“கல்லறைகளை அகற்றுவதை” நான் பாரதூரமான விடயமாகக் கருதவில்லை.
இலங்கையில் இருந்த இந்த ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த புள்ளியாக புதுமாத்தளன் பிரதேசம் கருதப்படுகிறது. அந்தப் பிரதேசம் கட்டிக் காக்கப்பட வேண்டிய பிரதேசம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். “கல்லறைகளை அகற்றுவதை” நான் பாரதூரமான விடயமாகக் கருதவில்லை.
பி.பி.ஸிக்கு நேற்று அளித்த விசேட பேட்டியில் தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு, “யுத்தத்தை வென்ற இடமாக புதுமாத்தளன் பார்க்கப்படுகின்றதே தவிர தமிழர்களை வென்ற இடமாகவோ, தமிழர்களைக் கொன்று குவித்த இடமாகவோ இது பார்க்கப்படவில்லை. ஏனென்றால் ஆயுதப்போர் முடிவுற்ற இடமாகவே புதுமாத்தளன் பிரதேசம் பார்க்கப்படுகிறது. ஆகவே ஜனாதிபதி புதுமாத்தளன் பகுதியில் திறந்து வைத்த நினைவுத் தூபி தமிழ் மக்களுக்கு எதிரான ஓர் விடயமாக கருதமுடியாது.”
கே: புலி உறுப்பினரது மாவீரர் துயிலும் இல்லங்களை அகற்றி வேறு அரச தேவைகளுக்காக பயன்படுத்தி வருவதென்பது ஒரு தேசிய நல்லினக்கத்தை எவ்வாறு உருவாக்கும்?
ப: இதை நாங்கள் விரிவாகப் பார்த்தால் தெரியும் இந்தப் போராட்டமானது தமிழர்களின் விடிவிற்காக ஆரம்பத்தில் தொடங்கப்பட்டாலும் சில தலைவர்களின் தவறுகள் காரணமாக இது ஒரு பயங்கரமாக மாற்றப்பட்டது. தொடர்ந்து இது தமிழர்களுக்கு எதிரான ஒரு போராட்டமாக மாறிவிட்டது. ஏனெனில் இறுதிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு இடம்பெற்ற இன்னல்கள் இந்தப் போராட்டத்தை கொச்சைபடுத்தி விட்டது என்று தான் கூறவேண்டும். ஆகவே கடந்த காலத்தில் இடம்பெற்றது ஓர் அழிக்க முடியாத வடுக்கள்தான். இருந்தாலும் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை நினைவு படுத்துகின்ற அல்லது ஒரு ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கும் வகையில் மக்கள் தயாராக இல்லை. இன்று சிறந்த முறையில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கு கிழக்கிலே நடைபெற்று வருகின்றன. ஆகவே மக்கள் போர் அற்ற சூழ்நிலையில் ஒருமித்த இலங்கையில் வாழ வேண்டும் என விரும்புகிறார்கள்.
கே: கல்லறைகளை அழித்து கல்லறைகளைத் தோண்டுவது ஒரு நாகரீகமான செயலாகப் பார்க்கப்படும் என்று நினைக்கிறீர்களா?
ப: ஆம். நாங்கள் இதைப் பல கோணங்களிலே பார்க்க வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலையில் மீண்டும் இதை ஒரு கருப்பொருளாகக் கொண்டு தமிழ் மக்களின் மனதில் கசப்புணர்வைத் தூண்ட விரும்பவில்லை. ஏனெனில் இறுதிக்காலத்தில் புலிகளின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக பாரிய தவறான செயற்பாடாகவே நான் கருதுகிறேன். இந்தக் கல்லறைகள் மீண்டும் ஒரு போரை நினைவு படுத்தும் இடமாக அரசினால் கருதப்பட்டுத்தான் அகற்றப்பட்டது. வேறு கோணத்தில் இதை அணுகலாம் என நான் ஆலோசனை வழங்கியிருந்தேன். அன்றிருந்த சூழ்நிலையில் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
கே: கல்லறைகளை அகற்றும் விடயம் என்பது கூட உணர்வுகளை தூண்டும் ஓர் விடயமாகத்தானே அமைகிறது?
ப: இது ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய விடயமாக இருந்தாலும் உக்கிரமான போர்க கட்டத்தில் அடித்து நொருக்கி முன்னோக்கிச் சென்றார்கள். என்னைப் பொறுத்த வரையில் தனிப்பட்ட ரீதியாகப் பார்க்கும் போது ஓர் பாரிய விடயமாக நான் அதைப் பார்க்கவில்லை. ஆனாலும் அந்த மாவீரர் கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்த விதங்கள் ஒரு காலத்தில் உணர்வினைத் தூண்டும் என்பதில் அரசுக்கு நிச்சயமான ஒரு சந்தேகம் இருந்தது.
கே: போரில் இறந்த அப்பாவி தமிழ் மக்களுக்கும் புதுமாத்தளன் பகுதியில் இராணுவத்தினருக்கு அமைக்கப்பட்ட நினைவுத் தூபியைப் போன்றொரு நினைவுத் தூபி எழுப்பப்படலாம் தானே?
ப.: போரில் இறந்த அப்பாவிப் பொது மக்களுக்கு என்னைப் போன்ற தமிழ் அரசியல்வாதிகள் நினைவுத் தூபியினை எழுப்ப வேண்டும். எனினும் மட்டக்களப்பு பகுதிகளில் மக்கள் படுகொலை செய்யப்பட்ட இடங்களில் நினைவுத் தூபிகளை எழுப்பி இருக்கின்றோம். எதிர்காலத்தில் நாங்கள் நிச்சயமாக போரில் இறந்த அப்பாவித் தமிழ் மக்களுக்கு நினைவுத் தூபிகளை எழுப்புவோம். என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment