பிரபாகரன் டெத் சேர்டிபிகேட் எங்கே? - இலங்கை சென்று வந்த தமிழ்நாடு எம்பி தரும் தகவல்
அண்மையில் இலங்கைக்குச் சென்று திரும்பிய தமிழக எம்.பி-க்கள் குழுவில் காங்கிரஸ் எம்.பி-யான கே.எஸ்.அழகிரியும் ஒருவர். அந்தப் பயணத்தை சகல ஊடகங்களும் அங்குலம் அங்குலமாக அலசி வெளியிட்டு வரும் நிலையில்... கே.எஸ்.அழகிரி தன் கோணத்தில் அந்தப் பயணத்தைப் பகிர்ந்துகொண்டார்.
'நம் நாட்டு அதிகாரிகள் பிரபாகரன் டெத் சேர்டிபிகேட்டை பலமுறை கேட்டும் தராமல் இலங்கை அரசு இழுத்தடிக்கிறதாமே... இது பற்றி உங்கள் குழுவினர் விசாரித்தார்களா?”
'இலங்கை அதிபரின் அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்ஷேவிடம், பிரபாகரனின் டெத் சேர்டிபிகேட் குறித்து நான் கேட்டேன், 'எங்கள் நாட்டில் இது போல டெத் சேர்டிபிகேட் தருவதில் சில பிரச்னைகள் உண்டு. சுனாமி வந்தபோது மொத்தமாக மக்கள் மாண்டு போய்விட்டனர். அவர்களுக்கான டெத் சேர்டிபிகேட் தர ஒரு சட்டம் போடப்பட்டது. அது காலாவதியாகி ஒரு வருஷமாகி விட்டது. பிரபாகரன் விஷயத்திலும் ஒரு சட்டம் போட வேண்டும்' என்றார் அவர். பிரபாகரன் மனைவி மதிவதனி மற்றும் மகன் நிலை குறித்துப் பேசும்போது, 'அவர்கள் எங்கள் கஸ்டடியில் இல்லை. அவர்களைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. அதே சமயம், பொட்டு அம்மான் உடலை எங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அவர் தப்பிப் போயிருக்க சான்ஸே இல்லை” என்றார்.
'போரில் புலிகள் தோல்வி அடைந்தது ஏன் என்று அங்கே விசாரிக்க முடிந்ததா?”
'இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலரிடம் இது பற்றிப் பேசினேன். புலிகள் ராஜீவ் படுகொலையை நடத்தியதால், உலக அளவில் அந்த இயக்கத்துக்கு இமேஜ் பெரிய அளவில் சரிந்துவிட்டது. அமைதிவழிப் பேச்சுவார்த்தையில் புகழ்பெற்ற அமிர்தலிங்கம் கொலையின்போதே புலிகளின் மரியாதை விழுந்துவிட்டது. மேற்கத்திய நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் பலரும் இந்த கோரக் கொலைகளைத் தொடர்ந்து புலிகளுக்கு அது வரை வழங்கி வந்த மானசீக ஆதரவை நிறுத்தி விட்டனர். அடுத்தடுத்து நடந்த ஏராளமான படுகொலை சம்பவங்களால் 'போராளி' என்கிற பேனர் 'பயங்கரவாதி' என்ற பேனராக மாறிவிட்டது.
அம்பாறை அருகே முஸ்லிம்களை 24 மணி நேரத்தில் வெளியேறும்படி புலிகள் பெயரில் முன்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. 'முஸ்லிம்களுடன் நல்ல நட்பில் இருந்த புலிகள் ஏன் இதை செய்யப்போகிறார்கள்? யாரோ விஷமிகள்தான் இப்படிச் செய்திருப்பார்கள்' என்று முஸ்லிம்கள் உறுதியாக நம்பினார்கள். ஆனால், உலகத்திலேயே எங்கும் நடக்காத கொடுமையாக மூன்று மசூதிகளில் புலிகள் அதிரடியாகப் புகுந்து 240 நபர்களைக் கொன்று குவித்தனராம். இது உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் மத்தியில் கடுங் கோபத்தை உண்டாக்கிவிட்டது.
தமிழ் ஆதரவு சிங்களத் தலைவரான ரணில், அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், எந்த கட்சிக்கும் ஓட்டுப் போடக்கூடாது என்று புலிகள் தமிழர்களை தடுத்தனர். ஒருவேளை அவர்கள் வாக்களித்திருந்தால் ரணில் ஜெயித்திருப்பார். இந்நேரம் பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாக பிரச்னையைத் தீர்த்திருப்பார். புலிகளின் செயலால் ரணிலும் தோற்றுவிட்டார்.
இதெல்லாம்தான் புலிகள் தோல்வியைத் தழுவ முக்கியக் காரணங்கள் என்று எங்களிடம் சொன்னார்கள்!”
'பிரபாகரனின் கடைசி நிமிடங்கள் பற்றி புதிய தகவல் ஏதும் கிடைத்ததா?”
'அங்கே எனக்குக் கிடைத்த தகவல் இப்படி இருக்கிறது...
பிரபாகரன் இறப்பதற்கு முந்தின நாள் இரவு 12மணிக்கு நடேசன், தொலைபேசியில் பசில் ராஜபக்ஷேவிடம் பேசினாராம். போரை முடிவுக்கு கொண்டுவந்துவிடலாம் என்று அவர் கேட்டுக் கொண்டாராம். இதே விஷயத்தை மறுநாள் நார்வே தூதரகத்தில் இருந்தும் போன் மூலம் சொன்னார்களாம். பசிலும் நடேசன் தரப்பினரை சந்திக்க ஏற்பாடு செய்தாராம். அவர்களின் வரவை சிங்கள ராணுவம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்... வேனில் வந்த புலிகள் ராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்களாம். இந்த சம்பவத்தால் ராணுவத்தினரின் கவனத்தைத் திசைதிருப்பி, பிரபாகரன் உள்ளிட்ட சிலர் கடலில் புதுவழி ஏற்படுத்தி தப்பிக்க ரகசியத் திட்டமிட்டிருந்ததாக ராணுவத்துக்குத் தகவலும் வந்ததாம். இது மாதிரி ஏதாவது திசைதிருப்பும் செயலில் புலிகள் ஈடுபடுவார்கள் என்பதை முன்கூட்டி எதிர் பார்த்தே, கடல்பகுதிகளில் ஏழு அடுக்கு பாதுகாப்பு வளையங்களை ராணுவத்தினர் செய்திருந்தனராம். இதன் தொடர்ச்சியாகவே, பிரபாகரன் தப்பிக்கும்போது சுடப்பட்டு இறந்தார் என்கிறது அந்தத் தகவல்!.”
'எம்.பி.க்கள் குழு இலங்கை சென்று திரும்பிய பிறகு, முகாம்களில் உள்ள தமிழ் மக்களை சொந்த இருப்பிடத்துக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளதாக தகவல் வருகிறதே... இது எந்தளவுக்கு திருப்தியான நடவடிக்கை?”
'இலங்கை அரசு இன்னும்கூட வேகமாக இதை செய்திருக்க முடியும். இப்போது முகாம்களில் இருப்பவர்களில், 'புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஊடுருவித் தங்கி இருக்கிறார்களா?' என்பதை சல்லடை போட்டு ராணுவத்தினர் தேடுகிறார்கள். பலர் தங்களின் சொந்த முகவரியை ஏனோ மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை தனிமைப்படுத்தி ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று அதிகாரிகள் விசாரித்து வருகி றார்கள். மேலும், புலிகள் பல இடங்களிலும் புதைத்து வைத்திருக்கும் ஆயுதங்களைத் தற்போது தோண்டி எடுக்கிறார்கள். அதை முழுமையாக அகற்றாவிட்டால், மீண்டும் அங்கே குடியேற்றம் செய்யப்படுகிறவர்களில் சிலர் அந்த ஆயுதங்களைத் தோண்டி எடுத்து ராணுவத்துக்கு எதிராக பயன்படுத்தக் கூடும் என்று நினைக்கிறது இலங்கை அரசு. மூன்றாவது காரணம், புலிகள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது. இந்த காரணங்களால்தான் தாமதம் ஏற்படுவதாகச் சொல்கிறது இலங்கை தரப்பு!” என்று முடித்தார் கே.எஸ்.அழகிரி.
0 விமர்சனங்கள்:
Post a Comment