புலிகளின் தலைவரென உரிமை கோரும் கே.பியின் கைது தொடர்பான விரிவான செய்தி.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட கேபி என்கிற குமரன் பத்மநாதன் என்கிற செல்வராஜா பத்மநாதன், மலேசியாவில் வைத்து இலங்கை உளவுப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தாய்லாந்தில் வைத்து இவரைக் கைது செய்ததாக இலங்கைத் தரப்பில் கூறப்படுகிறது.
உண்மையில் மலேசியாவில்தான் கேபியை மலேசிய உளவுப் படையினரும், இலங்கை உளவுப் படையினரும் பிடித்ததாக தெரிகிறது. ஆனால் மலேசியா தான் கேபியைப் பிடித்துக் கொடுத்ததாக வந்து விடக் கூடாது என்பதற்காக அவரை பாங்காக் கொண்டு சென்று அங்கு வைத்து பிடித்துக் கைது செய்ததாக இலங்கை தரப்பு செய்தி பரப்புவதாக புலிகள் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் புலிகளின் பயங்கரவாதம் பூண்டோட அழிக்கப்பட்டதன் பின்பு இலங்கைக்கு வெளியில் செயற்படப் போவதாக கே. பி. அறிவித்திருந்தார். கொலைகள், ஆயுதக் கடத்தல், சட்டவிரோத நிதி சேகரிப்பு, ரஜீவ் காந்தி கொலை உட்பட பல்வேறு கிரிமினல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய கே. பி., இலங்கை அரசாங்கத்தினால் தேடப்பட்டுவரும் முக்கிய கிரிமினலாவார். கே. பி. மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கம் உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன.
தாய்லாந்தில் இவரைக் கைது செய்த பொலிஸார் இவருடைய பெயரில் இருந்த பல்வேறு நாடுகளுக்குரிய 200 கடவுச் சீட்டுக்களைக் கைப்பற்றியுள்ளனர். புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கே. பி. கைது செய்யப்பட்டார் என பாங்கொக் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டது.
1955 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த கே. பி.செல்வராசா பத்மநாதன், குமரன் பத்மநாதன் போன்ற பல்வேறு பெயர்களில் உலக நாடுகளில் நடமாடித் திரிந்தாரென்பது குறிப்பிடத்தக்கது. பிரபாகரன் கொல்லப்பட்டதற்குப் பின்னர் தன்னைத் தானே தலைவராகப் கே. பி. பிரகடனப்படுத்தினார்.
இதுகுறித்து புலிகள் இயக்கத்தின் புதினம் செய்தியில் கூறியிருப்பதாவது:
புதன்கிழமை பிற்பகலில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ‘மஜீத் இந்தியா’ என்று குறிப்பிடப்படும் பகுதியில் உள்ள டியூன் ஹோட்டல் (Tune Hotels) விடுதிக்கு ஒரு சந்திப்புக்காக சென்றிருந்தபோது செல்வராஜா பத்மநாதன் கடத்தப்பட்டுள்ளார்.
வெளிநாடு ஒன்றில் இருந்து அவரைச் சந்திப்பதற்காக மலேசியா சென்றிருந்த - விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் சகோதரர் மற்றும் பா.நடேசனின் மகன் ஆகியோரைச் சந்திப்பதற்காகவே செல்வராஜா பத்மநாதன் அந்த விடுதிக்குச் சென்றிருந்தார்.
பிற்பகல் அளவில் - ஜலான் துராங்கு அப்துல் ரஹ்மான் வீதியில் இருக்கும் குறிப்பிட்ட டியூன் ஹோட்டலுக்குச் சென்ற செல்வராஜா பத்மநாதன், நடேசனின் உறவினர்கள் தங்கியிருந்த அறையில் அவர்களுடன் உரையாடியிருக்கின்றார்.
பிற்பகல் 2 மணியளவில் - தனக்கு வந்த ஒரு செல்போன் அழைப்பை ஏற்று தனிமையில் உரையாடுவதற்காக அந்த அறையை விட்டு வெளியே சென்ற அவர் திரும்ப வரவில்லை. அதன் பின்னரே அவர் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
செல்வராஜா பத்மநாதன் மலேசிய உளவுப் பிரிவு அல்லது மலேசிய பாதுகாப்பு வட்டாரங்களின் ஒத்துழைப்புடன் இலங்கை உளவுப் பிரிவினரால், கடத்தப்பட்டதாகவே தெரிகிறது.
அதே வேளையில் வேறு ஒரு பெரிய வெளிநாட்டு உளவுத்துறையின் ஆசீர்வாதமும் அனுசரணையும் கூட இந்தக் கடத்தலுக்கு இருந்திருக்கலாம் என்ற சந்தேகமும் தமிழர் வட்டாரங்களில் நிலவுகின்றது.
அதேசமயம், செல்வராஜா பத்மநாதன் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசுத் தரப்பு நேற்று கொழும்பில் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
ஆனால் இந்தக் கடத்தலுடன் மலேசிய பதுகாப்பு மற்றும் உளவு வட்டாரங்களுக்கு இருக்கும் தொடர்பை மறைத்து திசை திருப்பும் நோக்குடனேயே இவ்வாறு தகவல் வெளியிடப்படுகின்றது என்று கருதப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட செல்வராஜா பத்மநாதன் நேற்றே விமானம் மூலம் கொழும்பு கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கேபியின் புதிய படம்…
கேபி கைது செய்யப்பட்டிருப்பது புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேலும், கேபியின் புதிய புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. இதில் இருப்பவரே உண்மையான கேபி என்று தெரிகிறது.
இந்தியாவால் தேடப்பட்டு வருபவர்
கேபி இன்டர்போல் போலீஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வருபவர். இவரைப் பிடிக்க ஐந்து முறை இன்டர்போல் ரெட் அலர்ட் பிறப்பித்தது.
இலங்கை மட்டுமல்லாது இந்தியாவின் சிபிஐயும் இவரைத் தேடி வந்தது. ராஜீவ் காந்தி படுகொலையில் இவருக்கு நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் கூட, ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின்னர் ஐந்து நாட்கள் கழித்து மும்பை வழியாக இந்தியாவிலிருந்து கேபி தப்பியதாக சிபிஐ கூறுகிறது.
இந்தியா, இலங்கை மற்றும் இன்டர்போல் ஆகியவற்றால் தேடப்பட்டு வந்த கேபி தற்போது பிடிபட்டுள்ளது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்க மேலும் ஒரு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.






0 விமர்சனங்கள்:
Post a Comment