற்றி முடிக்கப்பட்டு, மக்கள் மீள் குடியேற்றப்படுவதற்கு இன்னும் சில வருடங்கள் எடுக்கும் என்றும் அவர்கள் கருத்துக் கூறுகின்றனர்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக 80 பேர் கொண்ட புதிய நிபுணர் குழு ஒன்று இந்தியாவிலிருந்து புறப்பட்டுள்ளது. ஏற்கனவே நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிக்காக இலங்கைக்கு வந்திருக்கும் இந்திய நிபுணர்களுடன் இணைந்து இவர்கள் பணியாற்றுவார்கள். இந்த 80 பேரும் முன்னாள் இராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 80 பேர் கொண்ட குழுவில் இந்தியாவின் முன்னாள் மேஜர் ஜெனரல்கள் இருவர் தலைமைப் பொறுப்புகளில் உள்ளனர். அவர்கள் இருவரும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு கண்ணிவெடி அகற்ற வருகின்றமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துக் கூறினர். அவர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை வருமாறு:
இலங்கையின் வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகளை ஓரளவுக்கேனும் அகற்றி முடிப்பதற்கு இன்னமும் ஓரிரு வருடங்கள் எடுக்கும். அதற்குப் பின்பும் மேலும் ஒரு வருடத்துக்குப் பின்னரே மக்கள் கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட இடங்களில் மீளக் குடியேறலாம் என்று கூறக்கூடியதாகவே கள நிலை உள்ளது.
உலகிலேயே நிலக்கண்ணி வெடிகள் மிக அதிகளவில் புதைக்கப்பட்டிருக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். கடந்த 25 வருட கால யுத்தத்தின்போது வடக்கிலும், கிழக்கிலும் பரவலாகப் பல இடங்களில் நிலக்கண்ணி வெடிகள் புலிகளாலும், அரச படைகளாலும் புதைக்கப்பட்டுள்ளன. எனவே, இக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் இலகுவானவையாக அமையா. எங்களின் பணி மிகவும் மெதுவாக நடப்பது போலத்தான் வெளியுலகத்துக்குத் தோன்றலாம். ஆனால் அது யதார்த்தத்தில் உண்மையாக இராது. ஏனெனில், நாம் மிகவும் கவனமாக நிலத்தின் ஒவ்வொரு அங்குலம் அங்குலமாகத்தான் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுப்போம் என்றனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment