ஜப்பானும் புலிகளும்!
இலங்கையை இரு துண்டுகளாக உடைத்து அதிலொரு பகுதியை புலிகளுக்கு தாரை வார்த்துக் கொடுப்பதற்கு நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் பின்னின்று உழைத்தவர் என கடந்தவார தென்பகுதி ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
2007ம் வருடம் தாய்லாந்து சதாஹிப்பில் நடந்த சமாதானப் பேச்சுhவார்த்தைகளின் பின்னர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பாரியதொரு தொலைக்காட்சிப் பெட்டியையும் பெருந்தொகைப் பணத்தையும் சோல்ஹெய்ம் அன்பளிப்புச் செய்திருந்தார்.
அத்துடன் புலிகளுக்கு அதிநவீன தகவல் பரிமாற்றக் கருவிகள் அடங்கிய தொகுதியை வழங்கவும் இவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.
இதே நேரம் புலிகள் இயக்கத் தலைவர்கள் இறுதியில் சுற்றிவளைக்கப்பட்டிருந்த சமயம் அவர்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைத்து அவர்களைக் காப்பாற்றுவதற்கும் சோல்ஹெய்ம் திட்டமிட்டிருந்தார்.
இந்த நிலையில் இவர் இப்போது தனது இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார் என்பதே கடந்த வார ஊடகங்களில் பரவலாக விமர்சனம் செய்யப்பட்டிருந்த முக்கிய விடயமாகும்.
இந்த வகையில் ஜேர்மன், பெர்லின் நகரை மையமாகக் கொண்ட ஒரு குழுவினர் சோல்ஹெய்முக்கு உதவியாக இருந்து வருகின்றனர். இந்தக் குழுவினர் இலங்கையிலிருந்து தப்பியோடிய புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான குழுவினர் என்பது பற்றி கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தேன்.
இதனை தற்போது புலிகளின் அமெரிக்க முகவரான உருத்திரகுமாரனும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இலங்கை அரசுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் வேலைத்திட்டங்களில் மேற்படி அமைப்பும் ஒன்றாகும் என அவர் கூறியிருக்கிறார்.
ஆகவே ஜேர்னலிஸ்ட் போ டிமோகிறஸி எனும் இந்தக் குழுவின் செயற்பாடுகளைத் தெளிவாக விளங்கிக் கொள்ள இயலும். இந்தக் குழுவினர் யாருக்காகக் குரல் கொடுக்கிறார்கள் என்பதும் தெட்டத் தெளிவாகின்றது.
புலிகளின் தலைமைத்துவம் கொன்றொழிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையிலிருந்து தப்பியோடிய இந்தக் குழுவினர் இலங்கை இராணுவத்தை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட வீடியோ திரைப்படத்தை பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி வைத்துள்ளதுடன் அதிலொரு பிரதியை எரிக் சோல்ஹெய்மிடமும் கொடுத்துள்ளது.
சோல்ஹெய்ம் கடந்தவாரம் நோர்வே ஆப்டன் போஸ்டன் பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார். அதில், “ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற் போயுள்ளனர். இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவரும் கேள்விகேட்கவில்லை. சாட்சியங்கள் இல்லாமல் நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் இயலாதுள்ளது. இப்போது எங்களிடம் தேவையான தகவல்கள் இருப்பதால் அவர்களை கைது செய்ய முடியும். அதேபோல் சர்வதேச ஊடகவியலாளர்களைக் கடத்திச் செல்வதால் தண்டனைக்குரிய குற்றத்தை செய்திருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
சோல்ஹெய்மின் இக்கூற்றுப்படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அப்போதைய இராணுவத் தளபதி, மற்றும் இராணுவ நடவடிக்கையுடன் தொடர்புடைய கட்டளைத் தளபதி ஆகியோரையே கைது செய்ய வேண்டும் எனக் கூறுகிறார். இதே நேரம் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கை அரசு விசாரிக்கப்பட வேண்டும் என்பதையும் எரிக் சோல்ஹெய்ம் வலியுறுத்தி இருக்கிறார்.
யுத்தக் குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது குற்றஞ் சுமத்துகின்ற சோல்ஹெய்மும் ஓர் யுத்தக் குற்றவாளியே என கடந்தவார ஊடகங்கள் கடுமையாக விமர்சனஞ் செய்திருந்தன.
சேர்பியாவில் இருந்து கொசவோ மாநிலத்தை பிரிவினைவாதிகளுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சேர்பிய இராணுவத்திற்கு எதிராக நேட்டே அமைப்பு வான் தாக்குதல் நடத்த வேண்டுமெனக் கூறியிருந்தவர் எரிக்சோல்ஹெய்ம்.
இந்த வான் தாக்குதல் காரணமாக கொல்லப்பட்ட சேர்பிய மக்கள் தொடர்பில் சோல்ஹெய்மும் பதில் சொல்ல வேண்டியவராகிறார்.
இலங்கை இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக தனது நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதைப் போல் சோல்ஹெய்ம் மேற்படி கூற்றைக் கூறி இருபத்து நான்கு மணி நேரம் கழித்து புலிகளின் அமெரிக்க முகவரான உருத்திரகுமாரன், சர்வதேச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்து இலங்கை அரசுக்கு எதிராக யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டிருந்தார்.
அதே நேரம் வாகரைப் பகுதியில் சிறு குழந்தைகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். கற்பழிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் குண்டுகளை வெடிக்க வைத்து கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தியையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்கள் உலகளாவிய ரீதியில் புலிகளின் அனுதாபிகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடந்தவார ஊடகங்கள் சுட்டிக் காட்டியிருந்த நிலையில்,
தமிழ் கெரில்லாக்கள் கொலை செய்யப்பட்டமையானது சர்வதேச சட்டத்தை மீறுகின்ற செயலா? என்பது குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காக சர்வதேச விசாரணைகள் தேவை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் விN~ட பிரதிநிதி பிலிப் எலிங்டன் கூறியிருந்தார்.
இதே நேரம் பாராளுமன்ற உறுப்பினரான மனோ கணேசன், இலங்கை இராணுவத்தை இழிவுபடுத்தும் முகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள வீடியோ திரைப்படத்தை உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு நிறுவனத்தின் மூலம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென கோரியிருந்தார்.
அமெரிக்க இராணுவத்தின் குவன்தனாமோ முகாமில் அல்கைதா உறுப்பினர்களை சித்திரவதை செய்வதையும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானியப் பொதுமக்களைக் கொன்று குவித்த காட்சிகளையும் கொண்ட வீடியோ படங்களை சர்வதேச நிறுவனமொன்றைக் கொண்டு விசாரணை நடத்த அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்ததா? என்ற கேள்வியும் கடந்தவார ஊடகங்களில் எழுப்பப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு நிலையில் அமெரிக்காவின் அக்கால ஜனாதிபதி ஏப்பிரகம் லிங்கன் தனது நாட்டின் தென்பகுதியில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு முகங்கொடுத்திருந்த நிலைக்கே இன்றைய இலங்கை ஜனாதிபதியும் முகங்கொடுத்துள்ளார் என்றும் நாட்டினுள் துரோகிகள் இருந்ததையால் ஜனாதிபதி லிங்கன் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாகவும் அதே நிலை இன்று இலங்கையிலும் தோன்றி இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
சில மாதங்களுக்கு முன்பதாக பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகள் ஒன்றிணைந்து ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராகக் கொண்டு வந்திருந்த மனித உரிமைகள் மீறல் யோசனை தோல்வியடைந்திருந்தது.
தற்போது அதனது இரண்டாம் கட்டத் திட்டம் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் கடந்தவார விமர்சனங்கள் எழுந்திருந்தன.
பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத் தலைவர்கள் கொல்லப்பட்டதையடுத்து சோல்ஹெய்ம் உள்ளிட்ட நோர்வே அரசின் உயர் மட்டத்தினர் இலங்கை தொடர்பில் கடுங்கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் மீண்டும் இரகசிய திட்டங்களைத் தீட்டி வருகின்றனர் என நோர்வே தகவல்கள் தெரிவிப்பதாகவும் இவ்வாறான தகவல்கள் கடந்த ஜூன் மாதம் வெளிவந்துள்ளதாகவும் சில ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
அன்று வெளிவந்த இத்தகவல்கள் இன்று உறுதியாகி வருகின்றன.
இலங்கையில் இருந்து தப்பியோடிய புலிகள் இயக்க ஆதரவாளர்கள் நோர்வே அமைச்சர் எரிக் சோல்ஹெய்முடன் இணைந்து இலங்கை இராணுவத்தினர் தமிழ் பொதுமக்களை கொலை செய்வதாக முழு உலகிற்கும் காட்டக் கூடிய இரகசிய திட்டங்களைத் தீட்டி வரும் நிலையில் இந்நாட்டின் யுனிசெப் நிறுவனத்தின் முக்கியஸ்தரான எல்டன் என்பவர், இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவரும் முகாம்களில் உள்ள மக்கள் பட்டினியால் இறப்பதாகவும், சிறுவர்கள் போ~hக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ரீதியில் பிரச்சாரமொன்றை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிய வந்திருந்தது.
இதற்கு முன்னர் யுனிசெப் நிறுவனத்தின் கிளிநொச்சி பிரதிநிதியாக இருந்த பெனியம்மா என்பவர் இலங்கை இராணுவத்திற்கு எதிராக பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தார் என்ற நிலையில் நாடு கடத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் எல்டர் என்பவரையும் உடனடியாக நாடு கடத்தும்படி அரசு பணித்திருந்தது. இதனை இரத்துச் செய்து தொடர்ந்து இலங்கையில் தங்கி இருப்பதற்கு எல்டர் கடுமையான முயற்சிகளை எடுத்திருந்தும் அவை வெற்றியளிக்கவில்லை.
நாட்டுக்கு வரும் சந்தர்ப்பத்தில் உல்லாசப் பயணிகளுக்கு வீஸா அனுமதிப் பத்திரம் வழங்கும் முறைமை இதுகால வரையில் நடைமுறையில் இருந்தது. இதனால் தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுக்கு உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன.
புலிகளுக்கு நெருக்கமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் உல்லாசப் பிரயாணிகளின் போர்வையில் இலங்கைக்கு வர மேற்கொண்டுள்ள முயற்சிகளால் மேற்படி விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இலங்கைக்கு வருபவர்கள் அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் சிபாரிசுகளைப் பெற்றே வரவேண்டும் என்ற விடயம் குறித்து தற்போது அவதானங்கள் செலுத்தப்படுகின்றன.
இருப்பினும் வெளிநாட்டமைச்சின் உயரதிகாரிகள் இந்த முறைமையை எதிர்த்துள்ளனர்.
இலங்கைக்கு வரும் சந்தர்ப்பத்தில் வீஸா அனுமதிப் பத்திரம் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
கடந்த காலங்களில் உல்லாசப் பிரயாணிகளின் போர்வையால் ர~;ய ஆயத விற்பனை முகவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், வடபகுதியில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கென இந்திய அரச சார்பற்ற நிறுவனங்கள் இரண்டினைச் சார்ந்த 40ற்கும் மேற்பட்டவர்கள் இலங்கை வர வெளிநாட்டமைச்சின் உயரதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்தனர்.
இந்த இரு அமைப்புகளிலும் இந்தியாவின் முன்னாள் இராணுவ வீரர்களே அடங்கி இருக்கின்றனர். 2002ம் வருடம் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இந்நாட்டுக்குள் வந்த ஹொரய்ஸன் மற்றும் கிராம் ஏக் எனும் மேற்படி அமைப்புக்கள் நோர்வே நாட்டு நிதியைக் கொண்டு கண்ணிவெடிகளை அகற்றும் பணியை ஆரம்பித்திருந்தன.
தற்போது மீளவும் இவர்கள் இலங்கைக்குள் வந்துள்ளனர். இவ்வாறு இலங்கைக்கு வருகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களது விபரங்களோ, புகைப்படங்களோ இல்லாமல் வெளிநாட்டமைச்சின் உயரதிகாரிகள் இவர்களுக்கு சிபாரிசு செய்திருப்பது ஆச்சரியமான விடயமாகும் என்ற செய்தியும் கடந்தவாரம் வெளியாகி இருந்தது.
இதனிடையே, 2002 – 2004 காலகட்டங்களில் நோர்வே வெளிநாட்டமைச்சு புலிகளுக்கு 17.5 மில்லியன் குரோன் நிதியை வழங்கியுள்ள விடயமும் வெளிவந்திருந்தது. (262.5 மில்லியன் ரூபா). இத்தொகையானது இலங்கை அரசு அறிந்திருந்த நிலையிலேயே புலிகளது சமாதான செயலகத்திற்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் நோர்வே நாட்டவர் ஒருவர் கூறியிருந்தார்.
இவ்வாறான தகவல்கள் எதனையும் இலங்கை மக்கள் இதுவரையில் அறிந்திருக்கவில்லை.
இதே நேரம், புலிகளுக்கு நிதி கிடைப்பதற்கும் அவற்றை பயன்படுத்துவதற்கும் சட்ட ரீதியிலான உரிமை இருக்கிறது என நோர்வே நாட்டு பெண் அமைச்சரான அர்னா கோல்பர்க்கும் கூறி இருந்தார்.
எனவே, இலங்கையில் பயங்கரவாதம் தொடர்ந்து செயற்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ள சோல்ஹெய்ம் உட்பட நோர்வே நாட்டு உயர்மட்டத்தினரும் யுத்த குற்றவாளிகளே என தென்னிலங்கைப் பத்திரிகை ஒன்று சுட்டிக் காட்டி இருந்தது.
இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பேன் கீ மூன் கடந்த ஞாயிறு (31) நோர்வேயில் வைத்து பிரதமர் ஜென்ஸ் ஸ்டொல்டன் பர்க்கைச் சந்தித்துக் கலந்துரையாடி இருந்தார். இந்தக் கலந்துரையாடலின் பின்னர் நோர்வே கூறிய விடயங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன.
இலங்கையில் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தை செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என பேன் கீ மூன் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டும் எனவும் சிறுபான்மையினருடன் அரசியல் ஒப்பந்தமொன்று செய்து கொள்ள வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
எரிக்சோல்ஹெய்மின் கூற்று இதிலிருந்து வெளிப்படுவதாகவே அரசியல் விமர்சகர்கள் இவ்விடயம் பற்றி சுட்டிக் காட்டி இருந்தனர்.
புலிகளின் தலைமை முற்று முழுதாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கச் சொல்வதானது புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதாகி விடும் என்றே தென்னிலங்கை ஊடகங்கள் கருத்து வெளியிட்டிருந்தன.
இதே நேரம் லிபியத் தலைவர் கேர்ணல் கடாபி ஆட்சிக்கு வந்து நாற்பதாவது வருடத்தைக் குறிக்குமுகமான வைபவம் அண்மையில் இடம்பெற்றது. இலங்கை இராணுவத்தின் கமாண்டோ படையணி ஒன்றும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டிருந்தது.
கடந்தவார கண்ணோட்டத்தில், சர்வதே புலனாய்வுத் துறையைச் சேர்ந்த புலனாய்வுத்துறை செயற்பாட்டாளர்கள் பலர் பல்வேறு வேடங்களில் இலங்கைக்குள் நுழைந்துள்ளனர் என்ற தகவலையும் காணக் கூடியதாக இருந்தது.
இதே நேரம் தமிழ் பெண் ஒருவரை வீஸா அனுமதிப் பத்திரமின்றி லண்டன் அனுப்புவதற்கு இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகம் முன்வந்துள்ள நிலையில் இலங்கை அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
பிரித்தானிய தூதரக அதிகாரிகள் இப்பெண்ணுக்கு உதவியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இதே நேரம் இலங்கை இராணுவத்தை இழிவுபடுத்திக் காட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள வீடியோ படம் கவலையைத் தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கத் தூதுவர் சூசன்ரைப் கூறியிருந்தார்.
இந்த நிலையில் புலிகளுக்கு மிஜட் ரக சப்மெரின் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை ஜப்பானிய நிபுணர்களே வழங்கியுள்ளனர் என்ற தகவலும் கடந்த வாரம் வெளியாகியிருந்தது.
சுனாமி ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் இலங்கை வந்திருந்த இந்த ஜப்பானிய நிபுணர்கள் இத்தொழில் நுட்பத்தை புலிகளுக்கு வழங்கியுள்ளனர்.
நலன்புரி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள கடற்புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர் ஒருவரால் இத்தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
சுனாமி காலத்தில் எந்தவொரு அரசசார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினரும் தங்களது தனித்துவ அடையாளங்களை நிரூபிக்காமல் இலங்கைக்குள் வரலாம் என்றொரு நிலை ஏற்பட்டிருந்ததால் மேற்படி ஜப்பானிய நிபுணர்களும் வந்துள்ளனர்.
யுத்த சூனியப் பகுதியில் இருந்து இலங்கை இராணுவத்தினர் அதி சக்திவாய்ந்த தகவல் பரிமாற்றக் கருவிகளையும் ஏனைய ஜப்பானிய தயாரிப்புக்களையும் கண்டெடுத்துவரும் நிலையில் புலிகளுக்கும் ஜப்பானுக்கும் இடையில் இருந்துள்ள தொடர்புகள் பற்றிய தகவல்கள் அம்பலமாகி வருகின்றன.
இதே நேரம் கண்டெடுக்கப்பட்டுள்ள கடற்புலிகளின் படகொன்றிலும் ஜப்பானிய தயாரிப்பான ரேடார் கருவி பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
சுனாமி அனர்த்தத்திற்கு பின்னர் புலிகளது ரீ.ஆர்.ஓ. அமைப்புடன் ஜப்பானிய அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று கூட்டு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் இதற்கு பொறுப்பாக இருந்தவர் இலங்கை, தமிழ் பெண் ஊடகவியலாளர் ஒருவர் என்ற தகவலும் இப்போது வெளியாகி இருக்கிறது.
இந்த பெண் ஊடகவியலாளர் தொடர்பில் ஜப்பானிய புலனாய்வுத்துறையினர் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
புலிகளின் தலைமை கொல்லப்படுவதற்கு முன்பதாக பிரிகேடியர் சவேந்திர சில்வாவின் படை அணியினரால் 300 அடி நீளமான 25 அடி அகலமான சுரங்கப் பாதையொன்றும் 300 அடி நீளமான, 30 அடி அகலமான சப்மெரீன் ஒன்றும் கைப்பற்றப்பட்டிருந்தது.
செனல் 4 தொலைக்காட்சியினால் இலங்கைக்கு எதிரான பொய்யான வீடியோ படமொன்று காட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவிலுள்ள இலங்கை அமைப்பு மேற்படி தொலைக்காட்சி நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்பதாக மேற்படி அமைப்பின் பிரதிநிதிகளுக்கு புலிகளும் புலிகளின் ஆதரவளார்களும் மரண அச்சுறுத்தல்களை விடுத்திருந்தனர் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனிடையே அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டாளரான ஊடகவியலாளர் என இனங்காணப்பட்ட திஸ்ஸநாயகம் என்பவருக்கு பயங்கரவாதத்திற்கு உதவிய குற்றத்திற்காக இலங்கை நீதிமன்றம் 20 வருடகால சிறைத் தண்டனையை வழங்கியிருந்தது. இதனால் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பா போன்ற நாடுகளில் அதிர்ச்சியேற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன.
அமெரிக்க அமைப்பொன்று திஸ்ஸநாயகத்திற்கு விருது வழங்கவும் முன்வந்துள்ளது.
இந்நபர் யாருக்காக செயற்பட்டார் என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்ற விடயம் கடந்தவார தென்பகுதி ஊடகங்களில் பரவலாக அலசப்பட்டிருந்தது.
- டி.எம். பாருக் அசீஸ்
வெளிச்சம்
0 விமர்சனங்கள்:
Post a Comment