ஒரு அழகியின் மரணம்
அழகுராணியாவதற்கு முக அழகு மட்டும் போதாது உடல்வாகு உயரம் இன்னும் பல அம்சங்கள் மூலம் தெரிவு செய்யப்படுகிறார்கள். குண்டானவர்கள் அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதை எங்காவது எப்போதாவது கண்டுள்Zர்களா அல்லது பத்திரிகை, தொலைக்காட்சி மூலம் பார்த்ததுண்டா.
இங்கு அழகான ஒரு பெண் தன் பருமனை குறைத்து உடல்வாகைப் பெறவேண்டும் அதாவது ஒல்லியாக வேண்டுமென்று ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றவர் மரணித்து சடலமாக வீடு வந்தடைந்தார்.
பாடசாலை காலத்தில் அழகியாக விளங்கிய ‘ஷாரிகா’ எப்படியாவது சர்வகலாசாலை செல்லவேண்டுமென்ற திடசங்கற்பத்துடனிருந்தார்.
பரீட்சை முடிவை எதிர்பார்த்து வீட்டிலிருந்த சமயம் அழகுக் கலை பயின்றார். அழகுக் கலை நிபுணராக வேண்டுமென அப்போது முடிவு செய்ததால் சர்வகலாசாலைக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணம் தவிர்ந்தது.
திடசங்கற்பமும் திறமையுமிருந்ததால் ஷாரிகா இரத்தினபுரி பிரதேசத்தில் அழகுகலை கலைஞராக பிரசித்தமானார்.
ஷாரிகா வீரரத்ன குணசேகர என்ற நாமம் இரத்தினபுரியில் வீட்டுப் பெயராக அமைந்தது. அப்பிரதேசத்தில் இளம் பெண்களை அழகுசெய்து அழகு பெறும் ஆலோசனை வழங்கி திருப்தியடைந்த காலம் மறக்கமுடியாதது என அவர் கூறியிருந்தாராம். இவருடைய எதிர்பார்ப்புகள் மரணத்தின் மூலம் தவிடுபொடியானது.
‘என் மகள் களுபோவிலை ஆஸ்பத்திரிக்கு என்னுடன் சென்றபோது சுகதேசியாக சென்றார். ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பும் போது அவர் சவப்பெட்டியில் வீட்டையடைந்தார் என ஷாரிகாவின் தாய் எம். கே. தயாவதி வேதனையுடன் கூறினார்.
ஷாரிகா களுபோவிலை போதனா வைத்தியசாலையில் தன் பருமனை குறைத்துக்கொள்வதற்காக அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். பருமன் குறைவதற்கு பதிலாக அவரது ஆயுள் இல்லாமல் போனது.
2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருபதாம் திகதி அதிகாலை 4.10 மணியளவில் ஷாரிகா இவ்வுலகை துறந்தார். மேற்கூறப்பட்ட திகதியிலிருந்து பத்து நாட்களுக்கு முன் தம் பெற்றோர் நண்பியுடன் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். என் மகள் அதிக பருமனாக காணப்பட்டார்.
2008ம் ஆண்டு பத்திரிகையொன்றில் பிரசுரமான கட்டுரையை வாசித்தபின் வைத்தியரொருவரை காணச் சென்றார். அறுவை சிகிச்சை சம்பந்தமான ஒரு வைத்தியரையும் தனியார் ஆஸ்பத்திரியில் சந்தித்தார். சிகிச்சையில் அவருக்கு மருந்து நியமிக்கப்பட்டது. அம்மருந்துகள் மூலம் பருமன் குறையவில்லை.
இவைபற்றி மகள் வைத்தியரிடம் தெரிவித்தார். இதன் காரணமாக ‘கெஸ்ட்ரோ பைபாஸ்’ என்று கூறப்படும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வைத்தியர் முடிவுசெய்தார்.
இந்த அறுவை சிகிச்சையென்பது உணவு நாளத்தை சிறிதாக்குவதாகுமென வைத்தியர் தெரிவித்தார். இதனால் மகள் இவ்வறுவை சிகிச்சைக்கு உடன்பட்டார். என ஷாரிகாவின் தந்தை எஸ். டபிள்யு. குணசேகர தெரிவித்தார் மேலும் அவர் கூறுவதாவது :-
2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி களுபோவிலை ‘ஆஸ்பத்திரிக்கு சென்றோம். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதினான்காம் திகதி அறுவை சிகிச்சைக்கான தினமென அறிவிக்கப்பட்டது.
இருபத்தெட்டு வயதுடைய என் மகள் ஷாரிகா இவ்வறுவை சிகிச்சை வெற்றியடையுமென நம்பியிருந்தார். களுபோவிலை அருகில் வசிக்கும் மகளின் நண்பியொருவர் ஆஸ்பத்திரியில் மகளுக்குதவினார். அருகில் தங்கியிருந்தார். இந்நண்பி சில காலங்களுக்கு முன் ஷாரிகாவின் மாணவியாயிருந்தவர்.
ஆஸ்பத்திரியில் கொடுக்கப்பட்ட திகதியின்படி ஷாரிகா 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்தாம் திகதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இன்னும் சில வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் அறுவை சிகிச்சைக்கு நான்கு நாட்களுக்கு முன் இவர் அனுமதிக்கப்பட்டார்.
மகளின் அறுவை சிகிச்சை வெற்றிகரமானதாக வைத்தியரொருவர் எமக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார். எலும்புகளுக்காக பெரும் தொகை செலவானதாகவும் அதனை தனக்கு தருமாறும் வைத்தியர் வேண்டினார்.
மகளின் நண்பியொருவர் பணத்தை எடுத்துச் சென்று ஆஸ்பத்திரியில் வைத்து வைத்தியரினால் அனுப்பப்பட்ட ஒருவரிடம் பணம் கையளிக்கப்பட்டது. பணம் பெற்றுக்கொண்டதாக எவ்வித பற்றுச்சீட்டும் எமக்கு கொடுக்கப்படவில்லை என்கிறார் ஷாரிகாவின் தந்தை.
ஷாரிகாவின் தந்தை எஸ். டபிள்யூ. குணசேகர கூறும் பணம் சம்பந்தமான விடயம் எமக்கு தெரியாது இவ்வாறான ஒரு செயல் அரச ஆஸ்பத்திரியில் நடந்துள்ளதாவென அலசிப் பார்ப்பது அதிகாரிகளின் கடமையாகும்.
பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்த பின் ஷாரிகா மேலதிக சிகிச்சைக்காக அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து என்ன நடந்ததென்பதை ஷாரிகாவின் தாய் எம். கே. தயாவதியிடம் கேட்டபோது அவர் பின்வருமாறு கூறினார்.
‘அறுவை சிகிச்சையின் பின் மகள் ஷாரிகா அதிதீவிர சிகிச்சை பிரிவில் நான்கு நாட்களிருந்தார். பதினெட்டாம் திகதியிரவு இரண்டாம் இலக்க பிரிவுக்கு மாற்றப்பட்டார். உதிரம், சிறுநீர் ஆகியவற்றை வெளியேற பொருத்தப்பட்டிருந்த நாளங்கள் அகற்றப்பட்டன.
எனக்கெட்டிய அறிவின்படி இவைகள் ஒரு வாரமாவது உடலிலிருந்திருக்க வேண்டும். இவைகளை அகற்றப்பட்டதும் மகளுக்கு சிறுநீர் கடுப்பு ஏற்பட்டது. சிறுநீர், இயற்கை கடன்களை கழிக்கும் போது உதிரம் அதனுடன் வெளியேறியது.
அடி வயிற்றில் தாங்க முடியாத வேதனையேற்பட்டது. நான் இவைபற்றி அறுவை சிகிச்சை வைத்தியரிடம் கூறினேன். அவர் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. வைத்தியர்கள் முயற்சி செய்திருந்தால் மகளை காப்பாற்றியிருக்கலாம்’ என்றார் தாய்.
ஷாரிகாவின் தந்தை எஸ். டபிள்யூ. குணசேகர, வைத்தியர்களின் கவனயீனம் என் மகளின் மரணத்துக்கு காரணமென குற்றம் சுமத்துகின்றார். மகள் இறந்த பின் சுமார் இருபத்தைந்து வைத்தியர்கள் ஆஸ்பத்திரியில் ஏதோ விசாரணைகள் நடத்தினர். மரணத்துக்கான காரணத்தை மரண விசாரணையின் மூலம் அறிய முடியவில்லை.
வடகொழும்பு போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி டி. எம். தர்மசிறியினால் மரண விசாரணை நடத்தப்பட்டது.
மரணத்தை பற்றி திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலதிக விசாரணைகள் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் இருபத்திரெண்டாம் திகதி வியாழக்கிழமை களுபோவில வைத்தியசாலையில் நடைபெறும். தன் ஒரே மகள் இறந்ததற்கு காரணம் வைத்தியர்களின் கவனயீனம் எனக் கூறும் ஷாரிகாவின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
நியாயமான விசாரணை நடத்தும்படி சுகாதார அதிகாரிகளிடம் வேண்டியுள்ளார். மகளுக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையை தனியார் தொலைக்காட்சி சேவையொன்று ஒளிப்பதிவு செய்ததாகவும் வியாபார நோக்குடன் வைத்தியர் இதனை செய்துள்ளதாகவும் தந்தை குற்றம் சுமத்தியுள்ளார்.
அறுவை சிக்ச்சையின் பின் மகள் ஷாரிகா வார்டிலிருக்கும் போதும் வீடியோ செய்யப்பட்டுள்ளதாகவும் தனக்கு வேதனையாயிருக்கிறது வீடியோ செய்யவேண்டாமென மகள் கூறியுள்ளதாயும் தந்தை குணசேகர தெரிவித்தார்.
அறுவை சிகிச்சை வெற்றியடைந்தால் நாட்டிற்கு தெரியப்படுத்தும் நோக்குடன் இவை ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் ஷாரிகாவின் மரணம் பற்றிய விசாரணையில் அந்த வீடீயோ நாடாவை உதவியாகப் பெறமுடியுமாயிருக்கும்.
களுவோவிலை ஆஸ்பத்திரியின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ‘லயனல் முஹன்திரம்’ கூறுவதாவது :-
இப்பெண்ணின் மரணத்தை கண்டறிய இன்னும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், உடல் பருமனை குறைக்க அதற்கான அறுவை சிகிச்சை பல மாதங்களாக களுவோவிலை ஆஸ்பத்திரியில் இலவசமாக செய்யப்படுவதாகவும் இதுவரை ஐம்பது அறுவை சிகிச்சைகள் வெற்றியளித்துள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
பாடசாலை காலத்தில் நர்த்தனக் கலையில் ஆர்வம் செலுத்தி பிரபல்யமான ஷாரிகா பல போட்டிகளில் கலந்து வெற்றிபெற்றுள்ளார். இவருடைய பருமன் இதற்கு இடைஞ்சலாயிருக்கவில்லை.
அழகியற் கலை கலைஞரான இவர் தேசிய மட்ட போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார். இரத்தினபுரியிலுள்ள ஆயிரக் கணக்கான மணமகள்களின் கலைஞராக விளங்கிய இவரின் பருமன் இதற்கும் இடையூறாகயிருந்ததில்லை.
இருப்பினும் தன் உடல் பருமன் தனக்கு இடைஞ்சலாகயிருப்பதை அவர் உணர்ந்திருக்கலாம் இதனால் அவர் நவீன வைத்திய முறையை நாடியுள்ளார். எங்கோ நடந்த தவறின் காரணமாக அவருடைய உயிரை காப்பாற்ற முடியவில்லை.
இவருடைய மரணமும் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட இன்னொரு மரணம் குறித்து ஆஸ்பத்திரியினதும் வைத்தியர்களினதும் கவனயீனமென உறவினர்கள் குற்றஞ்சாட்டியதற்கு ஆஸ்பத்திரி வட்டாரம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் இரண்டு மரணங்கள் பற்றியும் விசாரணைகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment