இன்று:
 
தேர்தல் முடிவுகள் 2010 Presidential Election Results - 2010
Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Monday, January 18, 2010

இந்தக்கதை முற்றிலும் நம்பக்கூடிய மாதிரி இல்லை!!!!!

அதிரவைக்கும் இந்தியத் தமிழ்ப் பெண்கள்.... அலரும் அமெரிக்கத் தமிழ் இளைஞர்கள்



அமெரிக்காவாழ் இந்திய இளைஞர் அவர். யு.எஸ்.ஸுக்கு விமானமேறும் முன் அவசரமாக அவர் நம்மைப் பார்க்க விரும்பியதால், விமான நிலையத்தில் பிரசன்னமானோம்.

கண்ணில் ரேபான் குளிர்க்கண்ணாடி, ஆப்பிள் சிவப்பு நிறம், நெற்றியில் விழும் சுருள் முடி, சுருக்கமாகச் சொல்லப்போனால் இளவரசன் போல இருந்தார் அந்த இளைஞர்.

அப்படி என்ன பேசப்போகிறார்? சர்வதேச பயங்கரவாதம், பேரழிவு ஆயுதம், அணுசக்தி ஒப்பந்தம், டாலர் மதிப்பு உயர்வு பற்றி ஏதாவது பேசப்போகிறாரா என்றபடி அவரது முகத்தை நாம் ஏறிட்ட நேரம், அந்த இளைஞரின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர்.

‘‘விளக்கைப் பிடிச்சுக்கிட்டு கிணற்றில் விழுந்த கதை மாதிரி ஆயிட்டுது சார் என் வாழ்க்கை. என்னால் ஒரு பாவமும் அறியாத எழுபது வயதைத் தாண்டிய என் அப்பாவும், அம்மாவும் சிறைக்குப் போகப் போகிறார்கள் சார்!’’ என்று அரற்ற ஆரம்பித்தார் அவர். அது விமானநிலையம் என்பதை அவருக்கு நினைவூட்டி, ஆசுவாசப்படுத்தி பேச வைத்தோம். பெயர் வேண்டவே வேண்டாம் என்றபடி பேசத் தொடங்கினார் அவர்.

‘‘சென்னைதான் என் சொந்த ஊர். ஆசாரம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். இரண்டு அக்காள், இரண்டு அண்ணன்கள். நான் கடைக்குட்டி. அண்ணன்கள் இருவரும் கலி போர்னியா மாநிலத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்களாக கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அக்காள்கள் திருமணமாகி டில்லியிலும், மும்பையிலும் வசிக்கிறார்கள். எங்களை ஆளாக்கிய அப்பா ஓய்வு பெற்ற ஆசிரியர். அம்மா ஹவுஸ் ஒய்ப்.

அக்காள் இருவருக்கும் திருமணம் நடந்தபின் மூத்த அண்ணா திருமணம் செய்ய நினைத்திருந்ததால் அப்படியிப்படியென்று அவருக்கு 46 வயதாகி விட்டது. நம் கலாசாரத்துக்கு ஒத்துப் போகிற மாதிரி, குறைவாகப் படித்த, குடும்பப்பாங்கான பெண் வேண்டும் என்று அவர் விரும்பியதால் பட்டுக் கோட்டை பக்கம் ஒரு பெண்ணைப் பார்த்தோம்.

பட்டப்படிப்பு படித்திருந்த அவளை, அண்ணா வுக்குப் பிடித்துப்போனதால் திருமணம் நடந்தது. அண்ணனுடன் அமெரிக்கா போன அவள், போன ஒரே மாதத்தில் அண்ணாவிடம் வம்பு செய்ய ஆரம்பித்தாள். உறவுக்கு முயலும்போது ஹிஸ்டீரியா வந்த மாதிரி அவள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறாள். ‘நீ கிழவன். உன்னுடன் வாழ்வது நரகம். என்னைத் தொட்டால் தற்கொலை செய்து கொள்வேன்’ என்று அவள் மிரட்ட, அண்ணா நொறுங்கிப் போனார். ‘என்னைப் பிடிக்கவில்லை என்றால் திருமணத்துக்கு நீ மறுத்திருக்கலாமே?’ என்று அண்ணா சொன்னபோது, ‘வீட்டில் என் விருப்பத்தை யார் கேட்டார்கள்? ‘அமெரிக்க மாப்பிள்ளையைக் கட்டிக் கொண்டால் நீ இஷ்டம் போல இஷ்டப்பட்டபடி வாழலாம். அவனைப் பிடிக்காவிட்டால் வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடுக்கலாம். நீ கேட்கிற பணத்தை அவன் கதறிக் கொண்டு உன் காலடியில் வைப்பான்’ என்றார்கள். அந்த யோசனை பிடித்திருந்ததால்தான் நான் திருமணத்துக்குச் சம்மதித்தேன்’ என்றிருக்கிறாள்.

அதிர்ந்து போன அண்ணா, ‘சீ! நீயும் ஒரு பெண்ணா?’ என்று திட்ட, அதற்காகவே காத்திருந்ததுபோல அவள், அமெரிக்க போலீஸாரிடம் போய், கணவர் தன்னை சூடு வைத்தும், மின்சாரம் பாய்ச்சியும் கொடுமைப்படுத்துவதாகப் புகார் கூறிவிட்டாள். ஆத்திரத்தில் அண்ணா அவளை கைநீட்டி அடித்துவிட, அண்ணா மீது வழக்கு விழுந்தது. அந்தப் பெண் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டாள்.

ஊருக்கு வந்த வேகத்தில் என் அப்பா, அம்மா, அண்ணன், அக்காள்கள் எல்லோர் மீதும் அவள் வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடர்ந்து விட்டாள். ஜீவனாம்சமாக ஒரு கோடி ரூபாய் கேட்டாள். திருமணமாகி அவள் எங்கள் வீட்டில் இருந்ததே இரண்டு நாட்கள்தான். அந்த இரண்டு நாளில் நாங்கள் ஓராயிரம் கொடுமை செய்ததாக இருநூறு பக்கப் பட்டியல் தயார் செய்து கோர்ட்டில் கொடுத்து விட்டாள்.

இதனால் என் அப்பா, அம்மா, அக்காள்கள் இருவரும் 15 நாட்கள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவர வேண்டியதாயிற்று. அண்ணாவுக்கு வேலை போனது. வழக்குக்காக அவர் அமெரிக்காவில் இருந்து இங்குவந்து மீண்டும் அமெரிக்கா போய் புதுவேலை தேடுவதற்குள் போதும்போதுமென்று ஆகிவிட்டது. அண்ணாவின் மனைவி எங்கள்மேல் தொடர்ந்த பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில்தான் அடுத்த கொடுமையும் நிகழ்ந்தது’’ என்ற அந்த இளைஞர் தன் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார்.

‘‘அண்ணாவுக்கு நேர்ந்த கதியைப் பார்த்து திருமணம் என்றாலே பதுங்க ஆரம்பித்த என் 2-வது அண்ணனுக்கும் வீட்டில் பெண் பார்க்கத் தொடங்கினார்கள். கும்பகோணத்தில், முதுகலை முடித்த ஒரு பெண் கிடைத்தாள். ‘அமெரிக்க மாப்பிள்ளை, மாதம் 40,000 யு.எஸ்.டாலர் சம்பளம்’ என்றதும் அவளது வீட்டார் குதிபோட்டு வந்தனர். ‘கல்யாணம் ஆனதும் பெண்ணை அமெரிக்காவுக்கு அழைச்சுண்டு போவீர்களா? அமெரிக்க பிரஜைக்கான கிரீன் கார்டு அவளுக்குக் கிடைக்குமா?’ என்பதில்தான் பெண்வீட்டார் அநியாய ஆர்வம் காட்டினார்கள்.

திருமணம் நடந்து அண்ணன் புதுமனைவியுடன் விமானமேறினார். அங்கு போனதும் அந்தப் பெண்ணுக்கு கால் ஒரு இடத்தில் பாவவில்லை. கண்டவர்களுடன் போனில் பேசுவது, ஆண் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு நைட்கிளப்களில் சுற்றி குடித்து, கூத்தடிப்பது என்று ஆரம்பித்து விட்டாள். ‘நீ இந்தியப் பெண்தானா?’ என்று அண்ணா எரிச்சல்பட்டுக் கேட்ட போது அவள் அளித்த பதில் ‘நான் உனக்குக் கழுத்தை நீட்டியதே இதற்காகத்தான் கண்ணா!’

தகராறு முற்றி, என் 2-வது அண்ணன் அந்தப் பெண்ணை கும்பகோணத்துக்குக் கொண்டுபோய் பிறந்த வீட்டில் விட்டுவிட்டார். அவர்கள் அமெரிக்க மாப்பிள்ளையைப் பிடித்ததே வரதட்சணைக் கொடுமை வழக்குத் தொடுத்து கோடிக்கணக்கில் கறக்கத்தான் என்பது பின்னர்தான் எங்களுக்குத் தெரிய வந்தது. மூத்த அண்ணாவுக்கு நேர்ந்த கதி இளைய அண்ணாவுக்குத் தெரியும் என்பதால் அவர், அந்த கும்பகோணம் பெண்ணிடம் நஷ்டஈடாக ரூ.15 லட்சம் தருவதாக பேரம் பேசிப் பார்த்தார். அவளோ, ‘ரூ.2 கோடியை வை!’ என்று ஒற்றைக்காலில் நின்றாள்.

அண்ணன் அதற்கு மசியாத நிலையில், எங்கள் மேல் வழக்கு விழுந்தது. அனைவரும் சிறைக்குப் போய் முன்ஜாமீனில் வெளிவந்தோம். வழக்கு நடந்து வந்த வேளையில் இப்போது ஒரு புரோக்கர் மூலமாக அந்தப் பெண், ரூ.50 லட்சம் கேட்க, நாங்கள் ரூ.25 லட்சத்தில் நிற்கிறோம். இந்தப் பிரச்னையில் என் அக்காள்கள் இருவரும் கூட சிறை செல்ல நேரிட்டதால் எரிச்சலடைந்த என் அத்தான்கள் ‘வழக்கு முடியும் வரை இருவரும் பிறந்த வீட்டில் வாழாவெட்டியாக இருங்கள்’ என்று அவர்களை பிறந்தகத்துக்கு அனுப்பி விட்ட கொடுமையும் நடந்தது.

நான் விசாரித்தபோது, இப்படி ஜீவனாம்சம், வரதட்சணை வழக்குத் தொடர்ந்து பல கோடிகளைக் கறப்பதற்காகவே இந்தியாவில் பலர் அமெரிக்க மாப்பிள்ளைகளைத் தேடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டோம். இதில் சிக்கிய அமெரிக்க மாப்பிள்ளைகள் பலர் வேலையை மட்டுமின்றி அமெரிக்கக் குடியுரிமையையும் இழந்திருக்கிறார்கள். என் அண்ணன்களுக்கும் இதுதான் நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

இதற்குள் சூடுபட்ட பூனைபோல ஆகிவிட்ட நான், ‘இந்தியப் பெண்ணா? ஐயோ வேண்டாம்!’ என்று உஷாராகி, அமெரிக்காவில் ஒரு வெள்ளைக்கார பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டேன். ஒரு வருடம் மட்டுமே என்னுடன் வாழ்ந்த அவள் எக்காரணம் கொண்டும் எனக்கு பிள்ளை ஒன்றைப் பெற்றுத் தர மறுத்துவிட்டாள். ‘ஒரு கருப்பனுடன் என்ஜாய் பண்ணலாம். ஆனால் பிள்ளை பெற்றுக்கொள்ளக் கூடாது’ என்பது அவளது பாலிஸி.

அந்த அமெரிக்கப் பெண்ணுக்கு நிறைய பாய் ஃப்ரெண்ட்ஸ் இருந்ததால் அவளை டைவர்ஸ் செய்து விட்டேன். இனி என் வாழ்வில் திருமண பந்தமே கூடாது என்று ஒரு சன்னியாசி போல லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், நானுண்டு என் வேலையுண்டு என்றிருந்தேன். ஆனாலும் விதி ‘இந்தியப் பெண்’ வடிவத்தில் வந்து என்னைப் டித்துக் கொண்டது’’ என்ற அந்த இளைஞர் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு சோகக் கதையைத் தொடர்ந்தார்.

‘‘என் வாழ்வில் இனி திருமணமே வேண்டாம் என்றிருந்த நிலையில், என்னுடன் பணிபுரிந்த நண்பர்கள், ‘ராஜகுமாரன் மாதிரி இருக்கும் நீ சும்மா இருப்பதா? உன் அந்தஸ்துக்குத் தக்கபடி ஒரு பெண்ணைப்பார். எந்தப் பிரச்னையும் வராது’ என்று ஆசை காட்டினார்கள். எனக்காக அவர்களே மேட்ரிமோனியல் விளம்பரம் செய்தார்கள்.

அந்தவகையில் என் இ-மெயிலுக்கு பெண்களின் பெற்றோர்கள் பலர் பயோடேட்டா அனுப்பினார்கள். ஆனால் ஒரு பெண் தன்னிச்சையாக அவளே அவளது பயோடேட்டாவை அனுப்பியிருந்தாள். புகைப்படத்தில் அப்சரஸ் மாதிரி அவள் அழகாக இருந்தாள். அவளை நான் தொடர்பு கொள்ளாத நிலையிலும் அவள் விடாமல் எனக்கு இ-மெயில் அனுப்பினாள். திடீரென ஒருநாள் சாட்டிங்கில் பேசினாள்.

‘‘நான் பேரழகி. என்னைத் துரத்தும் எந்த ஆண் மகனையும் எனக்குப் பிடிக்காது. நான் விரும்புகிற ஆணை நான்தான் துரத்தித் துரத்தி காதலிப்பேன் என்று என் ஜாதகம் சொல்கிறது. அவன் என்னைவிட வயதில் சின்னவன் என்றும் ஜாதகத்தில் இருக்கிறது. அதுபோல எனக்கு 32 வயது. உனக்கு 31 வயது. நான் தேடிய ஆண்மகன் நீதான்’’ என்று அவள் சாட்டிங்கில் பிதற்ற ஆரம்பித்தாள்.

அவள் பைத்தியமோ என்று நினைத்து தவிர்த்துப் பார்த்தேன். அவளோ போனில் வாய்விட்டுக் கதற ஆரம்பித்தாள். ஒருவேளை பணத்துக்காக வெளி நாட்டு மாப்பிள்ளைகளை வளைக்கும் மணப்பெண் கும்பலைச் சேர்ந்தவளோ என்ற சந்தேகத்தில், தமிழகத்தில் உள்ள என் நண்பர்களிடம் அவளைப் பற்றி விசாரிக்கச் சொன்னேன். கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரம்.

அவள் தமிழ்நாட்டின் முக்கிய நகரமொன்றில் வசிக்கும் கோடீஸ்வர வைர வியாபாரியின் மகள். முதுகலை முடித்தவள். வீட்டில் அவளுக்கு வேலை செய்ய மட்டுமே மூன்று வேலைக்காரிகள் இருக்கிறார்கள். அவளது பங்களாவில் மொத்தம் 9 கார்கள். அவளது அப்பா அவளுக்காக சிம்லா முதல் கன்னியாகுமரி வரை மாப்பிள்ளை தேடிவருகிறார். அவளோ அனைத்து வரன்களையும் தட்டிக் கழித்து வருகிறாள். ‘பேரழகி என்ற கர்வத்துடனேயே மகள் வயதாகி கிழவியாகி விடுவாளோ?’ என்ற பயத்தில் அவளது அப்பா இருக்கிறார். இவையே நான் தெரிந்து கொண்ட தகவல்கள்.

அந்தப் பெண் மீண்டுமொருமுறை என்னிடம் பேசியபோது, ‘இந்தியப் பெண்கள் எல்லோருமே பிளாக்மெயிலர்கள்’ என்ற நான், என் அண்ணன்களின் கதைகளைச் சொன்னேன். கோபப்பட்ட அவள், ‘என்னையும் அப்படி நினைத்து விட்டாயா?’ என்று பொங்கினாள். திடீரென ஒரு நாள் திடுதிப்பென அவள் டூரிஸ்ட் விசாவில் அமெரிக்கா வந்து, என்முன் நின்றபோது திகைத்துப் போய் விட்டேன்.

‘உன் மீது நான் உயிராய் இருக்கிறேன். உன் மேல் எந்த வழக்கும் போட மாட்டேன் என்று வெற்று பேப்பரில் நான் கையெழுத்துப் போட்டுத்தரத் தயார்’ என்று அவள் உருகினாள். ‘நான் ஏற்கெனவே திருமணமாகி டைவர்ஸ் பெற்றவன்’ என்ற உண்மையை அவளிடம் சொன்னேன். அவள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘உனக்கு எத்தனை கல்யாணம் ஆகியிருந்தால் என்ன? என் புருஷன் நீதான்’ என்று என்னைக் கட்டியணைத்துக் கொண்டாள். அவளை ஊருக்கு அனுப்பி வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

ஊருக்குப் போனபிறகும் போன்கால், சாட்டிங், இ-மெயில் தொடர்ந்தது. ஒருநாள் என் இல்லத்துக்கு ஒரு பார்சல் வந்தது. பிரித்தபோது அதில், அவள் கையெழுத்துப் போட்ட வெற்று ஸ்டாம்ப் பேப்பர்கள் இருந்தன. ‘இனியும் நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்தால் என் பிணம்தான் வீட்டில் கிடக்கும்’ என்று அவள் மிரட்ட, உடனே ஊருக்கு விமானமேறினேன். அப்பா, அம்மாவிடம் பேசி, இரண்டே நாளில் பத்திரிகை அச்சடித்து, சுமார் 300 பேரை அழைத்து, ஒரு கோயிலில் என் திருமணம் நடந்தது. ஒரு வார காலத்துக்குப் பின் அவளுக்கு ஒரு மாதகாலம் தாற்காலிக விசா எடுத்துக¢கொண்டு அமெரிக்கா புறப்பட்டேன்’’ என்ற அந்த இளைஞர் மீண்டும் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு வேகமாகக் கதை சொல்ல ஆரம்பித்தார்.

‘‘ஒரு வாரம்தான் அவள் நல்லமாதிரி இருந்தாள். என் குடும்ப நண்பர்கள் இருவர் என் வீட்டுக்கு வந்த போது அவளும், நானும் சமையல் செய்து உணவு பரிமாறினோம். செக்ஸில் என்னைவிட அவள் ஆர்வமாக இருந்தாள். புதுப்புது வித்தைகளைச் சொல்லித் தந்தாள். ‘இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டபோது, ‘படித்துத் தெரிந்து கொண்டேன். ஃப்ரெண்ட்ஸ் சொல்லித் தந்தார்கள்’’ என்றாள்.

அப்பாவியாக அவள் சொன்னதை நம்பினேன். ஆணுறை பயன்படுத்தாமல் ஒருமுறைகூட அவள் என்னை நெருங்கவிடவில்லை. ‘கணவன், மனைவிக்குள் ஆணுறை எதற்கு?’ என்று நான்கேட்ட போது, ‘தாற்காலிக விசாவில்தானே என்னை இங்கே கூட்டி வந்திருக்கிறாய்? கிரீன்கார்டு வாங்கிக் கொடு. உனக்கு குழந்தையைச் சுமப்பது பற்றி அப்போது யோசிக்கிறேன்’ என்றாள்.

அதன்பின் ஊருக்குக் கிளம்பிய அவள், அங்கிருந்து போன் செய்தபோது கேட்ட முதல் கேள்வியே, ‘கிரீன் கார்டு எப்போது கிடைக்கும்?’ என்பதுதான். ‘ஒரு வருடம் என்னுடன் தங்கினால்தான் கிரீன் கார்டு கிடைக்கும். தாற்காலிக விசாவில் வந்து என்னுடன் தங்கு’ என்று நான் சொன்னபோது, தனக்கு குளிர்க் காய்ச்சல் என்று பினாத்திய அவள்,

‘உன்னிடம் ஒரு வாரத்தில் என்ன சுகம் கண்டேன்? உன் நண்பருக்கும் அவர் மனைவிக்காகவும் என்னை வெங்காயம், காய்கறி வெட்ட வைத்து விட்டாயே? நீ என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தாய். அதனால்தான் எனக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது’ என்றாள். ‘நான் எப்போது உன்னை செக்ஸ் டார்ச்சர் செய்தேன்?’ என்று கேட்டபோது, ‘என் மேல் அமர்ந்து நீ ஏதோ செய்ததில் என் தொடையில் ரத்தம் கன்றிப்போய் விட்டது’ என்று பச்சை பச்சையாக ஏதேதோ சொன்னாள்.

அவளுடன் செல்போனில் பேசிய அந்த நேரம் பீப்பீப் ஒலி எழுந்ததால் என் பேச்சை அவள் பதிவு செய்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். ‘இவள் யார்? ஏன் இப்படி நாடகமாடுகிறாள்?’ என்று அதிர்ச்சியாக இருந்தது. மீண்டுமொரு முறை தமிழக நண்பரை அழைத்து அவளைப் பற்றி விசாரிக்கச் சொன்னேன். அப்போது கிடைத்த தகவல்கள் அதிர வைத்தன.

‘அவள் பல ஆண்களுடன் தொடர்புள்ளவள். பிடித்த ஆண் கிடைத்தால் அவனை அடைந்தே தீரும் ஒரு மாதிரியான சைக்கோ அவள். திருமணம், தாலி, குடும்பம் இதிலெல்லாம் அவளுக்கு நம்பிக்கையில்லை. திடீரென வெளிநாட்டு ஆண்கள் மேல் மோகம் முட்டியதால், ஒரு கிரீன் கார்டு வாங்கி அமெரிக்காவில் செட்டிலாகிவிடும் எண்ணத்தில் திருமணம் செய்திருக்கிறாள்.

‘கார்டு கிடைக்கத் தாமதமானால் கணவன் மீது அமெரிக்க போலீஸில் டார்ச்சர் புகார் கொடுத்து, இந்தியாவில் ஜீவனாம்ச வழக்குத் தொடுத்தால் அமெரிக்க கிரீன் கார்டு கிடைத்துவிடும்’ என்று சில வக்கீல்கள் அவளுக்கு யோசனை சொல்லியிருப்பதால் தற்போது அந்த முடிவில் அவள் இருக்கிறாள். அதனால்தான் செக்ஸ் டார்ச்சர் பற்றி போனில் பேசியபோது அதைப் பதிவு செய்திருக்கிறாள். இது போக ஒரு மருத்துவரிடம் போய், தனக்குத் தொடையில் காயம், மார்பில் காயம் என்று சர்டிஃபிக்கேட் தர முடியுமா? என்று கேட்டிருக்கிறாள். அதற்காக தன்னையே அந்த மருத்துவருக்குத் தந்திருக்கிறாள்.

திருமணத்துக்கு முன் டூரிஸ்ட் விசாவில் அவள் அமெரிக்கா வந்திருந்தாள் அல்லவா? அப்போது உடனடி பாஸ்போர்ட், விசாவுக்காக சம்பந்தப்பட்ட சிலருடன் அவள் சில இரவுகளைக் கழித்திருக்கிறாள். இதையெல்லாம் எனக்குத் தெரிவித்த நண்பர், ‘எழுபது வயதைத் தாண்டிவிட்ட உன் அப்பா, அம்மா மீதும் அவள் வழக்குத் தொடுக்கும் மூடில் இருப்பதால் உஷாராக இருந்து கொள்’ என்று எச்சரித்தார்.

அதிர்ந்து போன நான் அடுத்த விமானத்தில் சென்னை வந்தேன். அவளைச் சந்தித்தபோது, ‘ஓ! டார்லிங். ரொம்ப முடியலை’ என்று குலாவினாள். அவள் எந்தநேரத்தில் வேண்டுமானாலும் என்மீது புகார் தந்து என்னையும், என் வயதான பெற்றோரையும் சிறைக்கு அனுப்பப் போவது உறுதி. அதற்காக யாருடனும் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள அவள் தயங்க மாட்டாள். இனி என் கதி என்ன? அடிக்கடி நான் இங்கே வந்து அலைய வேண்டியிருக்குமா? கடவுளே! ஒன்றுமே புரியவில்லையே.

அந்த மனப்பாரத்தைச் சொல்லத்தான் உங்களைக் கூப்பிட்டேன். இந்திய மணமகள்கள் என்றால் அமெரிக்க மாப்பிள்ளைகளை இனி எட்டியிருக்கச் சொல்லி உங்கள் பத்திரிகையில் எச்சரிக்கைக் கட்டுரை எழுதுங்கள்’’ என்று சொல்லிவிட்டு ரோலிங் சூட்கேசை இழுத்துக் கொண்டு விமானத்தை நோக்கி நகர்ந்தார் அந்த இளைஞர்.

அவர் சென்ற திசையையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Read more...

Sunday, November 1, 2009

கொட்டில் இலக்கம் 13, வலயம் 3.0 இனை சேர்ந்த......எழுதாத கவிதைகள்....

"கண்மணி...கண்மணி...எடி பிள்ள கண்மணி..." வீர மரத்தின் கீழ் இருந்த முருகேசர் பேத்தியை அழைத்தார். "எடி மோனை...சாப்பாட்டுக்கு மணி அடிச்சிட்டு..." மீண்டும் அவரது குரல். கண்மணிக்கு கோபம், அழுகையும் கூட. "எத்தனை தடவை சொல்லுறனான், என்னை கண்மணி எண்டு கூப்பிட வேண்டாம் எண்டு டச்சுக்காலப்பெயர். அக்கம்பக்கத்துப் பிள்ளைகள் கேலி செய்யிறதுகள்..." சொல்லியவாறு கிண்ணம் எடுத்தாள். அவள் வாய் மூடவில்லை. "கண்மணியே...கண்மணியே...சொல்லுவதைக்கேளு..." முன் தறப்பாளுக்குள் இருந்து சிறிரங்கன் பாடினான். "செருப்பு பிய்யும்..." பல்லை நெருமிக்கொண்டு கண்மணி சொன்னாள். "என் கண்மணிக்கு கோபம் வந்தால்..." மேலும் பாட, "பாருங்கோ அம்மா !... அப்புவுக்கு குடுக்கிற ஏச்சில எல்லாம் சரி வரும்..." எடுத்த கிண்ணத்தை கீழே வைத்துவிட்டு "நான் சாப்பாடு வாங்க போகமாட்டன்..." கண்மணி இருந்திட்டாள்.


சமையல் கூடம் தொடங்கி வீதி வரை வரிசையாக மக்கள். குஞ்சு குருமன் எல்லாம் வெள்ளிக்கிண்ணங்களுடன். கண்மணி வந்திட்டாளா? முருகேசர் உற்று நோக்குகிறார். அவள் தென்படவில்லை. எழுந்து வந்தார். சூரியன் சற்று விலகி விட்டான். கிண்ணங்களில் பட்டுத்தெறித்த கதிர்கள் முருகேசரின் முகத்தில் அடுத்தடுத்து விழுந்தன. பார்த்துக்கொண்டு நின்ற சிறிரங்கன் "என்னப்பு எல்லாரும் உங்களை போட்டோ எடுக்கிறாங்கள்..." கிண்டலாக. "ஓமடா மோனை போட்டோதானே...எடுக்கட்டும் எல்லாத்தையும் இழந்திட்டம் மிஞ்சியிருக்கிறது இந்த உடம்பு அதையாவது எடுத்து வைச்சா...இதுதான் முருகேசன்ட சொத்து எண்டு பேத்தியிட்ட குடுக்கலாமெல்லே..." கூறியவர் சிறிரங்கனுக்கு முன்பாக வரிசையில் நுழைந்தார். "இஞ்ச பாருங்கோ...நாங்களும் வெயிலுக்க வரிசையில்தான் நிக்கிறம் இடையில் நுழையிற சேட்டை இருக்கப்படாது..." பின்னால் இருந்து ஓர் குரல் ஒன்று மட்டுமல்ல அஞ்சிஞ்சி அடுத்தடுத்து வந்து வீழ்ந்து வெடித்ததைப்போல் பல குரல்கள் அண்ணாந்து பார்த்த முருகேசர் "பரந்தாமா !... பரமேஸ்வரா !... சீனிவாசா !... சிறிரங்கா !... என புலம்ப பின்புறம் நின்ற சிறிரங்கன், "என்னப்பு..."என்று வினாவ "நான் உன்னைக்கூப்பிடவில்லையப்பா கடவுளை கூப்பிடுறன்..." "அப்பு நீங்கள் பேசாமல் இருங்கோ நான் கதைக்கிறன்..."வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்து விட்டது.

கூடாரத்துக்குள் இருந்த கண்மணி எட்டிப்பார்த்தாள். சிறிரங்கனுக்கு இரண்டு பேர் சேர்ந்து கும்மாங்குத்து. "அப்படிப்போடு... போடு... அடிச்சுப்போடு கையால..." மெதுவாக பாடியவள் "நல்லாய் வாங்கிக் கட்டு உன்ர தொந்தரவு என்னால தாங்கவே ஏலாது..." தனக்குள் முணுமுணுத்தாள். இவ்வாறு இருக்க முகாம் தலைவர் அங்கே வந்தார். "என்ன பிரச்சனை ? தயவு செய்து சண்டையை நிறுத்துங்கோ..." குப்புறப்படுத்திருந்த சிறிரங்கன் எழுந்தான். வீங்கிய கன்னம், கிழிந்த சேட், முருகேசரை பார்க்கிறான். அவிழ்ந்த வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டிருந்தார். "இஞ்ச பாருங்கோ ! இனிமேலாவது வரிசை குழுப்பாது ஒழுங்காக வந்து சாப்பாடு வாங்கிப் போங்கோ. முதல் எங்களுக்குள்ள ஒற்றுமை இருக்கவேணும். அது இல்லாததால்தான் துண்டைக்காணோம், துணியைக்காணோம் எண்டு வந்து இந்த முகாங்களுக்க அடைபட்டு இருக்கிறம்..." தலைவர் சொல்ல முருகேசருக்கு முன்னால் நின்ற செல்லையா விம்மினார். "என்ன செல்லையா...? தடிமலே...? மூக்கு துடைக்கிறாய்..." "இல்ல அண்ண... ஓடி வந்தபோது நந்திக்கடலில்...கழண்டு போன சாரத்தையும், நான் வந்த கோலத்தையும் நினைக்க அழுகை வந்திட்டுது..." "சச்ச...கடந்ததுகளை நினைக்காதை, கவலை வரும் தலைவர் சொல்லுறதைக் கேள்..."என்றார் முருகேசர். "இன்னொரு விசயம் சொல்ல மறந்திட்டன் நாளைக்கு சமைக்கிறதுக்கு விறகில்ல. ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு கட்டை கொண்டு வந்தால் போதும்..." தலைவர் சொல்லி முடியவில்லை, இப்படி எண்டா.. எங்களுக்கு சாப்பாடு வேண்டாம், நிறுவனந்தானே விறகும் தாறது போய் நிறுவனத்தை கேளுங்கோ... விறகு எடுக்கிற இடத்தில கால் வைக்கலாம் எண்டால் பரவாயில்ல.. அங்க முழுதும் மிதிவெடி... "முருகேசர் சொல்ல எல்லாரும் சிரித்தனர்.

* * *


மிதிவெடி என்று சொல்ல சிரிக்கிறார்கள் என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் அவர் சொன்னது வெடிக்கும் மிதிவெடியல்ல. மக்களின் மலங்கள். முருகேசர் வாழும் முகாமில் ஏறத்தாழ ஜம்பது வலயங்கள். ஒருவலயத்தில் குறைந்தது ஆயிரத்து ஜநூறு பேர் இருப்பார்கள். மக்களின் தொகைக்கேற்ப மலசல கூட வசதியில்லை. அதனால் பொழுது விடியும் முன்பே அழிக்கப்பட்ட காட்டு மரங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் வரம்புகளில் மக்கள் குந்தி விடுவர். நீர் வசதியும் இதே போன்றுதான். குழாய்க்கிணறு, பவுசர் நீர், அதை விட குழாய் நீர் விநியோகம் இவை எல்லாம் நடைபெறினும் மக்கள் தண்ணீரை காசு போல கட்டு மட்டாகத்தான் பாவிக்கிறார்கள்.

* * *


மதியச் சாப்பாட்டு வேளை முடிந்தது. தண்ணி எடுக்கச் செல்பவர்கள் செல்ல... ஆங்காங்கே தெரியும் மர நிழல்களுக்குள் இளைப்பாறுவர் இளைப்பாற.... இவ்வாறு மக்கள். முருகேசர் அந்த வீர மரத்தை சென்றடைகிறார். குளித்தது போன்று வியர்வை. சால்வையி்ல் துடைத்துக்கொண்டு "ம்...என்ன கொடுமை.. தறப்பாளுக்க இருக்க ஏலாதப்பா... மா..அவியிற சூடு. ஏன்தான் இதுக்க எங்கள வேக வைக்கிறாங்களோ...? அது சரி. தெரியாமல்தான் கேட்கிறன். புலிகளை அழிச்சிட்டம் எண்டு சொல்லுகினம். பிறகு எதுக்கு எங்களை கம்பி போட்டு அடைச்சு வைச்சிருக்கினம்..." "முருகேசண்ண..! எங்கட பெடியள் கொஞ்சப்பேர் காட்டிலையும், இந்த முகாங்களுக்கையும் இருக்கிறாங்களாம். எல்லாரையும் களைஞ்சு போட்டுத்தானாம் மீள்குடியேற்றம்..." என்றார் செல்லையா. "என்னத்தை களையிறது...?" "அண்ண..! இதுக்குள்ளேயே புலிகள் அழியவில்லை. போராட்ட்ம தொடரும் எண்டு கக்கூஸ் கூடுகளில் எழுதுறவங்களை அங்க கொண்டு போனா... சொறியாமலே இருப்பாங்கள், இவ்வளவு காலமும் போரால பட்ட சீரழிவு போதுமண்ண...அவங்கள் தாறத வாங்கிக்கொண்டு பேசாமல் இருப்பம்..." "டே...டே...செல்லையா கொஞ்சம் பொறு. நாங்கள் சொன்னனாங்களே...? சண்டை செய். எங்களை இஞ்ச இழுத்து வா. முகாமுக்க அடைச்சு வை. சாப்பாடு தா. தண்ணி தா. கேட்டனாங்களே...? எது தந்தாலும் நாங்கள் திருப்தியடைய மாட்டம். தமிழருக்குரிய உ ரிமை தர வேணும்..."முருகேசர் உணர்ச்சிவசப்பட்டு பேச, " அண்ண.!.. வேண்டாம்..அண்ண.. இதோட விட்டிடு... வேண்டாம் அண்ண..."செல்லையா நடுக்கத்தோடு சொல்லி முடித்தார். "ஓமடாப்பா !.. அந்த கதையை விடுவம். அங்க பார்...பெண்டுகள் பெடியள் எல்லாம் ஓடுதுகள்..." "லொறியில பிஸ்கட்டும் தண்ணிப்போத்தலும் குடுக்கிறாங்களாம்..." சிறுவன் ஒருவன் சொல்லிக்கொண்டு ஓடினான். "முருகேசண்ண !... வா...எங்களுக்கும் தருவாங்கள்..." செல்லையா சாரத்தை மடிச்சுக் கட்டினார்.

* * *


இங்குள்ள நிலமை இதுதான். இந்த விடயத்தில் எவருக்கும் வெட்கம் வருவதில்லை. முதலாளி என்ன? சம்மாட்டி என்ன? யாராய் இருந்தாலும் நீ முதல், நான் முதல் என வரிசையில் நின்றுதான் வாங்க வேண்டு்ம. இதில் கைகலப்பு வாக்குவாதம் எல்லாமே வரும். இப்பொழுது ஓரளவு குறைவு. வியாபார நிலையங்கள் முகாங்களுக்குள் இருப்பதால் சமைத்த உணவு தவிர இலவச விநியோகம் குறைக்கப்பட்டுவிட்டது. முகாமுக்கு வந்த தொடக்கத்தில் சாப்பாடு வாங்கச் சென்ற முருகேசர் கால்களுக்குள் மிதிபட்டு மூச்செடுக்காமல் இருந்த சந்தர்ப்பமும் உண்டு. ஒருவன் வாங்கிய உணவுபொதியை கிடைக்காத இன்னொருவன் தட்டிப்பறித்த சம்பவமும் உண்டு. தத்தமக்கென சொந்தக்காணி, வீடு சாசல், தொழில், தோட்டம் துரவு என வைத்திருந்த இவர்கள் இன்று வெறுங்கையுடன் நின்று அரசு தொண்டு நிறுவனங்கள் போடும் பிச்சையை ஏந்திக்கொண்டிருக்கிறார்கள். வரலாறு காணாத வார்த்தையால் வடிக்க முடியாத இத்துயரச்சம்பவங்கள் இவர்கள் மனதை விட்டு என்றும் அகலாது.

* * *


"ம்...சிறிரங்கன் இண்டைக்கு இந்தப்பக்கமும் இல்ல. பாவம் பெடியன் காச்சலோட நல்ல அடி வாங்கிட்டான். சிறிரங்கா...சிறிரங்கா..." முருகேசர் அவன் இருக்கும் தறப்பாளுக்குள் நுழைந்தார். அவன் காச்சலால் உதறிக்கொண்டிருந்தான். கொழுத்தும் வெயில். காற்று வாரி இறைக்கும் தூசு. தறப்பாள் வெப்பம். சன நெரிசல். ஈக்களின் கொண்டாட்டம், கழிவு வாய்க்கால்களின் துர்நாற்றம் நோய் வராமல் என்ன செய்யும் ? சிறிரங்கனைப்போல் இன்னும் எத்தனையோ பேர். வாந்தி பேதி வேணுமா ? வயிற்றோட்டம் வேணுமா ? செங்கமாரியா ? மங்கமாரியா ? மூளைக்காய்ச்சலா ? மலேரியாக்காய்ச்சலா ? எது வேண்டும் முகாமில் எல்லாம் உண்டு. சிறிரங்கன் தனிநபர் பதினெட்டு வயது நிரம்பவில்லை. பெற்றோர் சகோதரர் செல்வீழ்ந்து பூண்டோடு கயிலாயம். "நான் எதற்கு தப்பி வந்தேன்..." அவன் இப்போது யோசிப்பதுண்டு. தனது கவலைகளை மறப்பதற்காக கண்மணியை நினைப்பதுண்டு. அவளுக்கு வயது பதினாறு. பொக்கணையில் பச்சைத்தண்ணியில் அவித்த பருப்பும் சோறுந்தான் சாப்பிட்டாள் என்றாலும் பரவாயில்லை பருவ வயது அவளில் களை கட்டியது. "அப்பு...அப்பு...ஓடி வாங்கோ...தண்ணிப்பவுசர் வந்திட்டுது. வரிசையில் நில்லுங்கோ. நான் டாசர் எடுத்துட்டு வாறன்..." முருகேசரை அழைத்தாள் கண்மணி . "நான் கூப்பிட வர ஏலாது.. நீ கூப்பிட்ட உடன நான் வேணுமே ! ..போய் வரிசையில் நில். வெயில் குளிச்சு தண்ணி எடு..." "நீங்கள் என்ட சொந்தப்பெயரை கூப்பிட்டிருந்தால் வந்திருப்பன். கண்மணி எண்டு ஏன் கூப்பிட்டனீங்கள்...? " "எடி பிள்ள...கண்மணி அன்புப்பெயர் நான் சாகும் போதும் கண்மணி எண்டுதான் கூப்பிடுவன்..." முருகேசர் சொல்ல, "நானும் அப்படித்தான் கூப்பிடுவன்..."சிறிரங்கனும் சொன்னான். "மூக்கும் முழியும் ஆளைப்பாரன்..." சொன்னவள் டாசருடன் பவுசர் நிற்கும் இடம் சென்றாள்.

"அப்பு... ஆஸ்பத்திரியில டோக்கன் எடுத்து தாறீங்களே..? ஏலாம இருக்கு. எப்பிடி அதில போய் நிக்கிறது...?" "எட பொடியா...! இஞ்ச உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு போனால் பனடோல் மட்டுந்தான் தருவாங்கள். எந்த வருத்தம் எண்டு சொன்னாலும் அதுதான். மருந்துகள் இல்ல அதை விட ஆமியிட்ட அடி வாங்கினாலும் பரவாயில்ல குமாரசாமி முகாமில இருக்கிற இந்தியன் ஆஸ்பத்திரிக்கு போவம்..." "ஓமோம் விடிய ஜஞ்சு மணிக்கு வெளிக்குடுவம்..." குமாரசாமி முகாம் கூப்பிடு தூரத்தில்தான். இருந்தும் அங்கு போவதென்றால் இலகுவான காரியமல்ல. முட்கம்பி வேலி கடக்க வேண்டும். ஜம்பது மீற்றருக்கு
ஒரு காவலரண்கள். விடிய ஜந்து மணி இருவரும் வேலிக்கு அருகில் செல்கின்றனர். "தம்பி டேய்...! நேற்று ஆமிக்காரனுக்கு எங்கட சனம் கல் எறிஞ்சதுகள். கோபத்தில நிற்பாங்கள் கவனமாக பார்த்து வேலியுக்க நுழைஞ்சு போ..." முருகேசரின் ஆலோசனை அங்கும் இங்கும் பார்த்த சிறிரங்கன் தவழ்ந்து தவழ்ந்து ஒருவாறு நுழைந்து விட்டான். முருகேசரும் அப்படியே செல்ல இராணுவ வீரன் கண்டுவிட்டான். "அடோ..! எங்க போறது. புலி நல்ல றெயினிங் தந்திருக்கு. நீ கிழட்டு புலி அப்படித்தானே...!" என அதட்டினான். "இல்லை...ஜயா...மருந்து எடுக்கப்போறன்..." பயத்தால் முருகேசருக்கு வேட்டி கழன்றது. "சரி...சரி...அப்பு ஆச்சே...அதனால் விடுறன். இன்னைக்கு மட்டுந்தா...இனி மேல் டோக்கன் எடுத்து போக வேணும் சரியா...? "முருகேசர் தலையாட்டினார். தண்ணிக்கு டோக்கன், சாமான் வாங்க டோக்கன், ரெலிபோன் கதைக்க டோக்கன், குளிக்கிறதுக்கு டோக்கன்... கக்கூசுக்குத்தான் டோக்கன் இல்ல அதுவும் எப்பவோ...? நினைத்துக்கொண்டு வேகமாக நடக்கிறார்.

மருத்துவ மனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் நின்றும்..இருந்தும்..படுத்தும்..நிற்க இடமில்லாமலும்..அதைப்பார்த்ததும் சிறிரங்கனுக்கு காய்ச்சல் மேலும் அதிகரித்தது. "தம்பி ஒன்பது மணிக்குத்தான் டாக்குத்தர்மார் வருவினம். இப்படி வரிசையில் நிண்டா...பின்நேரந்தான் முகாம் திரும்ப வேண்டி வரும் ஆஸ்பத்திரி கூட்டினால் டோக்கன் முதல் தருவாங்களாம். நீ இதில இரு நான் கூட்டியிட்டு டோக்கன் எடுக்கிறன்..." கூறிவிட்டு போகும் முருகேசரை அவன் பரிவோடு பார்க்கிறான். "எண்ட பிள்ளைக்கு நாளைக்கு பிறந்த நாள் கட்டாயம் வரவேணும்..." ஒருவன் அங்கிருந்த அனைவருக்கும் சொல்லிக்கொண்டு வந்தான். சிலர் சிரித்தனர். பலர் அனுதாபப்பட்டனர். வேறு சிலர் சந்தேகப்பட்டனர். அவன் இருந்த இடம் பொக்கணை. திரிபோசா வாங்கச்சென்ற மனைவியும் இரு பிள்ளைகளும் வீடு திரும்பவில்லை. செல் வீ்ழ்ந்து சிதறியவர்களில் அவர்களும் அடங்குவர். அன்றில் இருந்து அவன் அப்படித்தான். இன்று அவனுக்கு பைத்தியம் என்று பெயர். இப்படி அவன் மட்டுமல்ல. முகாங்களுக்குள் இன்னும் பலர். முருகேசர் கூட்டித்துடைத்து ஒருவாறு டோக்கன் எடுத்திட்டார். சிறிரங்கனை மருத்துவர் பரிசோதித்தபோது அவனுக்கு செங்கமாரியுடன் மூளை மலேரியா. நோயாளர் காவு வண்டியில் வவுனியா அனுப்பி வைக்கப்பட்டான்.

இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. சிறிரங்கன் முகாம் திரும்பவில்லை. அவன் கரைச்சல் தாங்காமல் ஏசியவள் இப்போ அவனை காண ஏங்குகிறாள். வைத்திய சாலையில் இருந்து வரும் நோயாளர் பேரூந்தை தினமும் பார்ப்பாள். அவன் வருவதில்லை. கடுமையான நோயாளர் சிலர் பிணமாக திரும்புவார்கள். கண்மணியின் தோழி பள்ளித்தோழி சுதர்சினி சென்ற ஞாயிற்றுக்கிழமை அவ்வாறே. ஞாபகம் வந்தது அவளுக்கு தனிமையை நாடுவாள். தன்னையறியாமல் நகம் கடிப்பாள். பொக்கணையில் இருந்து நீரேரி கடந்து வருகையில்தான் இருவரின் சந்திப்பு நடந்தது. கழுத்து வரை தண்ணீர் தலையில் ஒரு பை கண்மணி நடக்கிறாள் சனத்தோடு சனமாக. தவறி பள்ளம் ஒன்றில் கால் வைத்தவள் அமிழ்ந்து கொண்டு போனாள். "கடவுளே என்னைக்காப்பாற்று...."சத்தமிட்டாள். முன்பின் தெரியாதவள் என்றாலும் பரவாயில்ல. ஆபத்துக்கு உதவாதவன் மனிதனா? சிறிரங்கன் அவள் கையை பிடித்து தூக்கினான். அந்தக்காட்சி அவள் மனதில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தது. "கண்மணி..." கூப்பிட்ட சத்தம் கேட்டு திடுக்குற்றாள். முன்னால் முருகேசர் "நான் வந்தது நிண்டதும் தெரியாமல் அப்பிடி என்ன யோசினை ? யு.என்.எச்.ஈ.ஆர் சாமான் குடுக்கிறாங்களாம், முதல் ஓடிப்போய் டோக்கன் எடு. நான் குடும்ப அட்டையோட பின்னால வாறன்..." "எப்ப பார்த்தாலும் ஓடு...ஓடு...டோக்கன் எடு. இதை விட அப்புவின்ட வாயில் வேற வார்த்தையே கிடையாது..." என்றபடி எழுந்து சென்றாள். அப்போது ஒலி பெருக்கியில் ஒரு அறிவித்தல். வீட்டு இலக்கம் பதின்மூன்று வலயம் முப்பதை சேர்ந்த சீனிவாசன் சிறிரங்கன் சாவடைந்துள்ளார். அன்னாரின் பூதவுடல் வவுனியா வைத்திய சாலையில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளது. எனவே இதே வலயத்தை கண்மணி மே.பா. தியாகராஜன். எமது கச்சேரி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அன்னாரின் உடலை பொறுப்பேற்கும் படி வேண்டப்படுகின்றனர். அவள் கண்கள் குளமாயின. அந்தச்செய்தி முருகேசரின் செவிட்டுக் காதிலும் விழுந்தது.

( யாவும் நிஜம் )

முற்றும்
20.08.2009 யாழின்மொழி


Eelanaatham

Read more...

Friday, October 9, 2009

ஒரு குடிமகனின் சரித்திரம்


நமக்குத் தெரிந்தவர்களின், உறவினர்களின் பெயர்களைச் சொல்லி ‘எங்கே…? எங்கே…?’என்று தேடிக்கொண்டிருக்கும் இந்தக் கொடுங்காலத்தில், ‘அவர் கனடாவிலை’, ‘அவ கலியாணம் கட்டி கொழும்பிலை’என்பதையொத்த பதில்கள் ஆசுவாசம் அளிப்பனவாக இருக்கின்றன. ஷெல்லடியில் சிதைந்துபோன, காணாமல் போன, அங்கவீனர்களாகிய, சிறைப்படுத்தப்பட்ட, சுட்டுக் கொல்லப்பட்ட, முகாமில் இருக்கிற வகையிலான பதில்கள் வரக்கூடாதென்பதே எங்களது பிரார்த்தனையாக இருக்கிறது.

அண்மையில் குருட்டு யோசனையோடு ‘அஸ்பெஸ்டாஸ்’ கூரையில் பல்லி பார்த்துக்கொண்டு சோபாவில் படுத்திருந்தபோது, ‘மணியம் மாமா என்னவாகியிருப்பார்?’ என்ற கேள்வி திடுதிப்பென்று எழுந்தது.

மணியம் மாமா எங்களுர் விதானையார் இல்லை. தபாற்காரர் இல்லை. விரல்களில் மினுங்கும் மோதிரங்களைக் காட்டவென்றே கைகளை வீசிக் கதையளக்கிற பணக்காரரும் இல்லை. என்றாலும் குழந்தைகளுக்குக்கூட அவரைத் தெரிந்திருந்தது. சாப்பாடு தீத்தும்போது- நிலவுக்கும் பிள்ளைபிடிகாரனுக்கும் மசியாத குழந்தைகள்கூட மணியம் மாமாவின் பெயரைக் கேட்டால் பெரிய வட்டக் கண்களை இன்னும் பெரிதாக்கி முழுசியடித்துக்கொண்டு, அம்மாமார் உருட்டித் தீத்தும் உருண்டைகளை வேண்டாவெறுப்பாக விழுங்கித் தீர்க்கத் தலைப்படும் அளவுக்கு மணியம் மாமாவின் பெயர் அவர்களுக்கு அதிபயங்கரமூட்டுவது.

அவர் ஓர் அருமையான குடிகாரர். அப்படித்தான் அவரைச் சொல்லமுடியும். நான் அவரைக் கவனிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து, ஊரை விட்டுப் பின்னங்கால் பிடரியில்பட ஓடிவரும்வரை, அவர் ஒரேமாதிரியான தோற்றத்தோடும் நடத்தைகளோடும்தானிருந்தார். சுகாதாரத் திணைக்களத்தில் வேலைபார்த்து ‘கட்டாய’ஓய்வு பெற்றிருந்த அவர், பகல் முழுவதும் தோட்டத்தில் எதையாவது கொத்திக்கொண்டும் கிளறிக்கொண்டும் குந்தியிருப்பார். இல்லையென்றால் அன்னபாக்கியம் மாமிக்குப் பக்கத்தில் அமர்ந்து ‘எணேய்… எணேய்…’என்று கூப்பிட்டு ஏதாவது கதைசொல்லிக்கொண்டோ கீரை ஆய்ந்து கொடுத்துக்கொண்டோ இருப்பார். அப்படியொரு புருசனை அயலுக்குள் காணமுடியாது. அவர் வைக்கும் பிலாக்காய்க்கறி அக்கம்பக்கத்தில் பிரசித்தம். குசினிக்குள் சர்வசதாகாலமும் எதையாவது அடுப்பில் வைத்துக் கிண்டிக்கொட்டிக்கொண்டிருக்கிற பெண்களது கைக்குக்கூட அந்த உருசியைக் கொணரத் தெரியாது. அவ்வளவு கைப்பக்குவம். மணியம் மாமா சமைக்கும் நாட்களில் ஏலமும் கராம்பும் வறுபடும் மணம் அயலெல்லாம் பரவும்.

பின்னேரம் ஐந்து மணியானதும் அவர் வேறொரு ஆளாகிவிடுவார். கண்கள் பரக்குப்பரக்கென்று விழிக்கவாரம்பித்துவிடும். மேளச்சத்தத்திற்கு உருவேறி ஆடுபவரின் முகபாவம் தொற்றிவிடும். அள்ளிக் குளித்துவிட்டு மொட்டைத் தலையுட்பட உடல் முழுவதும் பவுடரை அப்பிப் பூசியபடி சைக்கிளையும் எடுத்துக்கொண்டு கனசுதியாய் வெளிக்கிட்டாரென்றால், கவர்னரே வீட்டுக்கு வந்தாலும் கால்தரித்து நிற்கமாட்டார். அப்படியொரு வேகம். கேற்றுக்கு வெளியில் நின்று சிநேகிதப்பேய் கூப்பிடுமாப்போல ஒரே பார்வையோடு ஒரே இலக்கை நோக்கிப் போவார். போகும்போது அவர்தான் சைக்கிளைக் கொண்டுபோவார். திரும்பி வரும்போது சைக்கிள் அவரைக் கொண்டுவரும். ஆகிலும் கைவறண்டு போகிற நாட்களில் சைக்கிள் சாராயக்கடைக்காரரின் வீட்டில் சார்த்திவைக்கப்பட்டிருக்கும். சைக்கிள் அடைவில் இருக்கும் இரண்டு நாட்களும் அன்னபாக்கியம் மாமியின் முறைப்புக்குப் பயந்து தோட்டத்துக்குள்ளேயே நாள் முழுவதும் குந்திக்கொண்டிருப்பார். இரண்டொரு நாட்களில் மாமி கத்திக் குளறி சண்டை பிடித்து யாரிடமாவது காசு கொடுத்தனுப்பி சைக்கிளை மீட்டுவரச் செய்வா.

மணியம் மாமா குடிக்கப் போகும்போது அவரது வீட்டுப் பூனைகூட அவரைக் கவனியாது. குடித்துவிட்டுத் திரும்பிவரும்போது ஊரே அமர்க்களப்படும். தெரு நாய்களெல்லாம் சேர்ந்து கோரஸாகப் பாடும். இவர் ‘அடிக்… அடிக்…’என்று அடிக்கொரு தடவை நாய்களை வெருட்டியபடி தெருவெல்லாம் காறித்துப்பிக்கொண்டே வருவார். பத்தாததற்குப் பாட்டு வேறு. பெரும்பாலும் ‘பல்லாக்கு வாங்கப்போனேன் ஊர்வலம் போக… நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக’என்ற பாட்டு கதறிக் கதறி ஓடக்கூடிய அளவுக்கு அதைக் ‘கதைத்துக் கதைத்து’தேய்த்துவிட்டார். வேலிகளும் அவரும் கடுஞ் சிநேகிதம். எங்கள் ஊர் ஒழுங்கைகள் அகலம் குறைந்தவை. இந்த வேலியில் முட்டி அந்த வேலியில் கொஞ்சி கனகுதூகலத்தோடு வெகுநேரமாக வீடுதிரும்பிக்கொண்டிருப்பார். தெருநாய்களுக்கு அவரது பாட்டுப் பிடிப்பதில்லை. அதனால், அவை குரோதத்தோடு எதிர்ப்பாட்டுப் பாடுவது வழக்கம். சிலவேளை அவர் தேய்ந்துபோன ‘ரெகார்ட்’ போல ஒரே பாட்டைத் திருப்பித் திருப்பிப் பாடியது பிடிக்காமலிருந்திருக்கும்.

திருகோணமலையிலை தொடங்கிற குறுக்கு வழி இஞ்சைதான் வந்து முடியுது”என்று அவர் ஈரம் சொட்டச் சொட்ட நின்ற நிலையில் சொல்லியிருக்கிறார். தூக்கிவிட்ட பெடியங்கள் கோபித்துக்கொண்டு போய்விட்டார்களாம்.


மணியம் மாமா மிதமாகக் குடித்திருக்கும்போது ஒருமாதிரியும் அதிகமாகக் கவிழ்த்து ஊற்றியிருந்தால் வேறொரு மாதிரியும் நடந்துகொள்வார். அவரது உடலுக்குள் அன்றைக்கு எவ்வளவு சாராயம் ஊற்றப்பட்டிருக்கிறதென்பதைப் பொறுத்து அன்னபாக்கியம் மாமியின் இரவுகள் அமையும். நீங்கள் கனக்க கற்பனை செய்யக்கூடாது. அளவாகக் குடித்திருந்தால் அன்னபாக்கியம் மாமி தெய்வமாகிவிடுவா. ‘நீ என்ரை தெய்வம்’என்பார். ‘நீ இல்லாட்டி நான் எப்பவோ செத்துப்போயிருப்பன்’என்று வாய்கோணி அழுவார். குடிவெறியில் அழும்போது மூக்கு இன்னும் பெரிதாக விடைத்துவிடும். கடைவாயால் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ‘சரியப்பா… சாப்பிட்டிட்டுப் படுங்கோ… படுங்கோ…’என்று மாமி எழுபத்தேழாவது தடவையாகச் சொல்வது அந்த இரவில் எங்கள் வீடுவரைக்கும் கேட்கும்.

மணியம் மாமாவைச் சாராயம் குடித்திருக்கும் நாட்களில் அவர் கொம்பேறிமூர்க்கனாகிவிடுவார். வஞ்சகமில்லாமல் அன்னபாக்கியம் மாமியையும் பிசாசாக்கிவிடுவார். ‘எடியேய்….’என்று அழைத்து தூஷணங்களை ‘இந்தா பிடி’என்பதாய் அள்ளிச்சொரிவார்.

“நீ அண்டைக்கு என்ன சொன்னனீ…” திடீரென்று ஞாபகம் வந்தாற்போல கேட்பார்.

“என்ன சொன்னனான்?”-இது மாமி

“என்ன சொன்னனி எண்டதுகூட மறந்துபோச்சோ… அவ்வளவு கொழுப்பாடி உனக்கு”

கடைசிவரையில் மாமி என்ன சொன்னவா என்பதை அவருஞ் சொல்லமாட்டார். மாமியும் கேட்கமாட்டா.

‘இண்டைக்கு என்ன கிழமை?’என்று பதினைந்து தடவையாகிலும் கேட்பார். அப்படிக் கேட்பதைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ‘இவர் நாளைக்கு விடிய வேலைக்கு எழும்ப வேண்டிய ஆள்’என்று நிச்சயம் நினைக்கத்தோன்றும். மாமி மூன்று தடவைக்கு மேல் பதில் சொல்ல மாட்டா. அவரது கேள்வி இடுப்பிலிருக்கும் சறத்தைப் போல அனாதையாகக் கிடக்கும். “பொக்கற்றுக்குள்ள அறுபத்தாறு ரூபா முப்பத்தைஞ்சு சதம் இருக்கு”என்பார் கவனமாக. எண்ணிப்பார்த்தால் சரியாகத்தானிருக்கும். அதிலெல்லாம் ஆள் வலுநிதானம்.

மாமா ஊருக்கு வெளியில் தீர்த்தமாடப் போகும் நாட்களில் பெரும்பாலும் அவர் குழந்தையாகிவிடுவார். யாராவது போய்த் தூக்கிக் கொண்டுதான் வரவேண்டும். தூக்கிக்கொண்டு வந்து விறாந்தையில் கிடத்தும்வரை கண்ணை மூடிக்கொண்டிருப்பார். தனது விறாந்தைச் சூடு தனியாக அவருக்குத் தெரியும் போலும். கிடத்தியவுடன் கண்ணைத் திறந்து மாமியைப் பார்த்து குழந்தைகளுக்கேயுரிய தெய்வீகப் புன்னகை ஒன்றை வழியவிடுவார். மாமி தனது தலையெழுத்தை நொந்து தலையிலடித்துக்கொள்வா.

அவருக்கு எப்போதோ செத்துப்போன தனது தாயின் ஞாபகம் திடீரென வந்துவிடும். விம்மி விம்மி அழுவார். தங்கச்சிமார் ஞாபகம் பொங்கிப் பொங்கி வரும். ‘உன்னைப் போய்க் கட்டினன் நாயே…நாயே’என்று வீட்டுக்குள்ளேயே காறித்துப்புவார். வாசலில் படுத்திருக்கும் சீசர் நாய்க்குத் தெரியும்… அவர் தன்னைச் சொல்லவில்லையென்று. அதனால், அது மாமியை ஒரு கண்ணை உயர்த்திப் பார்த்துவிட்டுப் பேசாமல் (குரைக்காமல்) படுத்திருக்கும். முப்பது கிலோவுக்கு மேலிருக்கும் சீசரைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சுவார். ‘என்னை யாராவது விடுவிக்கமாட்டீர்களா?’என்பதான பரிதாபப் பார்வையோடு சீசர் அவரது மடியில் பொதுக்கென்று அமர்ந்திருக்கும். மாமிக்குத் தன்னை அவர் ‘நாய்’என்று விளிப்பது பிடிக்காது. வாயை வைத்துக்கொண்டிராமல் பதிலுக்கு ஏதாவது சொல்லிவிடுவா. பிறகென்ன… மணியம் மாமா கெம்பிக் கிளம்பிவிடுவார். தும்புத்தடியை எடுத்துக்கொண்டு அடிக்க ஓடுவார். பிள்ளைகள் இப்போது அரங்கத்திற்கு வந்தாகவேண்டும். அவர் அடிக்கத் தூக்கிக்கொண்டு போகும் பொருட்களை அவர்கள் வாங்கி வாங்கி ஓரிடத்தில் வைப்பார்கள். இவரும் கொடுத்துக்கொண்டேயிருப்பார். செருப்பு, தும்புத்தடி, கதிரை, கோப்பை, ஈசிச்செயார் தடி இப்படிச் சில ஆயுதங்கள் விறாந்தையில் ஓரிடத்தில் குவிந்து கிடக்கும். பாசுபதாஸ்திரத்தை ஒருமுறைக்குமேல் பிரயோகிக்க மாட்டேன் என்று யாருக்கோ யாரோ சத்தியம் செய்துகொடுத்ததுபோல இரண்டாந் தடவை அவர் அந்தப் பொருட்களை அடிப்பதற்காகப் பிரயோகிக்கமாட்டார். மணியம் மாமா வீட்டு அமளிகளை றேடியோவில் ‘இரவின் முடிவு’ பாடல்களைக் கேட்பதுபோல நாங்கள் கேட்டுக்கொண்டு படுத்திருப்போம். அவர் சன்னதம் முற்றி அந்த இரவில் வீட்டை விட்டு வெளிக்கிட்டு வீதிக்கு ஓடமுயலும் தருணங்களில் மட்டும் எங்களது வீட்டிலிருந்து யாராவது ஒரு ‘ஆம்பிளை’ மணியம் மாமாவைப் பிடித்துவரப் போகும் பிள்ளைகளுக்குத் துணையாக, ‘இந்தாளுக்கு வேறை வேலையில்லை’என்று புறுபுறுத்துக்கொண்டு வெளியே போவார்.

