புதுக் கட்சி சீமான் இற்கு இந்தக் கதறல் கேட்கின்றதா?
அகதி முகாம் அலறல்! “காசேதான் கடவுளடா...”
தமிழக எம்.பி-க்கள் குழு, இலங்கையின் முள்வேலி முகாம்களில் அடைபட்டிருக்கும் தமிழர்களின் நிலையறிந்து தாயகம் திரும்பியிருக்கும் நிலையில்... இங்கிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளின் நிலையை அறிய மண்டபம் அகதிகள் முகாமை ஒரு வலம் வந்தோம். அங்கே 'காசேதான் கடவுளடா' கோஷம் ஓங்கி ஒலிப்பது கண்டு அதிர்ந்து போனோம்!
'இலங்கையே தேவலாம் போலிருக்கு..! ஆனா, இங்க நடக்குற எதையும் வெளியில் சொன்னா எங்க மேலயும் 'விடுதலைப் புலி'ன்னு முத்திரை குத்தி, சிறப்பு முகாமுக்கு அனுப்பிடுவாங்க. அதுக்கு பயந்தே நாங்க வாய் திறக்கிற தில்லை. எங்க போட்டோவையோ பெயரையோ போட்டுறாதீங்க...” என்ற பயம் கலந்த வேண்டுகோளுடன் அகதிகள் சிலர் நம்மிடம் பேசினார்கள்.
'சொந்தங்களையும் சொத்து சுகங்களையும் இழந் துட்டு நிர்க்கதியா நிக்கிறவங்க, உயிர் பிழைச்சுக் கெடப் போம்னுதான் இங்க அகதிகளா வந்திறங்குறாங்க. அப்படி வரும்போது படகோட்டிக்கு ஓர் ஆளுக்கு 30 ஆயிரம் வரை பணம் கொடுக்கணும். அப்படியே கொடுத்தாலும் நடுராத்திரியில இடுப்பளவு தண்ணியிலே எங்கள இறக்கி விட்டுட்டு போயிடுவான். வெளிச்சம் கிட்டிய பின் பார்த்தால் நாங்கள் ஏதாவது ஒரு திட்டில் இருப்போம். பிறகு, அங்கிருந்தும் காசு குடுத்துத்தான் நாங்க கரைக்கு வரணும்.
நாங்க தனுஷ்கோடிக்கு வந்துட்டோம்னு தெரிஞ்சாலே போலீஸ்ல இருக்கிற அத்தனை பிரிவுகளும் எங்களைத் தேடி வந்துருவாங்க. சிலர் எங்களோட பாக்கெட்டுகளை சோதிச்சு அதிலிருக்கும் முக்கியமான சாமான்களை எல்லாம் எடுத்துருவாங்க. அதை திருப்பிக்கேட்டா 'இயக்கத்துல இருந்தே என்று எழுதி சிறைக்கு அனுப்பிருவோம்'னு மிரட்டுவாங்க. முகாமுக்கு வந்த பின்னாடியும் எங்கள மூன்று நாட்கள் விசா ரணை என்று சொல்லி பிரிச்சு வெச்சிடுவாங்க.
அப்புறம்தான் எங்களுக்கு முகாம்ல வீடு கொடுப் பாங்க. அதுக்கப்புறம், தொட்டதுக்கெல்லாம் காசு தான். முகாமில் இருக்கும் ஆட்கள் எங்காவது வெளியே போக வேண்டுமென்றால் இங்குள்ள அதிகாரியிடம் அனுமதி வாங்க வேண்டும். அப்படி வெளியே செல்பவர்கள் கூடுதலான நாட்கள் வெளியில் தங்கியிருந்தாலும், ட்ரீட்மென்ட்டுக்காக வெளியூர் போனாலும் அந்த அதிகாரிக்கு பணம் கொடுக்கணும். எங்களுக்கான ரேஷன் கடையில் கூடுதலா பணம் குடுக்கிறவங்களுக்கு மட்டுமே நல்ல அரிசி குடுப்பாங்க் இல்லாட்டி பெரும்பாலும் நாத்த அரிசிதான்.
எங்களின் நடவடிக்கைகள் பற்றி விசாரிப்பதற்காக மாசத்துல நான்கு முறை தணிக்கை விசாரணை நடக்கும். இதில்லாமல் வி.ஐ.பி-க்களின் தமிழக விசிட்டின் போதும் ஸ்பெஷல் தணிக்கைகள் நடக்கும். தணிக்கை நடக்கும் நாட்களில் நாங்க யாரும் முகாமைவிட்டு வெளியே போகவே முடியாது. வெளியிடங்களுக்கு வேலைக்கும் செல்ல முடியாது. தணிக்கையின்போது எங்க ஆட்களை முகாமில் வேலை பார்க்கும் ஆட்கள், கொச்சையாக ஏசி அழைப்பார்கள். இதுக்காக நாங்க யாரும் கோபப்பட்டா, 'என்னடா முறைக்கிறே? செங்கல்பட்டுக்கு மாத்தி விடணுமாக்கும்'ன்னு அதட்டுவாங்க...” என்று துயரத்தோடு சொன்னவர்கள், தொடர்ந்து...
'முகாமுக்குக் கூடுதலான ஆட்கள் வந்துட்டா, இங்க ஏற்கெனவே இருக்கும் ஆட்களை வெளியூர் முகாம்களுக்கு அனுப்புறதுக்கு லிஸ்ட் எடுப்பாங்க. வெளிமுகாமுக்குப் போக விரும்பாதவங்க, முகாம் அதிகாரிகிட்ட பணத்தைக் குடுத்து லிஸ்ட்டுல இருந்து தங்களோட பேரை எடுத்துருவாங்க. அவங்களுக்கு பதிலா லிஸ்ட்டில் பெயர் இல்லாத ஆட்களை விரட்டிப் பிடித்து வலுக்கட்டாயமா அனுப்பி வைப்பாங்க. வெளிநாடுகளுக்கு செல்ல விசா வாங்கும் நடை முறைகளுக்காக ராம்நாடு கலெக்டர் ஆபீஸ் போனா, அங்க இருக்கும் சில அதிகாரிகளும் எங்களை பணம் பணம்னு அரிச்சுருவாங்க.
இதையெல்லாம்விட மோசம் என்னன்னா... எங்க பரிதாப நிலைமைய கண்டு மனசிரங்கிய விஜயகாந்த் உள்ளிட்ட சிலர் அரிசி, துணிமணிகளை பாக்கெட் போட்டு ஒரு குடும்பத்துக்கு ஒரு பாக்கெட் என கொடுத்தாங்க. இந்த முகாம்ல வேலை பார்க்குற சிலபேரு, ஒரு பாக்கெட்டை நாலா பிரிச்சு நாலு குடும்பத்துக்கு கொடுத்துட்டு மிச்சத்தை எடுத்துட்டுப் போயிட்டாங்க. இதைப் பத்தி ரெண்டு மாசத்துக்கு முந்தி கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். விசாரணை செஞ்ச கலெக்டர், முகாமில் நடந்த தவறுகளுக்கு காரணமா இருந்த ஓர் அதிகாரியை இங்கிருந்து மாத்திட்டாரு. அவர் போன பின்னாடி வெளி முகாம் களுக்கு ஆட்களைத் தூக்கி அடிக்கிற வழக்கம் நல்ல வேளையா நின்னுருக்கு. ஆனாலும், மற்ற பிரச்னைகள் இருக்கத்தான் செய்யுது...” என்றார்கள்.
அகதி மக்களின் புலம்பல்கள் குறித்து மண்டபம் முகாம் அதிகாரிகள் தரப்பில் கேட்டோம். 'நீங்கள் கேள்விப்பட்டது போன்ற பிரச்னைகள் இங்குள்ள அகதிகளுக்கு இப்போது இல்லை. ரேஷனில் அரிசி உள்ளிட்ட எல்லாப் பொருட்களுமே தரமாகத்தான் வழங்கப்படுகிறது. இதுபற்றி மாதம்தோறும் ஆய்வும் நடத்தப்படுகிறது. கையூட்டு மற்றும் வெளிமுகாம் களுக்கு ஆட்களை அனுப்புவது குறித்த புகார் சில மாதங்களுக்கு முன் இருந்தது. அதற்குக் காரணமாக இருந்த அதிகாரி, தற்போது மாற்றப்பட்டு விட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த அகதி ஒருவரும் வேறு முகாமுக்கு மாற்றப்பட்டு விட்டார்” என்று சொன்னார்கள்.
(நன்றி;: விகடன்)
0 விமர்சனங்கள்:
Post a Comment