நெதர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கையரை நாடு கடத்த ஏற்பாடு
நெதர்லாந்து நாட்டில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட இலங்கையர்கள் நாடுகடத்தப்படவுள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடாக அவர்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள மனித உரிமை மீறல் நிலைவரங்களைக் கவனத்தில் கொள்ளுமாறும் அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களை நாடு கடத்தவேண்டாம் என்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் சட்டத்தரணிகள் நெதர்லாந்து அரசைக் கேட்டிருக்கின்றனர்.
இவ்வாறு கேட்டிருந்தும் கூட அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த ப.தர்ஷன் என்ற இளைஞரை அதிகாரிகள் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வலுக்கட்டாயமாக நாடு கடத்த முற்பட்டவேளை, அந்நாட்டு நீதிமன்றத்தின் தலையிட்டு அம்முயற்சியை தடுத்துள்ளது. குறிப்பிட்ட இளைஞர் விமான நிலையம் வரை கொண்டு செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்து அரசின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் புதன்கிழமை வெளியான செய்தியிலும் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் அகதி அந்தஸ்து கோரிய 53 இலங்கையர்கள் பராமரிப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும், கடந்த 2008 ஆம் ஆண்டு மட்டும் இலங்கையைச் சேர்ந்த 216 பேர் அகதி அந்தஸ்து கோரியிருக்கின்றனர் என்றும் நெதர்லாந்து அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
0 விமர்சனங்கள்:
Post a Comment