பல்வேறு கருத்துக்களுடன் வந்தோம் ஆரோக்கியமாக நாடு திரும்புகின்றோம்-ஜனாதிபதியுடனான சந்திப்பில் இந்திய எம்.பி.க்கள் தெரிவிப்பு
இலங்கையின் நிலைமை தொடர்பில் பல்வேறு கருத்துக்களுடன் வருகைதந்த நாங்கள் வடக்கின் உண்மை நிலைமையை பார்த்தபின் ஆரோக்கியமான எண்ணங்களுடன் நாடுதிரும்புகின்றோம் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனது என்று ஜனாதிபதி ஊடக பிரிவின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுநடத்தியுள்ளது. இந்த சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.
சந்திப்பின்போது இடம்பெயர்ந்தோர் விவகாரம் மற்றும் அரசியல் தீர்வு விடயம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. வடக்கின் நிலைமையை பார்வையிடுவதற்காக தமக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக இதன்போது இந்திய எம்.பி. க்கள் குழு தெரிவித்துள்ளது. மேலும் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றும் நோக்கில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியவை என்றும் இந்திய எம்.பி. க்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக கூறினார். மேலும் சந்திப்பின்போது அரசியல் தீர்வு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. எவ்வாறான தீர்வாக அமைந்தாலும் அது அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி கொழும்பு பகுதியில் 65 வீதமான தமிழர்கள் வாழ்வதாக கூறினார். எதிர்வரும் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் நலன்புரி முகாம்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பில் திருப்தியடைய முடியும் என்று தமிழக எம்.பி. க்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் சில தினங்களில் அதிகமான மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய எம்.பி. க்களின் இலங்கை விஜயத்துக்காக நன்றி தெரிவித்த ஜனாதிபதி இதன்மூலம் தவறான பிரசாரங்கள் குறித்து தெளிவடைய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Virakesari
0 விமர்சனங்கள்:
Post a Comment