ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு
மரியாதைக்குரிய உங்களுக்கு வணக்கம்!.....
நல்லிரவு வேளை… ஊர் உலகம் எல்லாம் தூக்கத்தில் இருக்க வேண்டிய நேரம் அது… ஆனாலும் தமிழ் உலகம் அன்றைய தினம் தூக்கத்திற்கு சென்றிருக்கவில்லை.
அன்றைய தினம் நடந்து முடிந்த தேர்தல் நடந்திருக்கவே தேவையில்லை என்று சிலர் கருதியிருக்லாம். நடக்கத்தான் வேண்டும் என்றும் பலர் கருதியிருக்கலாம். ஆனாலும் விரும்பியவர்கள், விரும்ப மறுத்தவர்கள் என்று எல்லா தரப்பினருமே நித்திரைக்கு செல்லாமல் விழித்திருந்தார்கள்….. ஆம்…. தேர்தல் முடிவுகளுக்காக….
ஏட்டாம் திகதி நல்லிரவு…… தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்தன…. நாங்களும் விழித்திருந்தோம். யாழ் மாநகரசபையில் நீங்கள் வெற்றி பெற்ற செய்தியும், வுவுனியா நகரசபையில் நீங்கள் தோல்வி அடைந்த செய்தியும் சற்று முன் பின்னாக வெளி வந்திருந்தன.
தேர்தல் முடிவுகள் பலருக்கும் பல வகையில் அதிர்ச்சியை தந்திருந்தன. உங்களது வெற்றிக்காக வாழ்த்து சொல்ல வேண்டும் என்று என் மனம் துடித்தது. பலரும் பேசிக்கொண்டார்கள். சொன்னது போல் அது ஈ.பி.டி.பி க்குத்தான் என்று…..
ஆனாலும் தேர்தல் முடிந்த கையோடு நீங்கள் வெளியிட்டிருந்த கருத்து என்னையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. தோல்விகளையே ஒப்புக்கொள்ள மறுக்கும் எமது சூழலில் பெற்றுக்கொண்ட வெற்றியை தோல்வி என்று கூறும் ஒரு அரசியல் தலைவர் நீங்களாகவே இருக்க முடியும்.
யாழ்ப்பாணத்தில் பெற்றது வெற்றி அல்ல என்றும், வவுனியாவில் கிடைத்தது தோல்வி என்றும் நீங்கள் கூறியிருந்தீர்கள்.
யாழ் வெற்றிக்காக உங்களுக்கு வாழ்த்து கூறுவதற்கு முன்பாக வவுனியா தேர்தல் முடிவுகள் குறித்து நீங்கள் வெளியிட்ட கருத்து குறித்து முதலில் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.
தமது தோல்விகளுக்கு அடுத்தவர்கள்தான் காரணம் என்று உண்மைக்கு புறம்பாக கருத்து கூறும் அரசியல் தலைவர்கள் மத்தியில் யாரையும் குறை கூறாமல், அப்படி இப்படி என்று காரணம் கூறாமல் வவுனியாவில் தோல்வி என்று நீங்களே ஒப்புக்கொண்ட உங்களது நேர்மையான அரசியலே உங்களுக்கு பெரும் வெற்றி.
இதிலிருந்து ஒன்று மட்டும் வெளிப்படையாகிறது. தோல்விக்கான உண்மையான காரணத்தை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள். அவ்வாறு நீங்கள் தேட முற்பட்டால் அடுத்து வரும் தேர்தல்களில் வவுனியாவிலும் வெற்றி உங்கள் பக்கம் என்பது இப்பொழுதே உறுதிசெய்யப்படுகிறது என்றே அர்த்தம்….
அது சரி!.... தோழரே!..... வவுனியா கதையை விட்டுவிடுங்கள்… யாழ் தேர்தல் குறித்து பேசுவோம். ஏதற்காக அதை வெற்றி என்று கூற முடியாது என்று கூறினீர்கள்?.... அதுதான் புரியவில்லை…
சில வேளை இன்னும் சில ஆசனங்களை நீங்கள் எதிர்பார்த்திருக்கலாம். அல்லது தற்திருப்தி அடுத்த வெற்றிக்கு தடைக்கல் என்று கருதி நீங்கள் கருத்து கூறியிருக்லாம். அல்லது பொதுவாகவே உங்களிடம் இருக்கும் இயல்பான நிலையை போல் எதிலும் முழுமையாக திருப்தி அடைய மறுக்கும் உங்களது குணாம்சம் காரணமாகவும் இருக்கலாம்.
தோழரே!.... கடந்த கால தேர்தல் முடிவுகளை எண்ணிப்பாருங்கள்! 98 இல் யாழ் உள்ளூராடட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. ஆதில் மொத்தம் 17 சபைகளில் பத்து சபைகளில் உங்கள் கட்சியே வெற்றி பெற்றிருந்தது.
உங்கள் கட்சிக்கு கிடைத்திருந்த சபைகள் அனைத்தும் கிராமப்புறங்களை சார்ந்திருந்த பிரதேச சபைகள் மட்டுமே. ஆனாலும் நகர சபைகளிலும் உங்கள் கட்சிக்கு கணிசமான வாக்குகளும் ஆசனங்களும் கிடைத்திருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.
குறிப்பாக யாழ் மாநகரசபையை நீங்கள் அப்போது கைப்பற்றுவதற்கு பகீரதப்பிரயத்தனம் எடுத்திருந்தீர்கள். ஆனாலும் அது கைகூடியிருக்கவில்லை. ஈ.பி.டி.பி, மற்றும் புளொட் அமைப்புகளுக்கு தலா சுமார் 3000 வாக்குகள் கிடைத்திருந்தன. தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு 3500 வாக்குகள் கிடைத்திருந்தன. அதனால் தமிழர் விடுதலை கூட்டணிக்கு 9 ஆசனங்களும், உங்களுக்கும் புளொட் அமைப்புக்கும் தலா 6 ஆசனங்களும், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பிற்கு 2 ஆசனங்களும் கிடைத்திருந்தன.
அதன் பின்னர் நடந்த பாராளுமன்ற தேர்தல்களின் போதும் உங்கள் சட்சிக்கு ஏனைய தொகுதிகளை விடவும் யாழ்ப்பாணம் தொகுதியில் மிக குறைவான வாக்குகளே விழுந்திருந்தன.
இதற்கான காரணம் என்னவென்று தேட முற்படுவதற்கு மாறாக உங்கள் கட்சியாகிய ஈ.பி.டி.பி க்கு யாழ் மாநகரசபையிலும் அதிகமான மக்கள் அப்போது வாக்களித்திருக்க வேண்டும். ஏனெனில் எந்த பிரதேசங்களையும் நீங்கள் பாகுபடுத்தி உங்கள் சேவைகளை செய்வதில்லை என்று பலரும் பேசிக்கொள்கிறார்கள்.
ஆகவே தோழரே!.... கடந்து போன எந்த தேர்தல்களிலும் உங்களுக்கு கை கொடுத்திருக்காத யாழ் மாநகர சபைக்கு மட்டும் தேர்தல் நடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டதும் இது உங்களுக்கு ஒரு விசப்பரீட்சையாகவே இருக்கப்போகின்றது என்ற உண்மையை பலரும் பேசிக்கொண்டார்கள்.
ஆனாலும், கடந்த காலங்களைப்போல் அன்றி யாழ் மாநகர சபையில் உங்களுக்கு இந்த முறை பல மடங்கு அதிகமான வாக்குகள் விழுந்திருக்கின்றன. அதனால் நீங்கள் வெற்றி பெற்றது என்பதே உண்மை!
இந்த முறை தேர்தல் நடந்த சூழலை சற்று எண்ணிப்பாருங்கள்!.... எமது தேசத்தில் ஒரு யுத்தம் நடந்து முடிந்திருக்கிறது. பல மனித உயிர்கள் கொல்லப்பட வேண்டிய துயரமிக்க நிர்ப்பந்தம் நடந்து முடிந்திருக்கிறது. நலன் புரி முகாம்களில் எமது மக்கள் அடை பட்டிருக்கின்றார்கள். யுத்தம் நடந்து முடிந்தாலும் அதன் வடுக்கள் இன்னமும் தீரவில்லை.
அவலங்கள் இன்னமும் தொடர்கின்றன.
இந்த அவலங்களுக்கு எதிராக நீங்கள் வீரமாக எதையும் பேசியிருக்காவிட்டாலும், விவோகமாக பல விடயங்களை சொல்லியிருக்கிறீர்கள் என்பதை நான் மறுக்கவில்லை.
சில காரியங்களையும் ஆற்றியிருக்கிறீர்கள் என்பதையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
குறிப்பாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகின்றேன். புலிகளின் தலைமையை அழிக்க முடிந்திருக்கின்றது என்பது உண்மைதான். ஆனாலும் நீங்கள் அக்கடி அரசாங்கத்தை நோக்கி கூறுவது போல் தமிழ் பேசும் மக்களின் மனங்களை அரசாங்கத்தால் இன்னமும் வென்றெடுக்க முடிந்திருக்கவில்லை.
ஆனாலும் அரசாங்கம் புலிகளை வென்றது போல் தமிழ் பேசும் மக்களின் மனங்களையும் வென்றெடுப்பதற்கான ஆரம்ப முயற்சிகளை முன்னெடுத்திருக்கலாம். இதைத்தான் நீங்களும் கூறி வருகின்றீர்கள். இதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இதே வேளையில் எமது மக்களுக்கு இன்னமும் அது குறித்த நம்பிக்கை இன்னமும் முழுமையாக பிறக்கவில்லை.
இதை விடவும் இன்னொன்று, நடந்து முடிந்த யுத்தத்திற்கு பிரதான காரணமானவர்கள் புலிகள்தான் என்பதை சகல மக்களும் ஏற்பதற்கு முன்பாக அதன் அழிவுகிளில் இருந்து எமது மக்கள் இன்னமும் மீள முடியாதிருக்கும் இன்றைய சூழலில்…..
நலன் புரி முகாம்களில் இருந்து உங்கள் முயற்சியால் வெளியே கொண்டு வரப்பட்ட மக்களை தவிர ஏனைய பல மடங்கு அதிகமான மக்கள் இன்னமும் நலன்புரி முகாம்களுக்குள் அடை பட்டிருக்கும் துயரமான இந்த சூழலில்…..
நீங்கள் கூறும் நடை முறைச்சாத்தியமான வழிமுறையிலான 13 வது திருத்தச்சட்டத்தை அரசாங்கம் முழுமையாக இன்னமும் நடை முறைப்படுத்தாமல் இருக்கும் சூழ்நிலையில்….
புலிகளாலும், அவர்களுக்கு ஆதரவு வழங்கி வரும் அரசியல் வாதிகளாலும் தமிழ் தேசியம் என்ற பெயரால் அரசாங்கத்திற்கும் எமது மக்களுக்கும் இடையில் வளர்த்து விடப்பட்டிருக்கும் பகமையுணர்வுகள் இன்னமும் முழுமையாக மாற்றம் காணாத இந்த சூழலில்……
நீங்கள் முதல் தடவையாக உங்கள் வீணை சின்னத்தை தவிர்த்து அரசாங்க கட்சியும் அங்கம் வகிக்கும் வெற்றிலை சின்னத்தில் இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்கின்றீர்கள்.
வீணையை விட்டு வெற்றிலையில் நீங்கள் போட்டியிட முன்வந்திருந்த சூழலை விளக்கியிருக்கின்றீர்கள். அதையும் நாம் ஏற்கலாம்….. ஆனாலும் இந்த சூழலையும், உங்களது நிலைப்பாட்டையும் யாழ் மாநகர மக்களோ, அன்றி வவுனியா மக்களோ எந்தளவிற்கு ஏற்றுக்கொண்டு உண்மையை விளங்கியிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் சிந்தித்தே ஆக வேண்டும்.
