குண்டுகள் ஓய்ந்து பட்டாசு வெடிகளால் அதிர்ந்த யாழ்ப்பாணம்
குண்டுச் சத்தங்கள் ஓய்ந்த யாழ்ப்பாணத்தில் 1985ம் ஆண்டின் பின்னர் இப்போது தான் முதல் தடவையாக பட்டாசு வெடிச் சத்தங்கள் 14ம் திகதி அதிகாலை முதல் அதிர்ந்து கொண்டிருந்தன.
யுத்த சூழல் காரணமாக இராணுவம் பட்டாசு பாவனையை 85ம் ஆண்டு முதல் தடை செய்திருந்தது. யுத்தம் முடிவடைந்த நிலையில் இம்முறைப் பொங்கல் விற்பனையில் பட்டாசு மற்றும் வாண வேடிக்கை பட்டாசுகள் பெருமளவில் இடம்பிடித்திருந்தன. மூலை முடுக்குகள் எல்லாம் சிறிய பட்டாசு கடைகள் முளைத்திருந்தன. 13ம் திகதி முதலே பட்டாசு வெடிச் சத்தங்கள் நகரெங்கும் கேட்டுக் கொண்டிருந்தன.
ஏ-9 வீதி திறந்து விடப்பட்டதையடுத்து தென்னிலங்கையில் இருந்து ஏராளமான சிறு வியாபாரிகள் யாழ். நகருக்கு படையெடுத்துள்ளனர். நகரில் முக்கிய வீதி யோரங்களில் நடைபாதை வியாபாரிகள் கடை விரித்திருந்தனர்.
நல்லூர் கோவிலடிப் பகுதியில் ஏராளமான நடைபாதை வியாபாரிகள் கடை பரப்பியிருந்ததோடு பொருட்களின் விலைகளும் தென்னிலங்கை விலைகளையே ஒத்திருந்தன.
தேவையற்ற நகர்வு பொருட்கள் இங்கே கொண்டு வரப்படுவதாகவும் இவர்கள் சாலைகளில் அனாவசிய நெரிசலை ஏற்படுத்துவதோடு பல பொருட்கள் தரமற்றவையாகக் காணப்படுவதாகவும் சில நிரந்தர வர்த்தகர்கள் கவலை வெளியிட்டு வருகின்றபோதிலும் பெரும்பாலானோர் இதைத் தடை செய்ய முடியாதென்றும் வர்த்தகர்கள் பொருட்களை நாட்டின் எப்பகுதிக்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்வது அவர்களின் உரிமை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாநகர சபை வட்டாரங்களில் இது தொடர்பாகக் கேட்டபோது, இதைத் தடை செய்வதற்கில்லை என்று கூறியதோடு அவசியமானால் நடைபாதை வியாபாரிகளுக்கென தனியொருப் பகுதியை ஒதுக்குவது பற்றி மாநகர நிர்வாகம் ஆலோசிக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தன.
நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தினகரன் பொங்கல் விழாவில் கலந்து சிறப்பித்த தென்னிந்திய கலைஞர்களான ஏ.ஈ. மனோகரன், ஸ்ரீலேக்கா, மாலதி, மாணிக்க விநாயகம், ஸ்ரீராம், ரோபோ ஷங்கர், அரவிந்த் உள்ளிட்டோரை படத்தில் காணலாம்.
நடைபாதை வியாபாரம் ஒன்றும் மோசமானதல்ல: சிறிய ஒரு இடத்தில் ஏராளமான பொருட்களைப் பார்வையிட்டு தேவையானவற்றை வாங்கும் வசதி இங்குள்ளது என்று பாவனையாளர்கள் சுட்டிக் காட்டுவதோடு பணம் கொடுத்து எந்தப் பொருளை வாங்க முன்னரும் யோசித்து அவசியம் உணர்ந்து வாங்க வேண்டியது பாவனையாளர்களின் கடமை என்பதையும் எடுத்துரைத்தனர்.
மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் சந்தையில் ஏராளமான பொருட்கள், நூற்றுக் கணக்கான தென்னிலங்கை வியாபாரிகள், பரபரப்பான ஆனால் அச்சமற்ற பண்டிகை வியாபாரம், தெருவோரங்களிலும் கடைகளிலும் மாலைவேளையிலும் கூட்டம் கூட்டமாகப் பெண்கள் கூடி நின்று பொருட்களை வாங்குவதில் ஈடுபட்டிருந்தமை, பட்டாசு வியாபாரம் சுதந்திரமாக நடந்தமை என்பன இந்த யாழ்ப்பாண பொங்கல் பண்டிகையின் விசேடத் தன்மைகள் என்பதைப் பலரும் மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டினர்.
இதை நான் முழுமையான பொங்கல் பண்டிகை என்று சொல்ல மாட்டேன். வன்னியில் இன்றும் நிலைமைகள் சீராகவில்லை. யாழ்ப்பாணத்திலும் பல நூற்றுக் கணக்கான குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன.
வரவேற்கத்தக்க பல மாற்றங்களையும் வடக்கில் காணப்படும் சுமுக நிலையையும் இப் பொங்கல் பண்டிகை பிரதிபலிக்கின்ற போதிலும் இவ்வருடத்தின் புத்தாண்டு, தீபாவளிப் பண்டிகைகளை அந்தக் காலத்தை நினைவுபடுத்துவதாக அமையும் என்பது திண்ணம். அடுத்து வரும் பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய செழுமைகளையும் தனித்துவமான பண்டிகைகளையும் வெளிப்படுத்துவதாக அமையும்” என்று யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்.
முப்பது ஆண்டுகளின் பின்னர் இப்போது தான் மாநகர சபை முழுமையாகவும் சுதந்திரமாகவும் செயற்படத் தொடங்கியுள்ளதென்றும் எனவே பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருப்பதாகவும் பல செயற்பாடுகளைக் கீழ் மட்டத்தில் இருந்து கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், தனது காலத்தில் முன்னாள் மேயர் துரையப்பாவின் கனவுகளை நனவாக்குவேன் எனவும் கூறுகிறார்.
பொங்கல் தினங்களான 14, 15ம் திகதிகளில் யாழ் நகர் வர்த்தக மற்றும் கல்விக் கூடங்கள், சிறு கடைகள் என்பன பூட்டப்பட்டு வீதிகள் மக்கள் மற்றும் வாகன நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால் தென்னிலங்கையில் இருந்து வந்து குவிந்திருக்கும் பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் சில சிரமங்களை எதிர்நோக்க வேண்டியதாயிற்று. நகரின் பெரும்பாலான ஹோட்டல்கள், லொட்ஜுகள், விடுதிகள் என்பன நிரம்பி வழிகின்றன.
இது தொடர்பாக விடுதி உரிமையாளர்களிடம் வினவியபோது மிக நீண்டகாலமாக சிரமங்களை எதிர்நோக்கியிருந்த தமக்கு புதிய சூழல் உத்வேகத்தை அளித்திருப்பதாகவும், பொங்கல் பண்டிகையின் பின்னர் தென்னிலங்கைப் பயணிகளின் வருகை குறையும் எனத் தாம் எதிர்பார்க்கவில்லையென்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் நம்பிக்கை வெளியிட்டனர்.
இது இப்படியிருக்க யாழ்ப்பாண நகரிலும் குடாநாட்டின் பல பகுதிகளிலும் நடை வியாபாரிகளைக் காணக்கூடியதாக இருக்கிறது. தென்னிலங்கையில் இருந்து அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட கோழிக் குஞ்சுகளை சிறுவர்கள் தலையில் சுமந்த வண்ணம் வீடு வீடாகச் செல்வதையும், சிலர் மரத் தளபாடங்களை சுமந்து செல்வதையும் காண முடிகிறது.
உள்ளூர்த் தினசரி இவர்கள் தொடர்பாக வெளியிட்டிருக்கும் செய்தியொன்றில் இத்தகையவர்களிடம் பொருட்களை வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்குமாறும் சேவல் குஞ்சுகளை பெட்டைக் குஞ்சுகள் எனக் கூறி இவர்கள் விற்க முயல்வதாகவும் குறிப்பிட்டிருந்தது.
மொத்தத்தில் இப் பொங்கல் பண்டிகை, யாழ் குடா நாட்டு மக்களின் எதிர்கால வாழ்வில் நிகழவிருக்கும் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களைக் கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது. என்றால் அது மிகைக் கணிப்பாக இருக்காது.
அருள் சத்தியநாதன்
0 விமர்சனங்கள்:
Post a Comment