வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் செயல்களை முடக்க இலங்கை அரசு தீவிரம்!
புலிகளின் வெளிநாட்டு தொடர்பை, தகர்க்கும் முயற்சியில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்த போதும், அதன் வெளிநாட்டு தொடர்பு, இன்னும் தொடர்ந்து கொண்டே உள்ளது. இதனால், அதை அழிப்பதற்கான முயற்சியில், இலங்கை இறங்கியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்களால், நிதி திரட்டல் மற்றும் கொழும்புக்கு எதிரான போராட்டங்கள், நடந்து வருகின்றன. இதனால் இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதன் பின்னணியில், விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தொடர்புகள் செயல்படுவதாக இலங்கை அரசு நம்புகிறது.
விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலர், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனர், செல்வராசா பத்மநாதன் கைதால், இடம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் நடவடிக்கைகள் ஒடுக்கப்படும் என நினைத்தது.
ஆனால், வெளிநாடு வாழ் இலங்கை தமிழர்களின் நடவடிக்கைகள் செயல்திறனுடன் இருப்பதால், புலிகளின் வெளிநாட்டு தொடர்புகளை தகர்க்க, அமைச்சர்கள் அனைவரும் செயல்படுமாறு இலங்கை அரசு கூறியுள்ளது. 12 அமைப்புகள் மூலம், உலகில் உள்ள 44 நாடுகளில், விடுதலைப் புலிகள் அமைப்பு பலமான நிலையில் உள்ளது' என, பயங்கரவாத தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் சானக ஜெயசேகர என்பவர் கொழும்பில் தெரிவித்தார். கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுடன், விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயல்களை கவனித்து வரும் ஐயா அண்ணா என்பவர் தொலைபேசியில் பேசியுள்ளார். போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு தயாராகுமாறும், யாழ்ப்பாணத்தில் நிதி சேகரிப்பை மீண்டும் தொடங்க, அவர் கூறியுள்ளதாகவும் புலனாய்வுத் துறையினர் கூறினர். இந்நிலையில், புலிகளின் வெளிநாட்டு தொடர்பை தகர்க்க, இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்கான வேலையில் முதற்கட்டமாக, அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிபுணர் மற்றும் தமிழீழ அரசின் செயற்குழு இணைப்பாளரான விசுவநாத ருத்திரகுமாரனை நாடு கடத்த, அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்க, இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், விடுதலைப் புலிகளின் ஆயுத விநியோகத்தின் முக்கிய மையமாக விளங்கும் எரித்திரியாவில், தனது தூதரகத்தை திறந்து, புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரை தூதுவராக நியமிக்கவுள்ளது. இதுதவிர, விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகம் உள்ள நாடுகளில், தமது நடவடிக்கைகளை அதிகரிக்கவும் முயன்று வருகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment