கோட்டையில் கொடி நாட்டியவர்கள் வட்டுக்கோட்டையில் பிணம் தோண்டுகிறார்கள்?
பையலாய் இருந்த காலை. திண்ணையில் லாம்பு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருக்கும் கியூறியஸ்க்கு அப்பா அடிக்கடி கதைகள் சொல்வார். வழிப்போக்கன் ஒருவன் தோட்டத்தில் ஆங்காங்கே வேலை செய்து கொண்டிருந்த ஒரு குடும்பத்திடம் வட்டுக்கோட்டைக்குப் போக வழி கேட்டானாம், பாதையோரமாய் நின்ற மனைவி சொன்னாளாம்,,, "கொட்டப்பாக்கு துட்டுக்கு எட்டு" என்று???
இதென்னடா. இந்தக் கிழவிக்கு காது கேட்கவில்லை என்று அங்கே தொலைவில் நின்ற கணவனிடம் திரும்பிக் கேட்க,,, அவன் சொன்னானாம்,, "சிவலை அல்லாது கறுவல் விக்கிறேலை" என்று????
அட போச்சடா? என்று அப்பால் நின்ற மகளிடம் கேட்க. மகள் சொன்னாளாம்,,, "அப்பா. அம்மா ஆரைக் கட்டி வைச்சாலும் எனக்கு சம்மதம்" என்று????
ஆக மொத்தத்தில் கேள்வி ஏதோவாக இருக்க,,, பதில்கள் எல்லாம் அவர்கள் நினைவில் நிறைந்தவையில் இருந்து தான் பிறந்திருக்கின்றன, கணவனுக்கு மாட்டை விற்கும் எண்ணம். மனைவிக்கு வியாரத்தில் கண், மகளுக்கோ திருமணச் சிந்தனை,
இன்று நடக்கும் வட்டுக்கோட்டைத் திருவிழாவும் அதற்கு கிடைத்த "மாபெரும்" வரவேற்பும் ஏதோ அவரவர் நினைப்பில் நிறைந்திருந்ததை உதிர்த்த ஒன்றாகவே முடிந்திருக்கிறது,
மகாத்மா காந்தியின் குரங்குகள் போல. உண்மையைப் பேச மாட்டோம். கண் கொண்டு பார்க்க மாட்டோம். கேட்க மாட்டோம் என்று முரண்டு பிடித்துக் கொண்டு. "உந்த ரேடியோவில சொன்னவங்கள்" என்பதற்காகவே போய் வாக்களித்த ஊரைக் கெடுக்கும் கேள்விச் செவிக் கூட்டத்திற்கு வட்டுக்கோட்டையின் அடிநுனி ஏதாவது தெரிந்திருக்குமோ என்பது சந்தேகமே, அடிக்கடி பசுத்தோல் போர்க்கும் புலிக் கூட்டம் ஏதோ மாணவர் அமைப்பு என்ற பெயரில் நடத்திய இந்தத் திருக்கூத்தில் ஒரு கூட்டம் எடுபட்டுப் போய் வாக்களித்து வெற்றியுடன் மீண்டிருக்கிறது, வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்றால் என்ன. அதன் முன்னோடிகள் யார் என்பதைப் பற்றி எந்த "விளப்பமும்" இல்லாத. வட்டுக்கோட்டைத் தீர்மானம் நடைபெற்ற காலத்தில் பிறந்தே இருக்காத ஒரு கூட்டம் நடத்தும் வாக்கெடுப்புக்கு இவர்கள் போய் வாக்களிக்கிறார்களாம்,
தங்களுடைய பிரச்சாரங்களை தாங்களே நம்புகின்ற பாரம்பரியத்தில் இந்த வாக்களிப்பை ஒரு "சர்வசன வாக்கெடுப்பு" என்று நம்பி. பெரும்பான்மை வாக்குகளால் தமிழீழம் கிடைத்து விடும் என்று நினைப்பில் ஒரு கூட்டம் "வேலை மினக்கெட்டுப்" போய் வாக்களித்து விட்டு புல்லரித்துப் போயிருக்கிறது, போதாக்குறைக்கு கனடிய ஊடகங்களுக்கும் கயிறு திரித்து ஏதோ சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு வாக்கெடுப்பு நடக்கிறது என்ற மாயையை ஏற்படுத்த இந்தப் புலிக் கூட்டம் முயன்றிருக்கிறது,
கனடிய சி,பி,சி வானொலியில் இதைக் கேட்ட எரித்திரிய நண்பர் ஒருவர் "என்னடா கியூறியஸ். கனடாவில் சர்வசன வாக்கெடுப்பாமே?" என்று ஆவலோடு விசாரித்தார், கியூறியஸிற்கு எரித்திரிய நண்பர்களுடன் இருபது வருட சகவாசம் என்பதால் அவர்களின் அரசியல் அவனுக்கு அத்துபடி, 93 இல் எரித்திரியா சர்வசன வாக்கெடுப்பு முலம் சுதந்திரம் பெற்றபோது. ரொறன்ரோவில் எரித்திரியர்கள் சிலர் கார்களில் கொடியை ஆட்டிக் கொண்டு கூச்சலிட்டபடி வலம் வந்ததை கியூறியஸ் கண்டிருக்கிறான், கனடியர்களுக்கு இது குறித்து எதுவுமே தெரியாததால் அவர்கள் ஏதோ உதைபந்தாட்டக் குழு எங்கோ வெற்றி பெற்றுவிட்டது என்று நினைத்திருக்கக் கூடும்,
எத்தியோப்பியாவுடனான விடுதலைப் போராட்டத்தின் இறுதியில் எத்தியோப்பிய ஜனாதிபதி மெங்கிஸ்து நாட்டை விட்டு வெளியேற. எரித்திரியா எரித்திய மக்கள் விடுதலைப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்து தற்காலிக ஆட்சி அமைக்கப்பட்டது, அந்த ஆட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதற்காக ஐ,நா ஒரு சர்வதேச வாக்கெடுப்பை நடத்தியது,
இது பற்றி தற்போது நண்பர் ஒருவரிடம் கேட்டபோது. தாங்களும் நூறு டொலர் கட்டி பதிவு செய்து வாக்களித்ததாகக் கூறினார், இந்த வாக்களிப்பு எரித்திரியாவில் மட்டுமல்ல. வெளிநாடுகளில் வாழும் எரித்திரியர்கள் மத்தியிலும் நடத்தப்பட்டது, அதுவும் சர்வதேச கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது மட்டுமன்றி. இந்த தேர்தல் மோசடிகள் இன்றி நடத்தப்பட்டது என்பதை உறுதி செய்து கொள்ள ஐ,நா குழு ஒன்றையும் நியமித்திருந்தது, இப்படியாக சர்வதேச அங்கீகாரத்துடனும் மேற்பார்வையுடனும் நடைபெற்று. அதன் பெறுபேறாக எரித்திரியா ஐ,நாவினால் அங்கீகரிக்கப்பட்டு அங்கத்துவ நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது,
ஆனால் தற்போது இதே எரித்திரிய அரசு புலிகளைப் போல தனது மக்களை அடக்குவது குறித்து "எண்ணெயில் இருந்து எரிநெருப்பில் விழுந்த எரித்திரியர்கள்" என்ற தலைப்பில் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காத கூட்டத்தை அரச கட்டிலில் ஏற்றுவது குறித்த ஆபத்து பற்றி புலிகள் காலத்திலிருந்தே எழுத வேண்டும் என்ற கியூறியஸின் ஆசை இன்று வரை நிறைவேறாதது இன்னொரு கதை,
இப்படியாக எரித்திரிய சர்வசன வாக்கெடுப்பு போன்ற ஒரு அங்கீகாரம் பெற்ற வாக்கெடுப்புத் தான் இந்த வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு என்றே புலிகள் இந்த புலன் பெயர்ந்த கூட்டத்தை நம்ப வைத்துக் கொண்டிருந்தனர்,
இதற்கு முன்பாக இந்த சர்வசன வாக்கெடுப்பு பற்றிய சில அரசியலமைப்புச் சட்டச்சிக்கல்கள் பற்றிப் பார்ப்போம், ஆங்கிலத்தில் Referendum, plebiscite என இரண்டு வார்த்தைகள் உண்டு, இதில் Referendum என்பது சட்டரீதியாக மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது போல. அதன் முடிவு சட்டமாக்கப்படும், ஆனாலும் நீதிமன்றங்கள் இது குறித்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கின்றன, பாராளுமன்ற. மாகாண அரசுகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட காரணத்தினால். அவை இந்தத் தீர்ப்புகளுக்கு பணிந்து சட்டமாக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் வெறும் மாநகராட்சிகள் மட்டுமே இந்த சர்வசன வாக்கெடுப்புகளுக்குப் பணிய வேண்டும் என்றும் நீதிமன்றங்கள் கருத்தைக் கொண்டிருக்கின்றன, இதனால் தான் கியூபெக் மக்கள் பிரிய வேண்டும் என்று சர்வசன வாக்கெடுப்பில் முடிவு செய்தாலும். கனடியப் பாராளுமன்றம் அதைச் செல்லுபடியற்றதாக்கக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்;ள முடியும்,
அடுத்ததான plebiscite என்பது. மக்களிடம் வெறும் ஆலோசனை கேட்பதற்காக நடத்தப்படும் சர்வசன வாக்கெடுப்பு, இதன் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை,
எனவே. இந்த இரு வரைமுறைகளுக்குள்ளும் இந்த வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு அடங்கவில்லை, மாறாக. ஆனந்தவிகடன் நடத்தும் கருத்துக் கணிப்புப் போன்ற ஒரு பம்மாத்து விளையாட்டே இந்த சர்வசன வாக்கெடுப்பு, தமிழக மக்கள் பெரும்பாலும் புலிகளுக்கு ஆதரவு என்று காட்டி தமிழக பெரும்பான்மை அரசியல்வாதிகளை புலிகளுக்கு சாதகமான போக்கை கடைப்பிடிக்கச் செய்வதற்காக. கேள்விகளை அதற்குரிய விதத்தில் கேட்டு புலிகள் விகடன் முலமாகத் திரித்த கயிறைக் கியூறியஸ் ஆதாரங்களுடன் நார் நாராக கிழிகிழி என்று கிழித்ததை தாயகத்தில் இன்றும் பார்த்து மகிழலாம்,
இப்படியாகத் தானே ஒரு திருக்கூத்தை நடத்தி. அதிலும் 99,99 வீதம் ஆதரவு என்று வெற்றிவிழாக் கொண்டாடும் இந்த மூடர்களுக்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிமுடிகளைக் கொஞ்சம் திறந்து காட்டுவது தான் கியூறியஸின் நோக்கம்,
முதலில் ஒரு சணுவசன வாக்கெடுப்பு நடத்தப்படுவதாயின் அதற்கு தேசிய அல்லது சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வேண்டும், அத்துடன் அந்த அங்கீகாரம் வழங்கும் அமைப்புகளால் நியமிக்கப்பட்ட நடுநிலை தேர்தல் கண்காணிப்பாளர்கள் அந்த தேர்தலை மேற்பார்வை செய்ய வேண்டும், அதில் மோசடிகள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வாக்காளர்களின் விபரங்கள் அடையாளங்களுடன் சேகரிக்கப்பட வேண்டும், இவ்வாறான ஒரு அங்கீகாரத்துடன் நடத்தப்படும் வாக்கெடுப்பு சட்டமாக்கப்படா விட்டாலும் அதற்கு ஒரு குறைந்த பட்ச அங்கீகாரமாவது இருக்கும்,
புலிகள் குதிரை கஜேந்திரனை பெரும்பான்மை விருப்பு வாக்குகள் பெற யாழ்ப்பாணத்தில் கடந்த தேர்தலில் நடத்திய கூத்து பற்றி ஐரோப்பிய சமுகமே தனது அறிக்கையில் குற்றம் சாட்டியிருக்கிறது, இந்த லட்சணத்தில் தங்களை யாரென்றே அடையாளம் காட்டாத. இதுவரை காலமும் புலன் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அங்கீகாரம் எதுவும் பெறாத ஒரு தான்தோன்றீஸ்வர அமைப்பு ஒன்று புதிதாகக் கிளம்பி. வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றி வாக்கெடுப்பு நடத்தப் போகிறேhம் என்றவுடன் ஒரு கூட்டம் போய் வாக்களிக்கிறது,
வாக்களித்த கூட்டம் பற்றி கியூறியஸ்க்கு எந்த மரியாதையும் இல்லை, தெருத்தெருவாய் புலிகளோடு இழுபட்டுப் போன கூட்டம் மந்தைக் கூட்டம் என்றால் இது பட்டிக் கூட்டம்,,, தலைநகரங்களிற்கு புலிகளின் பிரசாரத்தை நம்பி பின்னால் போன "மந்தையிலிருந்த ஆடுகள் எல்லாம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் வேறு வேறு பாதையில் போன பின்னால்". புலிகளுக்கு என்றே சொந்தமாய் ஒரு கூட்டம் பட்டியில் அடைக்கப்பட்ட மந்தைகள் போல இருக்கிறது, புலிகள் எங்கே கூப்பிட்டாலும். கதவைத் திறந்தவுடன் கேட்டுக் கேள்வியின்றி அள்ளுப்பட்டுக் கொண்டு போகும், இது எந்த விதமான பகுத்தறிவும் இல்லாத பட்டிக் காட்டுக் கூட்டம், "உந்த ரேடியோவில் சொன்னவங்கள்" என்பதைத் தவிர நன்மை தீமை எதுவும் தெரியாத கூட்டம், மாவீரர் தினத்திற்கு தலைவர் உரை நிகழ்த்தப் போகிறார் என்று ஆவலோடு எதிர்பார்த்து விசிலடிக்கப் போன கூட்டம், அடித்த விசிலடியில் சீமானைக் கனடா கட்டி அனுப்பியது தான் மிச்சம், இந்தக் கூட்டம் பற்றி நாங்கள் அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை,
கனடிய அரசியல்வாதிகளை மிரட்டலாம் என்ற நினைப்பில். கனடாவில் லட்சக்கணக்கில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று கூறி கணக்கெடுப்புச் சொல்கிற கூட்டம் இன்று 45 ஆயிரம் பேர் வாக்களித்தார்கள் என்பதை விட. 99,99 வீத ஆதரவு கிடைத்தது என்பதில் துள்ளிக் குதிப்பது. விழுந்தது உண்மை ஆனால் மீசையில் மண் படவில்லை என்ற கதையாகத் தான் இருக்கிறது, ஐரோப்பாவில் நடந்த வாக்களிப்புகளிலும் இதே கதை தான், பெரும்பாலான தமிழர்கள் இந்த வாக்களிப்பைப் புறக்கணித்து விட்டார்கள், ஆனால். 99,99 வீதம் தான் இன்று ஒரே கதையாக இருக்கிறது,
ஏதோ தங்கள் வாக்களிப்பில் வெள்ளையர்களும் பார்வையாளர்களாக உட்கார்ந்திருந்தார்கள் என்று காட்டிக் கொண்டால் போதும். அங்கீகாரம் கிடைத்து விடும் என்ற நினைப்பில் சில வெள்ளையர்களைக் காட்சிப் பொருளாக்கி இந்த பட்டிக் கூட்டத்தை "பேய்க்காட்டியது" தவிர இந்த வாக்கெடுப்பால் எந்தப் பயனும் இல்லை,
இந்த வாக்கெடுப்பை நடத்துவது யார். இதன் பயன் என்ன என்பதை அறிந்து கொள்ளும் அளவுக்கு "முழுவிளப்பம்" இல்லாத இந்தக் கூட்டத்திற்கு முள்ளிவாய்க்கால் கோடாலித் தாக்குதலின் பின்னான புலி இயக்கத்தின் நிலை பற்றித் தெரிந்திருக்க நியாயம் இல்லை,
ஊமல் கொட்டை போன்று இறுக்கமான கட்டுக்கோப்பான இயக்கம் என்று சுத்தப்பட்ட புலிக்கூட்டம். முள்ளிவாய்க்காலில் வைத்து கோடாலியால் பிளக்கப்பட்டு. இன்று "காலம் சென்ற தலைவர் அணி". "காலம் செல்லாத தலைவர் அணி" என இரண்டாகப் பிரிந்து நிற்கிறது,
கே,பி தலைமையிலான. உருத்திரகுமாரன் கூட்டம் தலைவர் இறந்து விட்டார் என்ற முடிவோடு "நாடு கடந்த அரசு" என்ற முகமுடியுடன் புத்தி(யில்லாத)ஜீவிகள் கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு ஒரு புறமாக "காலம் சென்ற தலைவர் அணியை" இயக்கிக் கொண்டிருக்கிறது, இந்தக் கூட்டத்தின் உடனடி நோக்கம் பணம் சேர்ப்பதல்ல. புலன் பெயர்ந்த கூட்டத்திற்கு அரசியல் தலைமை வழங்கி பின்னர் அதை வைத்தே பிழைப்பு நடத்துவது, ஆனால் இதற்குள் கே,பி தலைவர் மேலே போய் விட்டார் என்று சொன்னதற்காகவே அவரைத் துரோகி என்று புலிகளே முத்திரை குத்தி கடைசியில். இலங்கையின் அரச விருந்தினர் ஆகி விட்டதால். உருத்திரகுமாரன் தலைமையில் ஒரு "படித்த" கூட்டம் பெரிய அரசியல் வார்த்தைகளால் சுத்திக் கொண்டிருக்கிறது,
மறுபுறத்தில் கொடியவன் முள்ளிவாய்க்காலில் கைலாயம் போய்ச்சேர. புதிதாகத் தோன்றிய நெடியவன் இது வரை காலமும் புலன் பெயர்ந்த தமிழர்களையும் வர்த்தகப் பெருமக்களையும் மிரட்டி கமிஷனுக்குப் பணம் சேர்த்த கலகத்தமிழர் குண்டர்கள். காடையர்கள் மற்றும் சுத்திஜீவிகளையும் சேர்த்துக் கொண்டு. தலைவர் இந்தா இருக்கிறார். அந்தா வரப் போறார் என்று சுத்திக் கொண்டு பணம் பறிப்பதற்காகக் கூட்டிய ஒரு கூட்டம், இந்த "காலம் செல்லாத தலைவர் அணி" தான் இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னால் உள்ள கும்பல், ஏற்கனவே மாதாந்தம் கிடைத்த வருமானத்தில் மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் என வாழ்ந்து விட்டு. இன்று மாதாந்தக் கட்டுக்காசுகளுக்கு அல்லல்படும் உடம்பு வளைத்து வேலை செய்தறியாக் கூட்டம் ஆயுதப் போராட்டக் கனவைக் காட்டி வருமானம் தேட எடுத்த பாரிய முயற்சிக்கான முன்னோடி முயற்சி தான் இந்த வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு, பினாமிப் பெயர்களில் புலிகளின் மில்லியன் கணக்கான சொத்துக்களை நிர்வகித்தவர்கள் எல்லாம் கம்பி நீட்ட. இந்தக் "கோம்பை சூப்பிய கூட்டம்" வாயூறி விட்ட திருக்கீஸ் விளையாட்டுத் தான் இந்த வட்டுக்கோட்டை,
வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு விவகாரம் பகிரங்கமானவுடனேயே. நாடு கடந்த அரசுக் கூட்டம் இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை விட்டு விட்டது, கனடிய சிறுபத்திரிகை ஒன்றுக்கு கருத்துக் கூறிய காங்கிரஸ் அக்காச்சியும் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் அதை தாங்கள் அவதானிப்பதாகவும் கூறியிருந்தார், அதாவது கனடிய தமிழர்களின் பிரதிநிதிகள் தாங்களே என்று ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பீலா விட்டுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கூட்டத்திற்கும் இந்த வாக்கெடுப்புக்கும் சம்பந்தமில்லை,
இந்த இரு குழுக்களும் இடையிலான பனிப்போர் இந்த புலன் பெயர்ந்த கூட்டத்திற்கு தெரியாது, காரணம் இவர்களுக்கு எப்படிச் சிந்திக்க வேண்டும். எதைப் பேச வேண்டும் என்பதை இவர்களின் வாய்களுக்குள் திணிக்கும் வானொலிகளும் தொலைக்காட்சிகளும் இதைப் பற்றி மூச்சே விடுவதில்லை, மற்றும்படி மாற்று ஊடகங்களையோ. ஆங்கில ஊடகங்களையோ தாங்களாகவே தேடிப் படிக்கும் பழக்கமே இந்தக் கூட்டத்திற்கு இல்லை,
தமிழ்ப் பத்திரிகை ஊடகங்களும் இணையத் தளங்களும் எந்தப் பக்கம் சார்ந்தால் எங்கிருந்து அடிவிழும் என்பது தெரியாததால் மதில் மேல் குந்திக் கொண்டு பாலுக்கும் காவல். பூனைக்கும் தோழன் என்பது போல வேழூம் போட்டுக் கொண்டிருக்கின்றன,
இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் சில பத்திரிகைகள் முனக ஆரம்பித்தவுடன் பழையபடி வேதாளமாய் புலிக் கூட்டம் கடைகளில் பத்திரிகைகளை அள்ளிச் செல்ல ஆரம்பித்து விட்டது, அதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கும் அளவுக்கு இந்த ஊடகங்களுக்கு முதுகெலும்பு கிடையாது, மூக்கால் சிணுங்கவும். வேறு யாராவது எழுதிக் கொடுத்ததை. "எழுதித் தந்ததைப் போட்டனாங்கள்" என்று கையைக் கழுவவும் மட்டுமே இவர்களுக்குத் தெரியும்,
புதினம். தமிழ்நாதம். ஆனானப்பட்ட நிதர்சனம் என புலிகளுக்கு முண்டு கொடுத்த இணையத்தளங்கள் அடித்துச் சாத்தப்பட்ட வரலாறு இவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை, புலிகளின் வன்முறைக்கு நியாயம் கற்பித்த கூட்டம். இன்று புதிதாகத் தோன்றிய புதினப்பலகையில் தங்கள் மீது "ஆயுதம் இல்லாத வன்முறை பிரயோகிக்கப்பட்டது" பற்றி மூக்கால் அழுத விவகாரம் கூட இவர்களுக்குத் தெரியாது,
புலிகளுக்குள்ளேயே என்ன குத்துவெட்டுக்கள். குழிபறிப்புகள் நடைபெறுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே கண்ணை மூடிக் கொண்டு புலிக் கொடி தூக்கிய எந்தக் கூட்டத்தின் பின்னாலும் போக ஒரு கூட்டம் பட்டிக்குள் அடைபட்டுக் காத்திருக்கிறது,
இந்த லட்சணத்தில். வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்துவதற்கான காரணம் பற்றி இவர்கள் விட்ட புலுடா தான் இந்த தசாப்தத்தின் பெரும் ஜோக்?
சர்வதேச சமுகம் தமிழீழக் கோரிக்கையைப் புலிகளின்; பயங்கரவாதத்துடன் இணைத்துப் பார்க்கிறது. இந்தத் தமிழீழக் கோரிக்கை புலிகளுக்கு முன்பாகவே தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டது என்றும் அதற்கு தமிழ் மக்களின் பூரண ஆதரவு இன்றும் உள்ளது என்றும் சர்வதேச சமுகத்திற்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுவதாகவுமே இவர்கள் காது குத்தினார்கள்,
அண்ணாச்சி. இது என்ன புதுக்கதை? இதுவரை காலமும் ஐன்ஸ்டைன் அணுசக்தி சமன்பாட்டைக் கண்டுபிடித்தது போல. தமிழீழம் என்ற சொல்லையே தலைவர் தான் கண்டுபிடித்தார் என்று கதை சொன்னது நீங்கள், ஐயரைத் தார்ப் பீப்பாவுக்குள் போட்ட கதையைக் கேட்டுத்தான் தலைவருக்கு உணர்ச்சி வந்தது என்று புரளி கிளப்பியது நீங்கள், தரப்படுத்தல் எதுவுமில்லாமலேயே எட்டாம் வகுப்பைத் தாண்ட முடியாத தலைவர். பல்கலைக்கழகத் தரப்படுத்தலைக் கண்டு சீறி எழுந்தார் என்று தலையைச் சுத்தியது நீங்கள்,
அதாவது சிங்கள இனவாதம் நடத்திய இன அழிப்பு முயற்சியை முதலிலேயே இனம் கண்டு அதற்கு எதிராக தன்னம் தனியனான போர்க் கொடி தூக்கியது எங்கள் தேசியத் தலைவர் தான் என்பது தான் நீங்கள் இதுவரை காலமும் சொல்லி வந்த கதை,
இதென்ன புதிதாக. வட்டுக்கோட்டைத் தீர்மானம்?
வட்டுக்கோட்டைத் தீர்மானம் பற்றிய வரலாற்றில் ஓர் ஏட்டைத் திருப்பிப் பார்ப்போம்,
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னான தமிழர் அரசியலில் ஐம்பதுக்கு ஐம்பது கேட்ட பொன்னரின் காங்கிரசில் இருந்த தந்தை செல்வா. மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதற்கு ஆதரவாக இருந்த பொன்னரின் முடிவை எதிர்த்து வெளியேறி தமிழரசுக் கட்சியை அமைத்தார், இந்திய திராவிட எழுச்சியின் பாதிப்பில் தமிழரசு என்று பெயரை வைத்து உணர்ச்சியைக் கிளப்பும் முயற்சி அது, இந்தப் படித்த யாழ்ப்பாணியை மணியாகச் சுத்தும் முயற்சியின் உச்சக்கட்டமாய். தமிழில் தமிழரசுக் கட்சி என்றும் ஆங்கிலத்தில் சமஷ்டிக் கட்சி என்றும் இவர்கள் பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டிக் கொண்டிருந்தார்கள், மொழியுணர்வைத் தூண்டி வாக்குக் கேட்கும் இந்த திராவிடப் பாரம்பரியம் உணர்வைக் கிளப்ப. பொன்னர் துரோகியாகி தமிழரசு தமிழ் வாக்குகளின் ஏகபோக உரிமையைப் பெற்றுக் கொண்டது, இந்த தன்மானத் தமிழ்ச் சிங்கங்கள் எல்லாம் அவ்வப்போது சிங்கள அரசுகளில் பங்கேற்று மந்திரிப் பதவிகள் பெற்றதும். அந்தப் பேரங்களின் போது ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவதும் பின்னர் சிங்களவர்களால் கிழித்தெறியப்படுவதுமான சாதாரண அரசியல் கூத்துக்கள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தன, டட்லி. பண்டா என இவர்கள் ஒப்பந்தங்கள் செய்ததெல்லாம் அரசியல் லாபம் கருதியே அன்றி தமிழ் மக்களின் நலன் கருதியதற்கான ஆதாரங்கள் இல்லை, வழமை போல தாங்கள் ஏமாற்றப்படும்போது. சிங்களவர்கள் மேல் பழி போட்டார்களே அன்றி. அவர்களை நம்பியதற்கான குற்றத்தை இவர்கள் ஏற்றுக் கொள்ளவேயில்லை, ஆக மொத்தத்தில் தமிழ் உணர்வைக் கிளப்பி தமிழர்களுக்கான அரசியல் தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதே இவர்களின் அடிப்படை நோக்கமாய் இருந்தது,
58 ல் நடைபெற்ற இனக்கலவரத்தில் இடம் பெற்ற அநீதிகள் பற்றி கதைகள் தமிழர் மனதை இன்னொரு புறம் குடைந்து கொண்டிருந்தது, அதற்குப் பதிலடி கொடுக்க சரியான "யாரி" என்று மொழி உணர்வு மிகுந்த தமிழன் இந்த "தமிழரசுக்" கட்சியில் புல்லரித்துப் போக. பொன்னர் மலேசியாவுக்கு நாடு கடந்தார், பிறகென்ன. தமிழர்களின் வாக்குகளை தமிழரசுக் கட்சி ஆண்டனுபவிக்கத் தொடங்கியது,
பெயரளவில் தமிழரசாயும் கொள்கையளவில் சமஷ்டியாயும் இருந்த இவர்கள் தமிழனுக்கு தனிநாடு வேண்டும் என்று கேட்ட அடங்காத்தமிழன் சுந்தரலிங்கத்தையும். சுயாட்சிக் கழக நவரத்தினத்தையும் கேலி செய்தார்கள், தமிழர்கள் தனிநாடு ஒன்றை அமைப்பதற்கு தமிழரசு எதிராகவே செயற்பட்டது, தன் முயற்சியில் சற்றும் தளராத சுயாட்சி நவரத்தினத்திற்காக நம் கோப்பாய் தொகுதியில் தேர்தலில் நின்ற நம்ம ஊர் கனகசுந்தரம் வாத்தியாருக்கு அறுநூற்றுச் சொச்ச வாக்குகள் எழுபதில் கிடைத்த ஞாபகம், இதிலிருந்தே தமிழரின் சுயாட்சிக்கு அன்று கிடைந்த அங்கீகாரத்தை அறிந்து கொள்ளலாம், எல்லைக்காவலரும் கடைசியில் பொன்னரைப் போலவே தமிழனைத் திட்டிக் கொண்டே ஒதுங்கிக் கொண்டார்,
இவர்களால் துரோகி எனப்பட்ட பொன்னம்பலம் கைத்தொழில் அமைச்சராக இருந்த போது தமிழ்ப்பகுதிகளில் அமைத்த தொழிற்சாலைகள் போன்றோ. துரையப்பா யாழ் நகரபிதாவாக இருந்த போது கட்டியெழுப்பியது போன்றோ எதையும் இந்த தமிழரசுக் கட்சியினர் தமிழர்களுக்குச் செய்ததில்லை, இவர்கள் செய்ததெல்லாம். "வேலையற்றவர்களுக்கு ரீச்சிங் போஸ்ட்" எடுத்துக் கொடுத்ததும் சிவகுமாரனுக்கு சிலை எழுப்பியதும் தான்,
எழுபது தேர்தலில் இரண்டு கொத்து அரிசி அம்மா ஆட்சிக்கு வர. கொல்வின் கொண்டு வந்த அரசியல் அமைப்புச் சட்டமும் பதியுதீனின் தரப்படுத்தலும் யாழ்ப்பாணிகளுக்கு "பெரும் அரியண்டம்" கொடுத்தன, இதில் கொடுரமான உண்மை எதுவெனில். தரப்படுத்தலைக் குற்றம் சாட்டிய தமிழர்கள். அதிலும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள். அம்மா இறக்குமதிக்கு விதித்த தடையினால் மிளகாய் விலை உயர. அம்மா ஆட்சி நடத்திய விஸ்வமடு. கனகராயன்குள "படித்த வாலிபர்" குடியேற்றத் திட்டங்களில் போய் மிளகாய் நட்டு இறாத்தல் 32 ரூபாவுக்கு செத்தல் மிளகாய் விற்று உழைத்ததும். பிற்பட்ட பிரதேசங்களில் விதானைமாரைப் பிடித்து க.பொ,த உயர்தரப் பரீட்சை எழுதி பல்கலைக்கழகம் போனதும் தான்,
அத்தோடு. தரப்படுத்தலுக்கு எதிராக பொங்கியவர்கள். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் திறக்க அம்மா வருவதற்கு கறுப்புக்கொடி காட்டி ஹர்த்தால் அனுட்டித்தார்கள், இதே சிங்கள அரசுகள் இன்று வடக்கு கிழக்கில் மூன்று பல்கலைக்கழகங்கள் திறந்த பின்னாலும். இந்த மெத்தப்படித்த யாழ்ப்பாணிகள் இன்று வரைக்கும் கீறல் விழுந்த றெக்கோர்ட் போல தரப்படுத்தல் பற்றிப் பேசுவதும் மூன்றாம் வகுப்புச் சிறார்களைப் படிக்க விடாமல் கடத்திச் சென்று பலி கொடுத்ததைப் பற்றி மௌனமாக இருப்பதும். எட்டாம் வகுப்புத் தாண்டாதவரை தேசியத் தலைவர் என்பதும் தான் சகிக்க முடியாமல் இருக்கிறது, அதிலும் இந்த ரொறன்ரோ வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்த போது கனடிய ஊடகங்களில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் இன்று கூட இவர்கள் தங்கள் போராட்டத்திற்கான காரணமாய் தரப்படுத்தலைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்,
இதற்குள் யாழ் நகரபிதாவாக துரையப்பா இருந்தது இவர்களுக்கு புண்ணில் புளி பூசியது போலவே இருந்தது, இதனால் பொன்னர் மீதான துரோகி பட்டம் துரையப்பாவுக்கு மாற்றப்பட்டது, இதற்குள் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டின் போது. ஜனார்த்தனம் சட்டவிரோதமாய் வந்து பேச முயன்று ஹீரோ விளையாட்டுக் காட்டப் போய். நடந்த களேபரத்தில் பதினொரு பேர் இறந்து. தியாகிகளாக்கப்பட்டார்கள், இந்த தியாகிகளில் அமெரிக்காவுக்குப் போன அன்னபூரணிக் கப்பலின் மாதிரியை அளவு தெரியாமல் உயரச் செய்யப் போய். ஊர்வலத்தில் மின்கம்பியை அறுத்து மின் ஒழுக்கில் தமிழ் விண்ணர்களின் புண்ணியத்தால் இறந்து போன இரண்டு பேரும் அடக்கம்;,
இந்த சம்பவங்களால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்புணர்வை தங்களுக்குச் சாதகமாக்க தமிழரசு வழி தேடிக் கொண்டது, இதனால் தான் சிவகுமாரன் தற்கொலைக்கு அரசியல் சாயம் பூசி தமிழரசு கொடி போர்த்தி லாபம் தேடியது, இப்படியாக எங்களுக்கு ஒரு தனியரசு இருந்தால் இந்த நிலை வராது என்ற நிலை மேலோங்க. வழமை போல "தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என்ற கருத்து தலைப்பட்டது, (இப்போது கூட அடி வாங்கிய புலிகள் ஒருநாளுமில்லாமல் "தமிழர் ஒற்றுமை" பற்றிப் பேசும் நகைச்சுவையை என்னவென்பது?)
ஹர்த்தால் என்றெல்லாம் சட்டமறுப்புகள் ஆரம்பிக்க இந்த இனஉணர்வை இரும்புக்கரம் கொண்டு அடக்க பொலிஸ் படையைப் பயன்படுத்தி நான்காம் மாடிச் சித்திரவதைகளால் சிங்கள இனத்திற்கு எதிரான உணர்வு தமிழர் மனங்களில் நிலை பெற ஆரம்பித்தது,
எழுபதில் தமிழரசுக் கட்சியின் செல்வாக்கையும் மீறி "கண்ணாடி கோட் ஆய்வாளரின் பாஸ்" சிமோல் அருளம்பலம். தியாகராஜா. சங்கரியர் என காங்கிரஸினர் ஆசனங்களைப் பறித்ததுமன்றி. தானைத்தளபதியின் கோட்டையையும் கைப்பற்றியிருந்தனர், மீண்டும் ஆசனங்கள் பிரிந்து விடாமல் இருக்க. ஒற்றுமைக் கோழூம் தேவைப்பட்டது, இதனால் காங்கிரஸ். தமிழரசு என்பன சேர்ந்து கூட்டமைப்பாய் இயங்கத் தொடங்கின, இதற்கு. தமிழரசு அமிரும் காங்கிரஸ் சிவசிதம்பரமும் பாராளுமன்றம் போக முடியாத "படித்த பட்டதாரிகளாக" அரசியல் அனாதைகளாக இருந்ததும் காரணமாக இருக்கலாம்,
இதற்குள் அமிர்தலிங்கம் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட வழக்கில். இந்த அவசர காலச் சட்டம் செல்லுபடியற்றது. இந்த வழக்கை விசாரிக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று ட்ரயல் அட் பார் வழக்கு நடத்த. தந்தை செல்வாவோடு பொன்னரும் திருச்செல்வமும் இணைந்து கை கோர்க்க,,,
சிங்களம் மீதான தமிழர்களின் வெறுப்புணர்வில் லாபம் தேடும் முயற்சியாக. காங்கிரஸ் தமிழரசு இரண்டும். பெரிய ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் தமிழ்ப்படம் போல. "இரண்டு கைகள் நான்கானால்" என்று ஆரம்பித்த முயற்சி தான் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கட்சியும், இதற்காக. இதுவரையும் "மலையக் தமிழரின் வாக்குரிமையைப் பறித்த துரோகி" என்ற பொன்னரையும். அதே மலையக மக்களின் தலைவரான தொண்டமானையும் களமிறக்கி "நாங்கள் தமிழணுகள்" என்று வெற்றிக்கொடி நாட்டியது தான் இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பின்னணி,
உதயசூரியன் சின்னத்தையும் தேர்ந்தெடுத்து. தொண்டமானின் சேவலைக் காட்டி. "வடக்கில் சூரியன் உதிக்க. மலையகத்தில் சேவல் கூவும்" என்று. இளைஞர் பேரவையின் வளர்த்த கடாக்கள் எல்லாம் கொம்புகளை ஆட்டித் திமிறிக் கொண்டன,
இந்தக் கூட்டணியை தமிழர் மத்தியில் விற்பதற்கான முயற்சியாக இவர்கள் எல்லாருமே சேர்ந்து படம் எடுத்து தமிழர் ஒற்றுமைமைக்கு ஆதாரம் காட்டினார்கள், பின்னாளில் இயக்கங்கள் எம்,ஜி,ஆர் முயற்சியில் இணைந்து கை கோர்த்து எடுத்த படத்தை புலிகள் விற்றுப் பணம் பண்ணியது போல. (கை கோர்த்த மற்றவர்களைத் தலைவர் மண்டையில் போட்டது இன்னொரு கதை) கூட்டணியின் செல்வா. பொன்னர். திருச்செல்வம். தொண்டமான் நிற்கும் படத்தையும் லீலா பஞ்சாங்க சித்திரக் கலண்டர் விற்றுப் பணம் பண்ணியது, மெய்கண்டான் அந்தப் பாவத்தைச் செய்ததாய் நினைவில்லை, அது வெறும் சரஸ்வதி. லட்சுமி படத்தோடு பக்திப் பரவசத்துடன் நின்றதே தவிர அரசியலில் புகுந்ததாய் ஞாபகம் இல்லை, கலைஞானியும் கறுப்பு வெள்ளைப் படங்களோடு நின்றதால். இவர்களோடு வேறு தலைகளை ஒட்டிப் பணம் பண்ண முடியவில்லை,
இப்படியாக தமிழர்களின் தலைமை ஒற்றுமை கண்டது குறித்து யாழ்ப்பாணி பேருவகை கொண்டான், எவனுமே எங்கேயப்பா முஸ்லிம்கள். அவர்கள் தமிழர்கள் இல்லையா. அவர்களின் தலைவர்கள் எங்கே என்று கேள்வி கேட்டதேயில்லை,
ஆனால். தொண்டமான் யாழ்ப்பாணிகளின் புத்தி தெரிந்து நைசாகக் கழன்று கொண்டார், "தமிழர்கள் சிறுபான்மை. நாங்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மை. நாங்கள் வரும் அரசுகளோடு சேர்ந்து எங்களுக்கு கிடைக்க வேண்டியதைப் பெறவேண்டுமே ஒழிய. எதிர்த்துப் போராட முடியாது* என்று அவர் தீர்க்கதரிசனமாக விலகிக் கொண்டார், இல்லாது போனால். இன்று மலையகத் தோட்டங்களை எல்லாம் மாவீரர் துயிலும் இல்லங்களாக்கி விட்டு. யாழ்ப்பாணி முழுப்பேருமே தூசி படாமல் கனடாவில் வந்திறங்கி றிமோட் கொண்ட்ரோல் போராட்டம் நடத்தியிருப்பான்,
