இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் அண்மையில் பிரகடனப்படுத்தியிருந்த பாதுகாப்பு வலயத்திற்கு அடுத்து அமைந்துள்ள முள்ளிவாய்க்கால், கரையான் முள்ளிவாய்க்கால், வெள்ளாம்முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே உக்கிர சண்டைகள் தொடர்ந்து நடைபெறுவதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, இந்தப் பகுதியில் இராணுவத்தினர் நேற்றையதினம் ஏற்படுத்தியிருந்த பாதுகாப்பான பாதை வழியாக கடந்த 48 மணித்தியாலங்களில் ஆறாயிரம் பொதுமக்கள் இராணுவத்தினரிடம் வந்து சேர்ந்திருப்பதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதனைவிட சுமார் 10 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் இராணுவத்தினரிடம் வந்து சேர்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்துநிற்பதாக இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.
இதேவேளை, இன்று மாலை கரையான்முள்ளிவாய்க்கால் பகுதியை இராணுவத்தினர் விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றியிருப்பதாகவும், இந்தப் பகுதியில் விடுதலைப்புலிகள் தடுத்து வைத்திருந்த 1400க்கும் மேற்பட்ட பொதுமக்களை இராணுவத்தினர் மீட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கி்ன்றது.
இராணுவத்தின் 58 மற்றும் 59 ஆம் படைப்பிரிவுகளைச் சேர்ந்த படையணிகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதியில் எதிரெதிர் முனைகளில் முன்னேறி வருவதாகவும், இரு படைப்பிரிவுகளும் சுமார் 2கிலோ மீற்றர் தொலைவு இடைவெளியில் இருப்பதாகவும், விடுதலைப்புலிகளின் பலத்த எதிர்த்தாக்குதல்களுக்கு மத்தியிலும் இரண்டு படைப்பிரிவுகளும் விரைவில் இணைந்து கொள்ளவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.
வெள்ளாம்முள்ளி்வாய்க்கால் பகுதியில் விடுதலைப்புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு விமான எதிர்ப்புப் பீரங்கிகளும் கனரக துப்பாக்கிகள் தானியங்கி துப்பாக்கிகள் உட்பட பல ஆயுதத் தளபாடங்களையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
நேற்றும் இன்றும் நடைபெற்ற உக்கிர சண்டைகளில் டசின் கணக்கான விடுதலைப்புலிகளின் சடலங்களையும் ஆயுதத் தளபாடங்களையும் பல இடங்களிலும் இராணுவத்தி்னர் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பல முனைகளில் அந்தப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், அங்கு இயங்கி வந்த ஒரேயொரு மருத்துவமனையாகிய முள்ளிவாய்க்கால் மருத்துவமனையும் செயலிழந்துள்ளதாகவும், இதனால், காயமடைந்தவர்கள் பலரும் பராமரிப்பின்றி இருப்பதாகவும் பெரும் அவல நிலை அங்கு ஏற்பட்டிருப்பதாகவும் உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
'கடற்புலி தளபதி சூசை குடும்பம் பிடிபட்டது'
இதற்கிடையே கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசையின் குடும்பத்தினரை இரண்டு உறவினர்களோடு, படகு ஒன்றில் தப்பிச் சென்ற போது கடற்படையினர் கைது செய்திருப்பதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார். சூசை அவர்களின் மனைவி சத்தியதேவி, மகன் சுரேஷ், மகள் மதி இவர்களுடன் அவரது மைத்துனி மற்றும் அவரது மகன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் ஆறு லட்ச ரூபா ரொக்கப்பணமும், ஒரு தொகை தங்க நகைகளும் இருந்ததாகவும் கடற்படை தெரிவித்திருக்கின்றது,
இது இவ்விதமிருக்க, முள்ளிவாய்க்கால் பகுதியில் தொடரும் கடும் சண்டைகள் காரணமாக மோதல் பகுதிக்கான தமது மனிதாபிமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக அனைத்துலக செஞ்சிலுவைக்குழு அறிவித்திருக்கின்றது.
மோதல் நிலைமை காரணமாக அந்தப்பகுதியில் சிக்கியுள்ள காயமடைந்தவர்களை மீட்பதற்கும் இந்தப் பகுதி மக்களுக்கான உணவு விநியோகப் பணிகளையும் கடல் வழியாக தம்மால் மேற்கொள்ள முடியாதிருப்பதாகவும் அனைத்துலக செஞசிலுவைக்குழு கூறியிருக்கின்றது.
மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் காயமடைந்தவர்களும், நோயாளிகளுமாக 800 பேர் வரையில் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உரிய மருத்துவ சிகிச்கையளிக்கப்பட வேண்டியவர்களாக இருப்பதாகவும் அனைத்துலக செஞ்சிலுவைக்குழு குறிப்பிட்டிருக்கின்றது,
BBC Tamil
Read more...