விடிந்ததும், ‘இந்த மனிதரா இரவு இப்படிச் சன்னதமாடியது?’என்று வியக்கும்படியாக முன் விறாந்தையில் அமர்ந்து ஆங்கிலப் புத்தகங்களிலொன்றை ஏந்திப் படித்துக்கொண்டிருப்பார். உண்மையிலேயே அவருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும். ஊரிலுள்ளவர்களுக்கு காசு வாங்காத மொழிபெயர்ப்பாளராகவும் அவரே இருந்துவந்தார். அப்படியான நாட்களில் நாங்கள் பச்சை மிளகாய், வெங்காயம் கேட்டு வேண்டுமென்றே மணியம் மாமா வீட்டுக்குப் போவோம். போர்க்களம் முடிந்த அடுத்தநாள் மாமாவின் முகத்தைப் பார்க்காமல் தேத்தண்ணிக் கோப்பையைக் கொண்டுவந்து டங்கென்று ஓசையெழ வைத்துவிட்டு மாமி விறுக்கென்று போவா. மணியம் மாமா கண்சிமிட்டிக்கொண்டே எங்களிடம் கேட்பார்:

“தேத்தண்ணி ஏன் பிள்ளை இப்பிடிக் கொதிக்குது”

நாங்கள் மாமியைப் பார்த்துச் சிரிப்போம். அவவுக்கும் கொடுப்புக்குள் சிரிப்பு பொத்துக்கொண்டு வருவது தெரியும். எங்களுக்கு மட்டும் தெரியும்படியாக இரகசியமாக ஒரு புன்னகையை வீசுவா. மாமாவின் பக்கம் திரும்பும்போது மட்டும் கெருடன் பார்வையை எறிந்துவிட்டுப் போவா. மணியம் மாமா மிகுந்த நகைச்சுவை உணர்ச்சி உடையவர். அது அவ்வப்போது வெளிப்படும். அதிலும் மாமி கோபமாக இருக்கும்போது கிண்டுவதென்றால் அவருக்கு தொதல் சாப்பிடுவதுமாதிரி.

“இந்த மணிக்கூடு இண்டைக்கு ஒரே சத்தமாக் கிடக்கு. பற்றியைக் கழட்டி வைக்கவேணும்”

திருகோணமலையில் இருந்த தனது சொந்தக்காரர் ஒருவரைப் பார்க்கப் போன மாமா சில நாள் கழித்து அம்மன் கோயிலடிக் கிணற்றுக்குள்ளிருந்து வெளிப்பட்ட கதை ஊருக்குள் பிரசித்தம். இரவு நேரம் கிணற்றுக்குள் யாரோ விழுந்த சத்தம் கேட்டு வயலுக்குள் நின்ற சில பெடியள் ஓடிப்போய்ப் பார்த்தார்கள். யாரோ தண்ணீருக்குள் கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருந்தது தெரிய குதித்து மீட்டிருக்கிறார்கள். மேலே கொண்டு வந்து பார்த்தால்…. அது மணியம் மாமா.

“மணியத்தார் நீங்கள் திருகோணமலைக்கெல்லோ போனனீங்கள்… திடீரெண்டு கிணத்துக்குள்ளாலை இருந்து வாறியள்?”என்று தூக்கிய பெடியங்களில் ஒருவன் கேட்டிருக்கிறான்.

“திருகோணமலையிலை தொடங்கிற குறுக்கு வழி இஞ்சைதான் வந்து முடியுது”என்று அவர் ஈரம் சொட்டச் சொட்ட நின்ற நிலையில் சொல்லியிருக்கிறார். தூக்கிவிட்ட பெடியங்கள் கோபித்துக்கொண்டு போய்விட்டார்களாம்.

“என்ன நடந்தது மாமா?”நாங்கள் கேட்டோம்.

“லேற்றாத்தான் பஸ் கிடைச்சுது. வழியிலை இறங்கித் ‘தேத்தண்ணி’குடிச்சனான். சந்தியிலை இறங்கி குறுக்குவழியாலை வீட்டை போவமெண்டு வந்தால் இருந்தாப்போலை ‘பாக்’தோளிலை கொழுவினபடி இருக்க தண்ணிக்குள்ளை போய்க்கொண்டிருக்கிறன். இருட்டு.. வழியிலை கொஞ்சம் மாட்டி வேற போட்டன்… அறுவார் கிணத்துக்கு கட்டும் கட்டேல்லைப் பிள்ளை”

செருப்பு, தும்புத்தடி, கதிரை, கோப்பை, ஈசிச்செயார் தடி இப்படிச் சில ஆயுதங்கள் விறாந்தையில் ஓரிடத்தில் குவிந்து கிடக்கும். பாசுபதாஸ்திரத்தை ஒருமுறைக்குமேல் பிரயோகிக்க மாட்டேன் என்று யாருக்கோ யாரோ சத்தியம் செய்துகொடுத்ததுபோல இரண்டாந் தடவை அவர் அந்தப் பொருட்களை அடிப்பதற்காகப் பிரயோகிக்கமாட்டார்

“மாமியைக் காதலிச்சா கலியாணம் கட்டினனீங்கள்?”ஒருநாள் கேட்டுவைத்தோம்.

“அதையேன் கேக்கிறாய் பிள்ளை…”என்று ஆரம்பித்து கதைகதையாகச் சொன்னார்.

“நான் ஒருநாள் இரவு இவையின்ரை வீட்டு ஓட்டைப் பிரிச்சு இவ படுத்திருந்த அறைக்குள்ளை இறங்கீட்டனெல்லோ…” சாகசம் செய்துவிட்ட பெருமிதம் விழிகளில் மிளிரச் சொன்னார்.

“மாமி பயந்துபோய்க் கத்தேல்லையா?”

“அவவேன் கத்திறா… சத்தம் போடப் போன தங்கச்சியாரையும் ‘அது கொத்தானடி’எண்டு சொல்லி அடக்கின ஆளெல்லோ”

மாமியின் சுருக்கம் விழுந்த முகத்தில் அப்படியொரு வெட்கம் வந்துவிடும். முகம் கனிந்த பழம் போலாகிவிடும். அத்தகைய பொன் பொழுதுகளில் மாமியைப் பார்க்கும் மாமாவின் கண்களில் காதலானது ‘பென்சன்’ நாளன்றைய சாராயம்போல பெருக்கெடுத்தோடும். அந்த வயதான காலத்திலும் அவர்கள் ஒருவர் மீதொருவர் அவ்வளவு காதலோடிருந்தார்கள். மாமா அளவுக்கதிகமாகக் குடித்துவிட்டுச் சாப்பிடாமல் படுக்கும் நாட்களில் மாமி அவருக்கு அருகில் அமர்ந்திருந்து பச்சை முட்டையை உடைத்து உடைத்து மாமாவின் வாயில் ஊற்றிக்கொண்டிருப்பாவாம்… கடைவாயால் முட்டை வழிய அவர் அடுத்த நாளுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருப்பாராம் என்று அவர்களது பிள்ளைகள் சிரித்தபடி சொல்வார்கள்.

இழந்துபோனோம். எல்லாவற்றையும்… எல்லோரையும்… ஞாபகங்கள் மட்டுந்தான் மிச்சம்.

பெயர்ந்து பெயர்ந்து பெயர்ந்து இடைத்தங்கிய ஊரொன்றின் வீட்டில், கண்ணிக்குத் தப்பி விதை பொறுக்கும் பறவையென இரகசியமாகப் போய் நிற்கும் நாட்களில் இரவுகளில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்கும். இராணுவம் ரோந்து போவது மனக்கண்ணில் தெரியும். மணியம் மாமா நினைவில் வருவார். இருளடர்ந்த வீதிகளில் அவரது சைக்கிள் அந்த வேலிக்கும் இந்த வேலிக்குமாக உலாஞ்சுகிற காட்சி விரியும். கதைப்பதுபோல கரகரத்த குரலில் அவர் பாடுவது கேட்கும்.

“பல்லாக்கு வாங்கப் போனேன் ஊர்வலம் போக
பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக”

பல்லாக்குகளெல்லாம் பாடையில் போகுமென்று யார் கண்டது?

-தமிழ்நதி

ஈழநேஷன்

Read more...

BBC தமிழோசை

மீனகம்

தமிழ் அரங்கம்

அலைகள்

Nankooram

நெருடல்

About This Blog

Velupillai Prabhakaran

The rest of the world might never understand the violence Velupillai Prabhakaran stood for, but its imprint on Sri Lanka is wide and deep. For 26 years, the elusive leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) had waged war with the government to win an independent homeland, or eelam, for the island's Tamil minority. The struggle claimed more than 70,000 lives--including, on May 18, Prabhakaran's. The government says he was killed, along with 17 of his trusted lieutenants, while fleeing an army ambush.

Prabhakaran, 54, was born to a middle-class family on the Jaffna Peninsula. Incensed by discrimination against Tamils and radicalized by a militant grade-school teacher, Prabhakaran founded the LTTE in 1976, a year after a group he headed claimed responsibility for killing Jaffna's mayor. By 1983 the guerrilla movement--which pioneered suicide bombings and the recruitment of child soldiers--escalated the fighting into a civil war.

At the height of his power earlier this decade, Prabhakaran led a de facto government that controlled vast swaths of territory and boasted its own systems of taxes, roads and courts. As the army closed in, he allegedly used thousands of Tamil civilians as human shields. By the final days, just 250 LTTE members remained. They died too, along with the dream of eelam.

Blog Archive

சினிமா தகவல்கள்

வீரகேசரி இணையதள செய்தி தலைப்புகள்

Puthinam

அதிர்வு இணையதள செய்தி தலைப்புகள்

குளோபல் தமிழ் இணையதள செய்தி தலைப்புகள்

சங்கதி இணையதள செய்தி தலைப்புகள்

கூகிள் இணையதள செய்தி தலைப்புகள்

Thatstamil - தற்ஸ்தமிழ்

தமிழ்செய்தி இணையம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ Scroll to Top