வட்டுக்கோட்டையில். தமிழணுகளுக்கான அரசியல் தீர்வு தனி அரசு ஒன்றை அமைப்பது தான் என்று எடுக்கப்பட்ட முடிவை 77 தேர்தலில் விற்பதில் பெரும் சிரமம் இருக்கவில்லை, 33 நாடுகளில் தமிழன் வாழ்ந்தும் தமிழனுக்கு நாடில்லை என்று அன்று சொன்னதை இன்று நினைக்கச் சிரிப்பாக இருக்கிறது, இன்று தமிழன் தேசியத் தலைவரின் புண்ணியத்தில் கனடா முதல் கிறிஸ்மஸ் தீவு வரை பரந்திருக்கிறான், அகதியாக வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் தேடிய தமிழனை சொந்த நாட்டிலேயே ஒட்டாண்டியாக்கிய பெருமை தேசியத்தலைவரையே சாரும்,
அந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் தேர்தலாகவே கூட்டணியினர் 77 தேர்தலைப் பயன்படுத்தினர், எனவே தமிழர்கள் எல்லாம் கூட்டணியினர் பாராளுமன்றத்திற்குள் இரகசிய அறைக்குள் இருக்கும் தமிழழீழத்தைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்றே நம்பி வாக்களிக்கப் போக. அம்மாவின் ஆட்சி மேல் இருந்த கோபத்தில் எட்டு இறாத்தல் தானியம் தருவதாக உறுதியளித்த ஜே.ஆர் ஆட்சிக்கு வர. அம்மாவின் கட்சி மண் கவ்வ. கூட்டணி எதிர்க்கட்சியாகியது, வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் கட்சி எதிர்க்கட்சியானதும். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி போராட்டத்தை சர்வதேச மயப்படுத்தி. தமிழீழத்தைச் சுலபமாய் பெறலாம் என்று கூட்டணி இன்னும் தமிழர்களை நம்ப வைத்தது,
இருந்தாலும். காசியை களத்தில் இறக்கப் போய். இராசதுரை பிரிந்ததும். கல்குடாவில் தேவநாயகமும் என கூட்டணியின் வெற்றி ஊர்வலத்தில் மழை பெய்யாமலும் இல்லை,
பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்டதும் தீவிரவாதம் பேசிய கூட்டணி மிதவாதம் பேசத் தொடங்கியதும் மேடையில் ஏறி பிளேட்டால் விரலை வெட்டி இரத்தத்திலகம் இட்ட முரட்டுக் காளைகள் முரண்டு பிடிக்கத் தொடங்கின, தமிழீழம் கேட்கப் போனவர்கள் கடைசியில் மாவட்ட சபைகளுக்கு இறங்கிப் போக. "மிற்சுபிஸி ஜீப்புகளுக்காக கொள்கையை விற்றதாக" முட்டி மோதிய இளைஞர் பேரவை வேகம் பிடிக்கத் தொடங்கிய போது அடித்த "ஆடிக்காற்றில் பறந்து கோபுரத்தில் ஒட்டிக் கொண்ட குப்பைக் காகிதம்" தான் பிரபாகரன்,
குறைந்த பட்சம் கூட்டணிக்கு ஒரு ஜனநாயக தேர்தலில் கிடைத்த அங்கீகாரமாவது இருந்தது, ஆனால் தன்னிடம் இருந்த துப்பாக்கியால். தனக்கு இருந்த தன்னம்பிக்கைக் குறைவு காரணமான பயத்தினால் எல்லாரையும் போட்டுத் தள்ளிய பிரபாகரன். இதே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் சூத்திரதாரியான அமிர்தலிங்கத்தையே "போட்டதையும்". அதைத் துரோகத்திற்கான பரிசாக புலிகள் பிரசாரம் செய்ததையும் மறந்து. இன்றைக்கு இதே புலிக்கூட்டம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான அங்கீகாரம் குறித்து தேர்தல் நடத்துகிறாகளாம், வட்டுக்கோட்டைத் தீர்மானமோ. அதற்குக் கிடைத்த தேர்தல் அங்கீகாரமோ பிரபாகரனையோ. புலி பிராண்ட் ஆயுதப் போராட்டத்தையோ அங்கீகரிக்கவில்லை, பேச்சளவில் அது தனியான சுதந்திர நாடு பற்றிப் பேசினாலும். அதன் அடிப்படைத் தாற்பரியம் சுயநிர்ணய உரிமை மூலமாய் பிரிந்து போகும் ஒரு நிலையை. அதுவும் இந்தியத் தமிழகம் போன்ற ஒரு மாநில அரசையே எதிர்பார்த்து நின்றது,
மக்கள் கூட்டணிக்கு அளித்த அந்த அங்கீகாரத்துக்குப் பிரபாகரன் எந்த மதிப்பும் அளித்ததும் இல்லை, அந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த கட்சியின் உறுப்பினர்களை ஒவ்வொருவராகப் போட்டுத் தள்ளிய பிரபாகரன். தன்னுடைய துப்பாக்கி மட்டும் தனக்குத் தந்த அங்கீகாரத்தைக் கொண்டு தமிழர்களை ஆயுத முனையில் மிரட்டிப் பணிய வைத்ததைத் தவிர. ஜனநாயகம் பற்றியோ. வாக்கெடுப்பு பற்றியோ என்றைக்குமே அக்கறை கொண்டதில்லை, "துரோகிகளுக்கு மண்டையில் போட்டு ஈழத்தை அடிச்சுப் பறிப்பம்" என்பதைத் தவிர வேறெந்த அரசியல் தெளிவும் இல்லாத போராட்டம் தான் பிரபாகரனுடையது, மாவட்ட சபைத் தேர்தலில் கந்தர்மடத்தடிச் சந்தியில் இராணுவத்தைச் சுட்டு கலவரத்தை உண்டாக்கியது முதல். மகிந்தவுடன் பேரம் பேசி தமிழ் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தது வரைக்கும் புலிகள் ஜனநாயக நெறிமுறைகளைச் சிதைத்தே வந்திருக்கிறார்கள், எழுபது கோடிக்காக தமிழ் மக்களை விற்கப் போய் நடந்த முடிவுகளின் இலட்சணம் தெரியாமல் இந்தக் கூட்டம் ச"வசன வாக்கெடுப்பு நடத்தும் கோமாளித்தனத்தை என்னவென்பது?
இந்தத் தேர்தலை இன்று பிச்சை வேண்டாம். நாயைப் பிடி என்று யாழ்ப்பாணத்தில் இருக்கும் தமிழர்களிடமும். தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போன உணர்வில் இருக்கும் கிழக்குத் தமிழர்களிடமும். நொந்து போய் முறம் கொண்டு புலி விரட்ட காத்து நிற்கும் வன்னித் தமிழர்களிடமும் போய் நடத்தியிருந்தால் அதற்கு ஒரு மானசீகமான அங்கீகாரம் இருந்திருக்கும், அந்த மக்கள் இத்தனை அழிவுக்குப் பின்னாலும் "சிங்களவனுடன் வாழேலாது. எங்களுக்குத் தனிநாடு தான் வேண்டும்" என்று தீணுப்பளித்திருந்தால். கொள்கை வேறுபாடின்றி அதற்கான ஆதரவை வழங்க வேண்டிய கடமை வெளிநாடுகளில் உள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கும்,
யாழ்ப்பாணத் தமிழர்கள் புலிகளை இராணுவத்திடம் காட்டிக் கொடுக்கும் நிலையில். கிழக்கில் புலிகள் தலை வைத்துப் படுக்க முடியாத நிலையில். வன்னியில் புலிகள் தலைக் கறுப்புக் காட்ட முடியாத நிலையில். புளிச்சல் ஏவறைப் புலன் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வாக்களிப்பை நடத்தி. எந்த வித பகுத்தறிவும் இல்லாத ஒரு பட்டிக் கூட்டத்தை கொண்டு வந்திறக்கி வாக்களித்து விட்டு யாரை ஐயா பேய்க்காட்டப் பார்க்கிறீர்கள்?
ஈழக் கனவைக் காட்டி தமிழனுக்கு தமிழரசு காது குத்த. கூட்டணி காதில் பூ வைத்து. புலி தலையில் ஏறி மொட்டை அடித்து மிளகாய் அரைத்ததும் போதாதென்று ஒரு கூட்டம் இப்போது வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு என்று நாமம் போட வந்திருக்கிறது,
அதுசரி. வாக்கெடுப்பு நடத்தினீர்கள். 99,99999 வீதம் ஆதரவையும் காட்டி விட்டீர்கள். இப்போது என்ன பண்ணப் போகிறீர்கள்? இந்த வாக்குகளைக் கொண்டு போய் ஐ,நா முன்னால் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறீர்களா? "இதே ஆதாரம். தமிழர்களுக்கு தமிழீழம் தான் முடிவு, இப்ப தமிழீழம் தராட்டித் தெரியும். உவருக்கு என்ன நடக்கப் போகுது எண்டு" என்று மிரட்டப் போகிறீர்களா?
இந்த பெரும்பான்மை வாக்குகளைக் கொண்டு சர்வதேச அரசுகளுடன் பேரம் பேச உங்களுக்கு எங்கே ஐயா அரசியல் தலைமை இருக்கிறது? நாடு கடந்த அரசே உங்களுக்கு எதிராக உள்ள நிலையில். நீங்கள் யார் என்றே முகம் காட்ட மறுக்கும் நிலையில் இதென்ன புதுக்கூத்து?
ஹோலிவூட் மற்றும் விளையாட்டுத் துறைப் பிரபலங்கள் திருமணம் செய்திருந்தாலும் அவர்களுக்கு ஆங்காங்கே தகாத தொடர்புகள் இருக்கும், இது பற்றி சாடைமாடையாக செய்திகள் கசிய ஆரம்பித்ததும் தங்கள் திருமண பந்தத்தில் எந்த வெடிப்பும் இல்லை என்று காட்ட. ஒரு பம்மாத்து ஒன்றை நடத்துவார்கள், அதாவது. தங்கள் திருமண பந்தத்தைப் புதுப்பிக்கிறோம் என்று சொல்லி. புதிதாக இன்னொரு திருமண வைபவம் நடத்துவார்கள், நடத்திக் கொஞ்ச நாளிலேயே விவாகரத்து விவகாரம் நீதிமன்றத்தில் நாறும், சரியான உதாரணம் மடோனா,
இப்படியான ஒரு பம்மாத்துத்தான். வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான "மீள்உறுதிசெய்கை",
சிறுபிள்ளை வேளாண்மை விளைந்தும் வீடு வந்து சேராது என்பதை உங்கள் தேசியத் தலைவர் ஆதாரங்களோடு நிலைநாட்டிப் போய்ச் சேர்ந்து விட்டார், இப்போதும் உலகம் அறியாச் சிறுபிள்ளைகள் சில இந்த வாக்கெடுப்பை நடத்தி விட்டுத் துள்ளிக் குதிக்கின்றன,
கோட்டையில் கொடி நாட்டி விட்டார்கள். விமானப்படையினர் குண்டு போட்டு விட்டார்கள். தேசியத் தலைவர் ஈழம் காணப் போகிறா என்றெல்லாம் கனவு கண்டு தங்களைத் தாங்களே குஷிப்படுத்தி சுய இன்பம் கண்ட கூட்டம். தன் மூச்சை எப்போதோ விட்ட தமிழீழப் பிணத்தை தோண்டி எடுத்து. இன்று 99,99 சதவீதம் என்று கூப்பாடு போடுவதும் அந்த சுய இன்பத்தின் உச்சக்கட்டமே அன்றி. இந்த வாக்கெடுப்பு அரசியல் ரீதியாக ஈழத்தமிழர்களுக்கு எந்த வித பயனையும் அளிக்காது, முடிந்தால். முள்ளிவாய்க்காலில் பிணங்களைத் தோண்டி இலங்கை அரசின் யுத்தக் குற்றங்களை அம்பலப்படுத்தி சர்வதேச ஆதரவைத் தேட வக்கில்லாமல். பிணத்தை வைத்து பிழைப்பு நடத்தும் முயற்சியின் தொடர்ச்சியாக தோண்டி எடுக்கப்பட்டதே இந்த தமிழீழப் பிணம் மீதான வாக்கெடுப்பு,
சர்வதேச தலைநகரங்களில் லட்சணக்கணக்கில் திரண்டு. கேவலம். உண்ணாவிரதத்தில் ஹம்பேர்கர் சாப்பிட்ட வரலாற்றுப் பெருமை கூட இந்த வாக்கெடுப்புக்குக் கிடையாது என்பது தான் இந்த ஈழப் பசிக்குள்ளும் விழுங்க முடியாத உண்மை.
பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி
Thanks Thayakam
0 விமர்சனங்கள்:
Post a Comment