நடிகர் சங்கம் தீர்மானம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்ததாகவும், அந்த வாக்குமூலத்தில் அவர் சில நடிகைகளின் பெயரைச் சொல்லி அவர்களும் விபச்சாரம் செய்கிறார்கள்; அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் ஒரு நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டது.
இது திரையுலகத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையட்டி நடிகர் சங்கத்தில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பிறகு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் போலீஸ் கமிஷனரை சந்தித்து நடிகர், நடிகைகள் புகார் மனு கொடுத்தார்கள். பிறகு நடிகர் சங்கத்தில் கண்டனக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று நடிகர் சங்க வளாகத்தில் உள்ள சங்கரதாஸ் சாமிகள் கலையரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராதாரவி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி, செயலாளர் காட்ரகட்ட பிரசாத், தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன், துணை தலைவர் காஜா மைதீன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், செயலாளர் ஜி.சிவா, விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன், இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பி.ஆர்.ஓ சங்கத் தலைவர் விஜயமுரளி, ஜனநாயக மாதர் சங்கத் தலைவி வாசுகி, சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீமன் சீனிவாசன், நாசர், சேரன், விக்ரமன், எஸ்.வி.சேகர், பொன்வண்ணன், மனோபாலா, தாமு, ரமேஷ் கண்ணா, கே.ராஜன், ஊர்வசி, ரோகினி, சார்லி, அருண் விஜய் உட்பட பலர் பேசினார்கள்.
பரத், முரளி, கரண், எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, ஹரிகுமார், கலைப்புலி தாணு உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
நடிகர்கள் கிள்ளுக்கீரை அல்ல
விஜயகாந்த் பேசியதாவது:
செய்தி வெளியிட்ட பத்திரிகையே மறுநாள் மறுப்பும் வெளியிட்டிருக்கிறது. பத்திரிகை தர்மம் என்பது இரு பக்கமும் கேட்டு வெளியிட வேண்டும். பத்திரிகைகள் பெருகிவிட்டதால், செய்தியை முதலில் வெளியிட வேண்டும் என்பதற்காக ஆராயாமல் வெளியிடுகிறார்கள். முதல் நாள் பெரிதாக வருகிற செய்தி, மறுநாள் சிறிதாக வருகிறது. பத்திரிகை தர்மம் போல காவல்துறைக்கும் கட்டுப்பாடு வேண்டும். செய்திகளை அவசரப்பட்டு வெளியிடக்கூடாது.
நடிகர் சங்கம் கட்டுக்கோப்பான சங்கம். அது முடிவெடுத்தால் அதன் சக்தி பலமானதாக இருக்கும். நடிகர் சங்கம் மனது வைத்தால் எதையும் சாதிக்க முடியும். நடிகர்கள் ஒன்றும் கிள்ளுக்கீரை இல்லை. அவர்களுக்கும் மனசு இருக்கிறது. குடும்பம் இருக்கிறது. மதித்து எழுதவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவதூறு செய்தி படித்து கோபத்தில் இருக்கிறேன்
ரஜினி ஆவேசம்
கூட்டத்தில் கலந்து கொண்டு ரஜினி பேசியதாவது:
நான் கோபமாக இல்லாவிட்டால் நிறைய பேசுவேன். கோபமாக இருந்தால் குறைவாகப் பேசுவேன். ரொம்ப கோபமாக இருந்தால் பேசவே மாட்டேன். இன்று ரொம்ப கோபமாக இருக்கிறேன். இருந்தாலும் சில கருத்துக்களைப் பதிவு செய்வதற்காகப் பேசுகிறேன்.
எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் எந்த பெண்ணை கைது செய்து அழைத்துச் செல்லும்போதும் அவர்களை நிற்க வைத்து, தலைகுனிய வைத்து, அதை மறைத்து போட்டோ எடுத்து போடாதீர்கள். அவர்கள் ஜாலிக்காகவா தவறு செய்கிறார்கள். ரெண்டு வேளை சோத்துக்காக. அவர்கள் போட்டோவை மட்டும் போடுகிறீர்கள். அவர்களோடு சென்றவர்களையும் எடுத்து போட வேண்டியதுதானே. தப்பு செய்தவர்களுக்காகவே இவ்வளவு பேசுகிறேன். ஆனால், தப்பே செய்யாத இன்று மிகப்பெரிய அந்தஸ்தோடும், மதிப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் நண்பர்களைப் பற்றிய செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். ஒருவேளை ஏப்ரல் ஒண்ணாம் தேதியாக இருக்குமோ என்று நினைத்தேன். இப்படியா? நிஜமாகச் சொல்கிறேன். அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை.
ஸ்ரீப்ரியா, மஞ்சுளா, நளினி, சீதா எவ்ளோ பெரிய கலைஞர்கள். உங்களை பற்றி உங்களை பெற்றவர்களுக்கும், கணவனுக்கும், குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும் எங்களுக்கும் தெரியும், நீங்கள் எப்படி என்று. அதனால் இவர்கள் எழுதுவதை விடுங்கள்.
சம்பந்தப்பட்ட பத்திரிகை துணை ஆசிரியரை கைது பண்ணிவிட்டதாகச் சொன்னார்கள். அதற்கு முயற்சி எடுத்த முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் ரொம்ப கோபமா இருக்கேன். நன்றி. இவ்வாறு ரஜினி பேசினார்.
நடிகர் சங்கம் தீர்மானம்
நடிகைகளை பற்றி அவதூறாக எழுதிய நாளிதழை முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சென்னையில் நேற்று நடந்த தென்னிந்திய நடிகர் சங்க கண்டன கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
* நடிகை புவனேஷ்வரி காவல்துறையினரிடம், நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பற்றி தவறாக கூறியதாகவும், காவல் துறையினர் பத்திரிகைகளிடம் அதை கூறியதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் இப்படிப்பட்ட செய்தியை அளிக்கவில்லை என்றால், காவல்துறை பற்றி பொய்யான செய்தியை பரப்பிய, சட்டம் ஒழுங்கு துறையை களங்கப்படுத்திய நாளிதழின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, அந்த பத்திரிகைக்கு தடை விதிக்க வேண்டும்.
* தவறாக விமர்சிக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் அனைவரும் அந்த நாளிதழ் மீது தனித்தனியாக மான நஷ்ட வழக்கு தொடருவது.
* தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இன்று முதல் அந்த நாளிதழுக்கு ஆதரவு அளிக்க கூடாது.
* திரையுலகினரையும் அவர்களது குடும்பத்தினரையும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி பெண்களை இழிவுபடுத்திய அந்த நாளிதழை ஏன் தடை செய்யக்கூடாது என்று பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா நிறுவனத்திடம் புகார் அளிப்பது.
* திரையுலகின் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அந்த நாளிதழை அழைக்கக் கூடாது, அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது, திரையுலகத்தை சார்ந்த அனைத்து அமைப்புகளிடமும் இதற்கு ஆதரவு கோருவது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




0 விமர்சனங்கள்:
Post a Comment