புலி இயக்கம் தூளாகும் இயக்கம் - பாழாகும் தியாகம்
'இயக்கத்தையும் இனத்தையும் பகுதி பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ கூறு போட்டு விற்றுவிடாதீர்கள்!' என்று வெப்ப வார்த்தைகளை உமிழ்ந்திருந்தாராம் பிரபாகரன். இன்று சில புலிப் போராளிகள் செய்து வரும் காரியங்களைப் பார்த்தால், அது உண்மையில் நடந்துவிடும்போலத்தான் தெரிகிறது.
புலிகள் அமைப்பை வெளிப்படையாக ஆதரித்துப் பேசும் வைகோ, நெடுமாறன் போன்ற தலைவர்கள்கூட, 'வீண் குழப்பங்களை ஏற்படுத்துபவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்' என்று எச்சரிக்கை விடுக்கத் தவறுவது இல்லை. அந்த அளவுக்கு புலிகளை மையப்படுத்திய உச்சகட்டக் குழப்பங்கள் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் மத்தியில் உதித்திருக்கின்றன. 'எது நிஜப் புலி?' என்ற கேள்விக்கான விடை தேடும் படலத்தில் இறங்கி, பலரும் களைத்தும் சலித்தும் போயிருக்-கிறார்கள்.
மே 18-ம் தேதி புலிகள் அமைப்பை முழுமையாக முடித்துவிட்டதாக ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஷே அறிவித்தார். தலையில் ஆழ்ந்த வெட்டுக்காயத்துடன் 'பிரபாகரனின் சடலம்' காட்டப்பட்டது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றார், கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராசா பத்மநாபன். இருக்கிறார் என்று புலிகளின் புலனாய்வுப் பிரிவு சார்பில் அறிவழகனும் அறிவித்தார். அடுத்த சில நாட்களில் பிரபாகரன் இல்லை என்று கே.பி. அறிவித்தார். ஒரு மாதம் கழித்து அதை அறிவழகனும் ஒப்புக்கொண்டார். புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் இது எதையும் நம்பவில்லை. பிரபாகரன் இருக்கிறார் என்றே நினைத்தார்கள். பலர் நினைக்கிறார்கள்!
பிரபாகரன் எப்போதும் மறைந்து வாழ்ந்த மனிதர். அவரை ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினத்தன்று மாலை 5.30 மணிக்குதான் அனைவரும் 'திரையில்' பார்க்க முடியும். எனவே, நவம்பர் 27-ம் தேதிக்காக அனைவரும் காத்திருந்தார்கள். ஆனால், திரையில் அவர் வரவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. அதே நேரத்தில், இன்னோர் குரல் வேறு ஓர் இடத்தில் இருந்து பேசியது. இரண்டு பேரும் சொன்ன செய்திகள் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டவை. அப்படியானால், எது உண்மையான 'புலிகளின் குரல்?' என்ற கேள்விக்கான விடை காண முயற்சித்தபோது குழப்பங்கள் அதிகரித்தனவே தவிர, குறையவில்லை.
விசுவநாதன் உருத்திரகுமாரன், காஸ்ட்ரோ அணியினர், கதிர்காமத் தம்பி அறிவழகன், ராம் ஆகிய நான்கு பேர் நாலா திசையிலும் பயணித்து, இந்த உள்குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
எல்லாம் முடிந்தது என்று அறிவிக்கப்பட்ட மே மாதத்தின் கடைசியில் தயா மோகன் என்பவர் யாழ்ப்பாணம் மாவட்டத் தாக்குதல் தளபதியாகத் தன்னைப் பிரகடனப்படுத்தினார். 'நான் காட்டுக்குள்தான் இருக்கிறேன். நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கான கட்டளைக்காகக் காத்திருக்கிறேன்' என்று தயா மோகன் அறிவித்து, பரபரப்புக் கிளப்பினார். கே.பி. மட்டும்தான் புலிகளுக்கான ஆளாக வெளிப்படையாக இயங்கி வந்த நேரம் அது. திடீரென்று மலேசியாவில் தயா மோகன் காட்சியளித்தார். காட்டுக்குள் இருந்தவர் எப்படி மலேசியாவுக்குப் போக முடிந்தது என்று சந்தேகம் கிளம்பியது. 'அரசாங்கத்தின் தயவு இல்லாமல் அவரால் வெளியேறி இருக்க முடியாது. இவர் ராணுவத்தின் வழிகாட்டுதலில் முஸ்லிம் பெயரில் பாஸ்போர்ட் எடுக்கப்பட்டு மலேசியா வந்தடைந்தார். அவர் கே.பியை மலேசியாவில் சந்தித்தார். அவர் இவருக்கு வீடு எடுத்துக் கொடுத்தார். தயா மோகனைப் பலரும் சந்தித்தார்கள். புலிகளின் தலைமைக் கமிட்டிக் கூட்டம் இவர்களைவைத்து நடந்தது. ஆனால், இவை அனைத்தும் ரகசியமாக இல்லாமல் இந்திய, இலங்கை, மலேசிய உளவுத் துறைக்குத் தெரிவது மாதிரிதான் நடந்தது. கடைசியில், கே.பியைக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு செல்வதில் முடிந்தது இது.