இத்தகையை ஒரு சூழலில்தான் உங்களது ஈ.பி.டி.பி கட்சியானது தமிழ் தேசியத்தின் இதயப்பகுதி என்று சொல்லப்படுகின்ற யாழ் மாநகர சபையை கைப்பற்றியிருக்கிறது.
சகல நிலமைகளையும் நோக்கும் போது இந்த தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்றமை அசாதாரண ஒரு நிகழ்வு அல்ல. சாவால்களுக்கு முகம் கொடுத்திருக்கும் ஒரு சாதனை என்றுதான் இதை கருத வேண்டும்.
தேர்தல் நடத்தப்பட்ட இந்த சூழலையும், நீங்கள் வீணைச்சின்னத்தை தவிர்த்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டிருந்த நிலைமைகளையும் கருத்தில் எடுத்து பார்த்தால் இந்த தேர்தல் வெற்றி உங்களுக்கு அமோக வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆகவே இந்த தேர்தல் வெற்றியை நீங்கள் வெற்றி இல்லை என்று கூறுயிருப்பதன் அர்த்தம் என்னவென்று புரியாமல் இருக்கின்றது.
உங்களது உழைப்புக்கும், சேவைக்கும் உரிய வெற்றி கிடைத்திருக்கவில்லை என்ற ஆதங்கம் உங்களைப்போல் எனக்கும் இருக்கின்றது. ஆனாலும் உங்கள் அர்ப்பண உணர்வுகளுக்கு அப்பால் உங்களுக்கு எதிரே இன்று எழுந்து நிற்கும் இன்றைய சூழ்நிலையே
தேர்தல் முடிவுகளுக்கு பிரதான காரணியாக இருந்திருக்கிறது. இதை நீங்கள் விளக்கிக்கொள்ள வேண்டும்.
இதில் இன்னொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். வெற்றிலை சின்னம் எமது மக்களுக்கு பழக்கப்பட்ட சின்னம் அல்ல என்பதையும் நீங்கள் அறிவீர்கள். தேசிய அடையாள அட்டைகள் இன்றி வாக்களிக்க முடியாமல் ஏமாந்து போன மக்களில் பலரும் உங்கள் கண் முன்பாக கண்ணீர் விட்டு அழுத காட்சிகளையும் காணக்கூடியதாக இருந்து. அவர்களும் வாக்களித்திருந்தால் இன்னும் வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கும். அந்த வாக்குகளில் பெரும்பான்மையானவை உங்களுக்கே விழுந்திருக்கும். அப்படி நிகழ்ந்திருந்தால் இன்னும் சில ஆசனங்கள் உங்கள் வசமாகியிருக்கும் என்பது நம்பிக்கை.
இதை விடவும் இன்னமும் சொல்லப்போனால் நீங்கள் உங்களது வீணைச்சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் நீங்கள் எதிர்பார்த்திருந்தது போல் இதைவிடவும் ஒரு பாரிய வெற்றி உங்களுக்கு கிடைத்திருக்கும்.
அமைச்சர்கள் வந்தார்கள். வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார்கள். ஆகவேதான் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்ற ஆனந்தசங்கரி ஐயா அவர்களின் கருத்து ஏற்புடையதல்ல. அவ்வாறு ஏற்றுக்கொள்வதாயின் அரசாங்க அமைச்சர்களின் விருப்பங்களுக்கு எமது மக்கள் இணங்கிப்போயிருப்பதாகவே கருதவேண்டியிருக்கும்.
வவுனியாவிலும் அமைச்சர்கள் வந்து தங்கிருந்தார்கள். ஆனாலும் அங்கு உங்களது வெற்றிலை கூட்டு அங்கு வெற்றி பெற்றிருக்கவில்லை. யுhழில் மட்டும் வெற்றிலை வெற்றி பெற்றது உங்களது கட்சியாகிய ஈ.பி.டி.பி க்கு மக்கள் வழங்கியிருக்கும் அங்கீகாரம் என்றே கருதவேண்டியிருக்கிறது. இந்த அங்கீகாரத்தையும் நம்பிக்கையையும் நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்று நான் நம்புகின்றேன்.
இன்னொரு புறத்தில் விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்று சிலர் கருத்து கூறி வருகின்றார்கள். அவர்கள் வுவுனியா நகரசபையை கைப்பற்றியும் இருக்கிறார்கள். யானை தனது தலையில் மண்ணை அள்ளி வீசியது போல் அவர்களுக்கே மறுபயும் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஆனாலும் மக்கள் தீர்ப்பை ஏற்றுத்தான் ஆக வேண்டும். அரசாங்கத்தோடு பகமை பாராட்டி, எதிர்ப்பு அரசியலை நடத்தி அவர்கள் வவுனியா நகரத்தின் அபிவிருத்தியை தொடரட்டும் பார்க்கலாம்…. அது முடியாத காரியம். நீங்கள் கூறுவது போல்
அரசாங்கத்துடன் இணக்கத்துடன் பேசியே வவுனியாவிலும் அபிவிருத்திப்பணிகளை தொடர முடியும் என்பதை நடை முறையில் உணர்ந்து கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
தோழரே இறுதியாக ஒன்று!..... தமிழ் பேசும் மக்கள் இன்று உங்களையே நம்பியிருப்பதாக தெரிகிறது. தேர்தலை மையப்படுத்தி அதிகாரங்களை கையிலெடுத்து, அதை வைத்து அரசுடன் பேரம் பேசும் அரசியலே எமக்கு விமோசங்களை பெற்றுத்தரும் என்பதே உகந்த வழிமுறை. இது தவிர வேறு வழியில்லை.
22 பாராளுமன்ற பிரதிநித்துவங்களை கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்மைப்பினர் தங்களது அரியல் பலத்தை சிறிதளவேனும் தமிழ் பேசும் மக்களுக்காக இது வரை பயன்படுத்தியிருக்கவில்லை. பேரம் பேசவும் பேகவில்லை. அரசியல் பிரச்சனைக்கு அவர்கள் தீர்வு காணவும் முற்படவில்லை. அது அவர்களுக்கு விருப்பமாக இருப்பதாகவும் தெரியவில்லை. இந்த அரசியல் பலம் உங்களுக்கு கிடைத்திருந்தால் நீங்கள் சொல்வது போல் பலதும் நடந்திருக்கும் என்பதையே நான் நம்புகின்றேன்.
வவுனியா நகர சபையில் நீங்கள் வீணையில் போட்டியிட்டிருந்தால் மக்கள் தீர்ப்பு வேறு விதமாக இருந்திருக்கும். ஆகா…. ஓகோ என்று தமிழ் தேசியத்தின் பெயரால் சுயலாப அரசியல் நடத்துபவர்கள்…. தமது சொந்த நலன்களை மட்டும் கவனிப்பவர்கள் ஓரம் கட்டப்பட்டிருப்பார்கள்.
அடுத்து வரும் தேர்தலில் நீங்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுகின்றீர்கள் என்பதை யாரும் கருத மாட்டார்கள். எதை மக்களுக்கு செய்தீர்கள் என்பதையே மக்கள் எதிர் பார்த்து காத்துக்கொண்டிருப்பரர்கள். செய்து முடிப்பீர்கள் என்று நம்புகின்றேன். வெற்றிலையை நோக்கி மக்களை அழைத்து வாருங்கள். இன்றேல் வீணையுடன் மக்களிடம் செல்லுங்கள். வெற்றி உங்களுக்கு நிச்சயம்.
இரண்டில் ஒன்றை செய்யுங்கள். எது செய்தாலும் எமது மக்களுக்கே நன்மை கிடைக்கும்.
உங்கள் ஈ.பி.டி.பி க்கே வெற்றி கிடைக்கும்.
தோழரே!..... உங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை மறந்தும் கூட தோல்வி என்று இனியும் சொல்லி விடாதீர்கள். இதை விடவும் இன்னமும் வெற்றி பெற உழையுங்கள்!........
நேசமுடன்
யாழில் இருந்து
சூரியநாராயணன்!
இது என் சொந்தப்பெயர் அல்ல.
0 விமர்சனங்கள்:
Post a Comment