'காட்டில் இருந்து போர் செய்யப்போவதாக அறிவித்த தயா மோகன், மலேசியாவில் வந்ததில் தொடங்கி கே.பி. கைது வரை அனைத்தும் சிங்கள புலனாய்வுத் துறையின் ஏற்பாட்டில் செய்யப்பட்டவைதான்' என்ற சந்தேகம் பலமாகப் பரவி இருக்கிறது. இப்படிப்பட்ட தயா மோகன் தலைமையில் ஓர் அணி, ராணுவத்தின் பாதுகாப்புடன் கருணா வழிகாட்டுதலில் இயங்கி வருவதாகச் சொல்லப்படுகிறது.
அடுத்ததாக ராம் என்பவர் காட்டப்படுகிறார். நவம்பர் 27-ம் தேதி ராம் படத்தைப் போட்டு பின் குரலாக ஒரு பேச்சு ஒலி பரப்பானது. 'தந்தையை இழந்த குடும்பம் போன்று, எம்மை வழிநடத்தி வழிகாட்டிய தேசியத் தலைவரை இழந்து நிற்கிறோம். தலைவரின் கனவை நனவாக்குவதற்கு எமது தாய் மண்ணில் நானும் எஞ்சியுள்ள ஏனைய தளபதிகளும் கால் பதித்து நிற்கிறோம். கடந்த காலங்களில் பல்வேறு வழிகளில் நிதி உதவி வழங்கிய அன்பு உள்ளங்கள் தொடர்ந்து அந்த உதவியை வழங்க வேண்டும். 400 சதுர கி.மீ. முற்றுகைக்குள் இருந்து தேசியத் தலைவர் அவர்கள் 17.05.2009 அன்று பிற்பகல் இறுதியாக எனக்கு ஒரு செய்தியைக் கூறினார். 'இந்தச் சூழலில் இருந்து நாம் மீள முடியாத நிலையில் உள்ளதால் இறுதிக் கணம் வரை போராடி எம்மை அழித்துக்கொள்ள முடிவெடுத்து உள்ளேன். எனவே, இந்த 30 வருட காலப் போராட்டத்தின் தொடர்ச்சி யையும் எமது மாவீரர் விட்டுச் சென்ற பணியையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுங்கள்' என்று தேசியத் தலைவர் எனக்குப் பணித்தார். இத் தொடர்ச்சியை எவ்வாறு கொண்டுசெல்ல வேண்டும் என்ற திட்டத்தையும் என்னிடம் கூறியிருந்தார்' என்று பீடிகை போட்டிருந்தார் ராம். இந்த ராம்தான் உண்மையான அணி என்று நம்பி பலரும் பணம் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால், ராம் குறித்து தமிழீழ புலனாய்வுப் பிரிவு என்ற பெயரால் ஓர் அறிக்கை உலவுகிறது. அநேகமாக அது கதிர்காமத் தம்பி அறிவழகன் அணியின் அறிக்கையாக இருக்கலாம். மட்டக்களப்புத் தளபதியாக இருந்த பிரபா என்பவர் வவுனியாவில் பதுங்கியிருந்தார். தன்னை மட்டக்களப்புக்குக் கொண்டுபோய் விடச் சொல்லி, தவேந்திரன் என்ற போராளிக்குச் சொல்லியிருக்கிறார். பிரபாவை அழைத்துக்-கொள்ள 'ரகசிய' வாகனம் வந்தது. ஓடிப் போய் அதில் பிரபா உட்கார்ந்தார். அதன்பிறகுதான் அதிர்ச்சி! உள்ளே இருந்தவர்கள் அனைவரும் இலங்கை ராணுவப் புலனாய்வு அதிகாரிகளாம். தவேந்திரன் ஏற்கெனவே ராணுவத்தில் சரணடைந்தவர். பிரபா, தவேந்திரனை வைத்துதான் இந்த ராமை ராணுவம் மடக்கியிருக்கிறது. தன்னை மட்டக்களப்புப் பகுதிக்குக் கொண்டுபோய்விட பிரபாவிடம் கேட்டிருக்கிறார் ராம். அதே மாதிரி வாகனம் வந்தது. உள்ளே இருந்தவர்கள் அனைவரும் சிங்கள ராணுவ அதிகாரிகள். சிக்கிக்கொண்டார் ராம். அவரைவைத்து ஒரு போலி புலி இயக்கத்தை நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
தாங்கள் காட்டில் இருப்பதாகச் சொல்லியே இவர்கள் வெளிநாட்டுத் தமிழர்களுக்குப் பேசியிருக்கிறார்கள். நான்கு மாதங்கள் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரவில்லை. செப்டம்பர் மாதம் சிங்கள ராணுவத்தால் ராம் கைது செய்யப்பட்ட தகவல் பரவியது. நவம்பர் 5-ம் தேதி அவர் தப்பிவிட்டதாகச் சொல்லப்பட்டது. 10-ம் தேதி அவர் கைதானதாகவும் கூறப்பட்டது. தான் தப்பிய தகவலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு ராம் சொல்லியிருக்கிறார். சந்தேகக் குறியைப் போட்டு அவர்கள் நடத்திய தகவல் வேட்டையில் அத்தனையும் வெளியாகி உள்ளது. இதன் உச்சகட்டமாக 'நான்தான் அடுத்த தலைவர்' என்று ராம் அறிவித்துள்ளார். இவர் இப்படி செய்யப் போகிறார் என்பதை கதிர்காமத் தம்பி அறிவழகனும் முன்னமே அறிவித்தார். ஆனாலும், ராம் தலைமையில் கணிசமான புலிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சிங்களப் பத்திரிகைகளின் கணக்குப்படி வடகிழக்கு காடுகளில் சுமார் இரண்டாயிரம் புலிகளுக்குள் இருக்கலாம் என்று எழுதப்படுகிறது. இவர்களை கடைசிக் கட்டத் தாக்குதலின்போது முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வர வேண்டாம் என்று பிரபாகரன் சொல்லியிருந்ததால், அந்தந்தப் பகுதியில் தங்கியவர்கள் இவர்கள். தடியெடுத்தவன் தண்டல் காரன் என்பது மாதிரி இவர்கள் தண்ணீர் தெளித்துவிடப்பட்டுள்ளார்கள். ராணுவத்திடம் சரண் அடைந்தவர்களுக்கும் ஆயுதங்களை மறுபடியும் கொடுத்து காட்டுக்குள் 'சும்மா' இருத்தி வைத்திருக்கிறார்களாம். வேறு புலிகள் வந்தால் இரு தரப்பையும் மோதவிடும் தந்திரம்தான் இதற்குக் காரணம். சரண் அடைந்தவர்களை வைத்து அமைப்புகளை ஆரம்பிக்கும் வேலையை கருணா செய்து வந்தார்.
ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்னால் கொழும்புவில் சென்றுகொண்டு இருந்த அவரது வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கருணா தப்பினார். அதிலிருந்து வீட்டை விட்டு அவர் வெளியில் வராமல் முடங்கிவிட்டாராம். டக்ளஸ் தேவானந்தாவும் இரண்டு மாதங்களாக யாழ்ப்பாணத்திலேயே தங்கிவிட்டாராம். கொழும்புத் தொடர்புகளைக் குறைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. புலி ஆதரவாளர்களைப் பிளவுபடுத்தும் காரியங்களை இவரும் அதிகமாகக் கவனித்து வருகிறார்.
ஈழத்தில் இப்படிப்பட்ட குழப்பங்கள் இருந்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இன்னும் அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே கே.பி. அணி என்றும் காஸ்ட்ரோ அணி என்றும் பிரிந்திருந்தவர்கள் அவர்கள். கே.பி. வெளிநாட்டுப் பொறுப்பாளராக இருந்து பிரபாகரனால் நீக்கப்பட்ட பிறகு காஸ்ட்ரோ அணியின் கை ஓங்கியது. மே மாதத்துக்குப் பிறகு கே.பி. முக்கியமானவராகக் கருதப்பட்டார். அவரது கைதுக்குப் பிறகு உருத்திரகுமாரனைச் சொல்கிறார்கள். 'நாடு கடந்த தமிழீழம் அமைப்போம்' என்ற முழக்கத்துடன் இவர் குதித்திருக்கிறார். 'போராட்ட வடிவங்கள் மாறினாலும் குறிக்கோள் ஒன்றுதான் என்று சுதுமலைக் கூட்டத்தில் தலைவர் சொன்னார். அதன்படி நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வெளியே அரசியல் வெளி உருவாக்கப்பட வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்கு புலம் பெயர்ந்த மக்களில் ஒரு பிரிவினர் உற்சாகம் இல்லாமல்தான் ஆதரவு காட்டுகிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் இவரை அங்கிருக்கும் ஈழத் தமிழர்கள் மட்டும் ஆதரிக்கிறார்கள். நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு அமைப்பாளர் என்று இவர் தன்னைத்தானே அறிவித்துக்கொள்கிறார்.
ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் செல்வாக்கு உள்ள பிரிவாக காஸ்ட்ரோ அணி இயங்குகிறது. நவம்பர் 27-ம் தேதி, மாவீரர் தினத்தன்று வாசிக்கப் பட்ட தலைமைச் செயலக அறிக்கை காஸ்ட்ரோ அணியினரின் தயாரிப்பாகவே சொல்லப்படுகிறது. 'சிறீலங்கா ராணுவத்தை எதிர்த்து எமது இயக்கம் தற்காப்புச் சமர் மட்டும்தான் நடத்தியது. யுத்தத்தை நிறுத்தும்படியும் அமைதிப் பேச்சுக்களைத் தொடங் கும்படியும் நாம் சொல்லி வந்தோம். எமது சக்திக்கு மீறிய வகையில் வல்லாதிக்கங் களின் கரங்கள் சிங்கள அரசைப் பலப்படுத்தின. எமது மக்களை மிகப் பெரும் மனிதப் பேரழிவில் இருந்து பாதுகாக்கப் பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளையே சிங்களத் தரப்பும் நடுவர்களாகச் செயல்பட்டவர்களும் முன்வைத்தார்கள். இது எமக்கு மிகவும் ஆழ்ந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இம் மனிதப் பேரழிவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஓரிரு நாட்களுக்குள் கொன்று அழிக்கப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து எமது அரசியல் ராஜதந்திர நகர்வுகளைச் சர்வதேசத்தில் விரிவாக்கிக்கொண்டு இருக்கிறோம். எமது அமைப்பின் அரசியல் கட்டமைப்பை வெளிநாடுகளில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்' என்று இதில் சொல்லப்பட்டது. இறுதியாக 'தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் தொடர்ந்து போராடி, தமிழீழத் தனியரசைக் கட்டியமைப்போம்' என்று முடிகிறது.
'வழிகாட்டல்' என்ற வார்த்தை நிஜமாகவே அறிக்கையில் இருந்ததா என்ற குழப்பத்துக்கு இதில் விடை இல்லை.
மறைந்துபோன மாவீரர் பட்டியலில் இவர்கள் பிரபாகரனை இணைக்கவில்லை! இதைத்தான் 'உண்மையான' இயக்கமான ஐரோப்பியத் தமிழர்கள் நம்புகிறார்கள். இதன் பின்னணியில் கதிர்காமத் தம்பி அறிவழகன் இருக்கிறார் என்றால், 'பிரபாகரன் இறந்துவிட்டார்' என்று அவர் மாவீரர் உரையில் ஏன் குறிப்பிடவில்லை என்பது தெரியவில்லை. அனைத்துக்கும் மேலாக 'தமிழ்நாட்டு உடன்பிறப்புக்களே' என்ற வார்த்தை வருகிறது. பொதுவாக, 'தமிழக உறவுகளே' என்றுதான் மாவீரர் உரையில் இடம்பெறும். புதிதாக உடன்பிறப்புக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
இப்படிப் பலவாறாகப் புலிகள் இயக்கம் சிதறிக்-கொண்டு இருப்பதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன. 'எத்தனை உயிர்கள் போயிருக்கும். எத்தனை குடும்பங்கள் நிர்கதி ஆகியிருக்கும். இத்தனை ஆண்டு காலத் தியாகமெல்லாம் இந்தச் சிதறலுக்காகத்தானா?' என்ற கவலை தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் ஓங்கியே ஒலிக்கிறது!
(ப.திருமாவேலன்) (ஆனந்த விகடன்)
0 விமர்சனங்கள்:
Post a Comment